மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் பெரிய வரம் எது?

`நம் எல்லோரிடமுமே பச்சாதாபப்படும் குணம் இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். என்ன… அதை வெளிப்படுத்தத்தான் போதுமான தைரியம் இல்லை’ – இப்படிக் குறிப்பிடுகிறார் அமெரிக்கக் கவிஞரும் மனித உரிமைப் போராளியுமான மாயா ஏஞ்சலோ (Maya Angelou). மற்றவர்களின் மனமறிந்து நடப்பது, பிறருக்காக இரக்கப்படுவது என்பது மனிதர்களுக்குக் கிடைத்திருக்கும் மாபெரும் வரம். மற்றவர்களுக்காகப் நாம் இரங்கும்போது, அவர்களின் எதிர்மறை சக்தி விலகி, பாசிட்டிவ்வான சக்தி அவர்களை ஆட்கொள்ளுகிறது. `நமக்காக இரக்கப்படவும், நம்மை நினைத்துப் பார்க்கவும் ஒரு ஜீவன் இருக்கிறது’ என்கிற எண்ணமே பெரிய பலத்தை அவர்களுக்குக் கொடுத்துவிடும். பெரும் துன்பத்திலிருப்பவர்களைத் தேற்றுவதற்காக உச்சரிக்கப்படும் ஆயிரம் வார்த்தைகளைவிட, பரிவான ஒரு தொடுகை அவர்களைத் தெம்பாக்கிவிடும். இன்றைக்கு விடிகிற ஒவ்வொரு நாளுமே நம்மைக் கிறுகிறுக்கவைக்கிற மாயசக்தியாக மாறிவிட்டது. எது இலக்கு, எது வாழ்க்கை என்பதறியாமல் எதையோ தேடி, எங்கெங்கோ ஓடிக்கொண்டிருக்கும் மனிதர்களில் நாமும் ஓர் அங்கமாகிவிட்டோம். நெருங்கிய உறவுகளிடம்கூட ஆர, அமர உட்கார்ந்து பேச முடியாதபடிக்கு ஒரு பக்கம் நம்மை முடக்கிப் போட்டுவிட்டு, வேறொரு பக்கம் பரபரபரக்கவைத்து இழுத்துக்கொண்டு ஓடுகிறது வாழ்க்கை. இந்தச் சூழலில் இந்தக் கதை உணர்த்தும் செய்தி அவசியமான ஒன்று.

மாலை நேரம்

மாலை நேரம். அமெரிக்காவிலிருக்கும் பிரபல பூங்கா… ஃப்ரெடரிக், தன் பாட்டியோடு அங்கே வந்திருந்தான். அவனுக்கு 12 வயது. “என்ன ஃப்ரெடரிக்… வந்ததுலருந்து பார்க்குறேன். என்னமோ மாதிரி இருக்கியே! போ உன் ஃப்ரெண்ட்ஸுகளோட ஏதாவது விளையாடு!’’ என்றார் பாட்டி.

அவன் பேசாமலிருந்தான்.

“என்ன… உடம்பு ஏதாச்சும் பண்ணுதா?’’

பாட்டி, அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தார்.

“அதெல்லாம் இல்லை பாட்டி.’’

அதற்குப் பிறகு பாட்டி பேசவில்லை. அவனுக்கு அம்மா நினைவு வந்திருக்கும் என்று அவராக நினைத்துக்கொண்டார்.

ஃப்ரெடரிக்கின் அப்பா பிசினஸ்மேன். அம்மா, ஒரு விளம்பர நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பிலிருந்தார். இருவருக்கும் ஃப்ரெடரிக்கைப் பார்த்துக்கொள்ள நேரமில்லாததால், பாட்டி வீட்டில் அவனை விட்டிருந்தார்கள். பாட்டி வீட்டில் எல்லா வசதிகளும் இருந்தன. சமைத்துப் போட, வீட்டைப் பராமரிக்க, அவனுக்கு வேண்டியதைத் தர… எல்லாவற்றுக்கும் பணியாட்களை அமர்த்தியிருந்தார் ஃப்ரெடரிக்கின் அப்பா. எப்போதாவது நினைத்தாற்போல் அம்மாவும் அப்பாவும் அவனைப் பார்க்க வருவார்கள். `ஹாய் டியர்…’ என்று அவனை வாரி அணைத்து முத்தமழை பொழிவார் அம்மா. அப்பா, அவனுக்காகக் கொண்டு வந்திருக்கும் கிஃப்ட் மூட்டையை விரிப்பார்; தின்பண்டங்களைக் கொடுப்பார்.

`ம்… படிப்பு எப்படிப் போய்க்கிட்டிருக்கு?’, `ஸ்கூல்ல ஒண்ணும் பிரச்னை இல்லையே!’, `பாட்டியம்மா தினமும் கதை சொல்றாங்களா?’, `உனக்கு வேற ஏதாவது வேணுமா?’, `நேரத்துக்குச் சாப்பிடணும்’… இப்படி வழக்கமான சில விசாரிப்புகளை முன்வைப்பார்கள். `அடுத்த வாரம் கண்டிப்பா வர்றோம் செல்லம்!’ என்று சொல்லிவிட்டு, இருவரும் ஃப்ரெடரிக்குக்கு முத்தம் கொடுப்பார்கள். கிளம்பிவிடுவார்கள். ஒருநாள்கூட அவனோடு தங்கியதில்லை. அதற்கெல்லாம் அவர்களுக்கு நேரமிருந்ததில்லை. அவன், பாட்டி வீட்டுக்கு வந்து இரண்டு வருடங்களாகின்றன. ஆரம்பத்தில் `அம்மாவை மிஸ் பண்ணுகிறோமே’ என்று அவன் வருந்தியதும் உண்டு. ஆனால், நாளாக ஆக அம்மாவோடு இருப்பதைவிட பாட்டி வீட்டில் இருப்பது எவ்வளவோ மேல் என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது. அம்மாவோடு இருந்தாலும் இல்லாதது மாதிரிதான். வேலை… வேலை… வேலை… அதைத் தவிர அம்மாவுக்கு வேறு நினைப்பில்லை. இரவில் அவன் சாப்பிட்டு முடித்து, உறங்கப் போகும் நேரத்தில்தான் அம்மா வருவார். அவன் அறைக்குள் வந்து நெற்றியில் முத்தமிட்டுவிட்டுப் போவார். வழக்கம்போலப் பரபரவென்று தொடங்கிவிடும் அடுத்த நாள். அங்கே அன்பைப் பரிமாறிக்கொள்ளவோ, பரஸ்பர விசாரிப்புகளுக்கோகூட நேரமிருந்ததில்லை.

பாட்டி

தனிமை… எல்லா வயதினரையும் கொல்லும் கொடிய நோய். பாட்டி, பேரன் இருவரையுமே அது பாதித்திருந்தது. பேரனின் உற்சாகம் பாட்டியையும் தொற்றிக்கொள்ளும். உண்மையில் பேரன் வந்த பிறகுதான் அந்த முதிய பெண்மணிக்கு வாழ்க்கையின் மேல் சிறு பிடிப்பு ஏற்பட்டிருந்தது. இன்றைக்கு அவன் என்னவோ போலிருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. மேலும் பேச்சுக் கொடுத்துப் பார்த்தார். அவன் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொல்லிக்கொண்டிருந்தான். பாட்டி பார்வையைச் சுழலவிட்டார். ஏதோ ஓரிடத்தில் கூட்டமாக நிறையப் பேர் நின்றிருப்பதைப் பார்த்தார்.

“ஃப்ரெடரிக்! அது என்ன கூட்டம்னு போய்ப் பார்த்துட்டு வாயேன்!’’

அவன் வேண்டா வெறுப்போடுதான் எழுந்து போனான். போனவன், ஓடி வந்தான். “பாட்டி… அங்கே… ஒரு ஓவியர் பசங்களுக்கெல்லாம் கன்னத்துல படம் வரைஞ்சுவிடுறார். நானும் வரைஞ்சுக்கவா?’’

“என்ன படம்?’’

“மானோட தலை, பூ, சூரியன், புலியோட காலு… விதவிதமா வரைஞ்சு விடுறாரு பாட்டி!’’

“அப்படியா… வா பார்ப்போம்.’’ பாட்டி எழுந்து கொண்டார். மெள்ள நடந்து கூட்டத்துக்கு அருகே போனார். ஃப்ரெடரிக் சொன்னதுபோலவே, ஓர் ஓவியர் ஒரு குழந்தையின் கன்னத்தில் ஓர் எலியின் தலையை வரைந்துகொண்டிருந்தார். அவர் வரைவதை வேடிக்கை பார்க்கக் கூட்டம் அதிகமிருந்ததே தவிர, வரைவதற்காக இரண்டு குழந்தைகள் மட்டுமே நின்றுகொண்டிருந்தார்கள். பாட்டி ஜாடை காட்ட, மூன்றாவது ஆளாக ஃப்ரெடரிக் நின்றுகொண்டான்.

ஓவியர் முன்னால் நின்றிருந்த இரண்டு குழந்தைகளின் கன்னத்திலும் பூ, பலூன் என்று வரைந்து முடித்தார். ஃப்ரெடரிக் ஆர்வத்தோடு அவர் முன்னே போய் நின்றான். தன் கன்னத்தை உயர்த்திக் காட்டினான். அந்த ஓவியர் பார்த்தார்.

சிறுவன்

“தம்பி… உன் முகம் முழுக்க புள்ளி புள்ளியா தழும்புகளா இருக்கேப்பா. இதுல வரைய முடியாதே!’’

பாட்டி முன்னே வந்தார். “சின்னதாக்கூட எதையாவது வரைய முடியாதா?’’ உடைந்துவிடும் குரலில் கேட்டார்.

“வரையறதுக்கு எங்கே இடம் இருக்கு மேடம்?’’

அவ்வளவுதான் ஃப்ரெடரிக்கின் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. அவன் விருட்டென்று அங்கிருந்து நகர்ந்து, தான் உட்கார்ந்திருந்த பெஞ்சுக்கு ஓடிப் போனான். பாட்டி முடிந்த வரை வேகமாக நடந்து அவனிடம் வந்தார்.

“ஃப்ரெடரிக் அழுறியா?’’

அவன் கண்ணைத் துடைத்துக்கொண்டு சொன்னான்… “இல்லை பாட்டி!’’

“உனக்கு ஒண்ணு தெரியுமா… நான் சின்னப் பொண்ணா இருந்தப்போ எனக்கும் உன்னை மாதிரியே முகத்துல தழும்புகள் இருந்துச்சு. இன்னொண்ணு சொல்றேன்… கேட்டுக்கோ…  முகத்துல இருக்குற தழும்புகள் அழகானது.’’

“நிஜமாவா?’’

“நிச்சயமா. அதைவிட அழகான இன்னொண்ணைச் சொல்லு பார்ப்போம்.’’

ஃப்ரெடரிக், பாட்டியின் முகத்தைத் தன் இரு கைகளாலும் ஏந்தினான். அவருடைய முகத்தை உற்றுப் பார்த்தான். பிறகு சொன்னான்… “சுருக்கம்.’’