சந்தியாவிற்கு மரணஅச்சுறுத்தல்- மன்னிப்புச்சபை கவலை!

சந்தியா எக்னலிகொடவிற்கு மரணஅச்சுறுத்தல் விடுப்பவர்களிற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவியும் பலவந்தமாக காணாமல்போனவர்களிற்காக குரல்கொடுப்பவருமான சந்தியா சமூக ஊடகங்களில் மரணஅச்சுறுத்தல்களையும்,துன்புறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொண்டுள்ளார் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

சந்தியா எக்னலிகொட எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல்கள் கடும்கவலையளிக்கின்றன என தெரிவித்துள்ள மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி  இயக்குநர் தினுசிகா திசநாயக்க அவரிற்கு ஆபத்தை ஏற்படுத்த முயல்பவர்களிற்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மனித உரிமை பாதுகாவலர்கள் தங்கள் முக்கியமான பணியை சுதந்திரமாகவும் அச்சமின்றியும் முன்னெடுப்பது அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர் மனித உரிமை பணியாளர்களை அச்சுறுத்துவதற்கும் துன்புறுத்துவதற்கும் எவருக்கும் உரிமையில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் நீதிக்காக அமைதியான வழிகளில் பிரச்சாரம் செய்யும் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கவேண்டிய கடமை இலங்கை அதிகாரிகளிற்கு உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ள தினுசிகா திசநாயக்க மனித உரிமை ஆர்வலர்கள் மீதான அச்சுறுத்தல் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டியது இலங்கையின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தங்களுக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரிகள் சந்தியாவை பாதுகாப்பதற்காக உரிய நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அது அவரின் மனித உரிமையை மீறிய விடயமாக அமையும் எனவும் தினுசிகா திசநாயக்க குறிப்பிட்டுள்ளார்.