மரணம் எங்கே தொடங்குகிறது?

இதயம், மூளையின் துடிப்பு ஆகியவற்றைச் சார்ந்தே உயிரின் லயம் உள்ளது. இந்த முடிவை மருத்துவத் துறையோடு இணைந்து இலக்கியம், கவிதை, தத்துவம் போன்றவை அங்கீகரிக்கின்றன. மரணம் நிகழ்ந்துவிட்டது என்பதை எந்த உடல் உறுப்பின் செயல் இழப்பிலிருந்து முடிவு செய்யலாம் என்பதையும் மருத்துவ அறிவியல்தான் கேட்கிறது.

உடலுறுப்பு மாற்று சிகிச்சைகளின் நடைமுறைகள் வெளிப்படையாக இருக்கும் பொருட்டு, மூளைச் சாவு நிகழ்வுகளை உறுதிப்படுத்தும் விதிமுறைகளைக் கடந்த மாதம் கேரள அரசு வெளியிட்டது. மருத்துவ அறிவியலில் ஏகப்பட்ட முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் (ஒருவேளை அதுவே காரணமாகவும் இருக்கலாம்) மருத்துவ ரீதியாகவும் அறநெறிகளின் அடிப்படையிலும் எந்தத் தருணத்தில் மரணம் ஏற்படுகிறது என்பதை முடிவு செய்வதில் தெளிவில்லாத சூழலே நிலவுகிறது.

இதயம் ரத்தத்தை உந்தித் தள்ளுவதை நிறுத்தும்போது மரணம் ஏற்படுவதாக முன்பு கருதப்பட்டது. மருத்துவர்கள் நாடி பிடித்துப் பார்ப்பார்கள். மூச்சு இருக்கிறதா என்று பரிசோதிப்பார்கள். மூக்குக்கு அருகே கண்ணாடியை வைத்துப் பார்த்து ஈரம் படிகிறதா என்று சோதித்துப் பார்ப்பார்கள்.

நவீன செயற்கை சுவாசக் கருவிகளின் (வெண்டிலேட்டர்) வருகை, வாழ்க்கையின் முடிவு குறித்த எளிய புரிதல்களை முற்றிலும் ரத்து செய்துவிட்டது. தீவிர சிகிச்சை முறைகள் மேலும் மரணத்தை வரையறை செய்வதைச் சிக்கலாக்கி விட்டன. மருத்துவ அடிப்படையில் மரணத்தின் வரையறை நரம்பியலின் பிராந்தியத்துக்குள் நுழைந்துவிட்டது. நரம்பு மண்டலத்தின் மரணம், மூளைச்சாவு போன்ற புதிய வார்த்தைகள் மருத்துவ அகராதிக்குள் நுழைந்துவிட்டன.

மூளைச்சாவு அடைந்த ஒரு நபருக்கு இதயமும் நுரையீரலும் தொடர்ந்து செயல்படும் நிலையில் அவர் இறந்து விட்டார் என்று சொல்ல முடியுமா? இந்தியாவில், இந்தக் கேள்விக்கு இரண்டு வித்தியாசமான பதில்களை இரண்டு சட்டங்கள் அளிக்கின்றன. முதுகுத்தண்டு மரணம் (மூளைச் சாவு அல்ல) என்பது மனித உறுப்புகள் மாற்றுச் சட்டத்தில் (1994) மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. உயிர் இருப்பதற்கான அத்தனை தடயங்களும் இல்லாத நிலையில் முதுகுத்தண்டு அல்லது இதயம் சார்ந்த மரணங்கள் ஏற்பட்டால் மட்டுமே அதைச் சாவு என்று அந்தச் சட்டம் அங்கீகரிக்கிறது.

மாறாக, பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம் (1969), பிரிவு 2 (பி) மூளைச் சாவு என்பதை மரணமாகக் கருதுவதில்லை. அந்த வரையறையின்படி, செயற்கை சுவாசத்தில் இருப்பவர் மரணமடைந்தவராக அறிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை.

அமெரிக்காவில், 13 வயதுச் சிறுமி ஜஹி மெக்மாத் தொடர்பான சம்பவம் ஒரு பெரிய விவாதத்துக்குக் காரணமானது. அந்தச் சிறுமிக்கு டான்சில் அறுவைசிகிச்சை செய்யும்போது ஏற்பட்ட தவறால், மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டார். அவரது பெற்றோர்களோ அந்த அறிவிப்பைத் திரும்பப் பெறவேண்டுமென்று கூறிப் போராடினார்கள். செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் அந்தப் பெண் 17 வயதாகிப் பூப்பும் அடைந்துவிட்டாள். சிறுமி ஜஹி மெக்மாத் தொடர்பான இந்த விவரங்கள் மரணத்தை வரையறுப்பது தொடர்பான சந்தேகங்களை மேலும் அதிகரிக்கின்றன.

“சட்டரீதியான வரையறைகள், தெளிவான எல்லைக்கோடுகளுடன் இருக்கின்றன. ஆனால், உயிரியலிலோ அந்த வரையறை தொடர்ந்து பரிணமித்துக்கொண்டேதான் இருக்கிறது” என்கிறார் அமெரிக்க உயிர்அறவியலாளரும் குழந்தைநல மருத்துவருமான ராபர்ட் ட்ருவாக். செயற்கை சுவாசத்தைத் துண்டித்தவுடன் மூளைச் சாவு அடைந்து விட்டதாகக் கூறுவது சுயதிருப்திக்கானதே. ஏனென்றால், செயற்கை சுவாசம் துண்டிக்கப்பட்டவுடன் இதய சுவாச மண்டலக் கோளாறால் மரணம் ஏற்படுகிறது.

உயிரியலும் சட்டமும் வித்தியாசமாகச் செயல்படும் நிலையில், மரணத்தைப் பொறுத்தவரை தெளிவான செயல் நடைமுறைகளோ சட்ட வரையறையோ இந்தியாவில் இல்லாத நிலையில் மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்.

நன்றி: தி இந்து (ஆங்கிலம்)

தமிழில்: ஷங்கர்