ஊருக்குள் வந்த சிறுத்தையும் செல்ஃபி யுகத்துத் தமிழர்களும்!

ஊருக்குள் வந்த சிறுத்தை தன்னை தற்காத்துக் கொள்வதற்காக மனிதர்களைத் தாக்கியது. மனிதர்கள் தம்மைத் தற்காத்துக் கொள்வதற்காக சிறுத்தையைத் தாக்கினார்கள். தன்னைக் கொல்ல வரும் பசுவைக் கொல்லலாம் என்று ஒரு கிராமியச் சொற்தொடர் உண்டு. எனவே ஊருக்குள் நுழைந்து மனிதர்களைத் தாக்கிய சிறுத்தையை மனிதர்கள் தாக்கியத்தில் ஒரு தர்க்கம் உண்டு. வீட்டுக்குள் வரும் விசப்பாம்பை அப்படித்தான் எதிர்கொள்வதுண்டு. அதுபோலவே ஊருக்குள் திரியும் கட்டாக்காலி நாய்க்கு விசர் பிடித்தாலும் அப்படித்தான் எதிர்கொள்வதுண்டு.

ஆனால் அம்பாள் குளத்தில் சிறுத்தையைக் கொன்ற விதமும், கொன்ற பின் கொண்டாடிய விதமும் தான் மிருகவதைக் குற்றங்களாக கருதப்படத்தக்கவை ஆகும். காயப்பட்ட சிறுத்தையைப் பிடித்து வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் கையளித்திருக்க வேண்டும். அதைக் கும்பலாகச் சூழ்ந்து நின்று கொடூரமாகக் கொன்றிருக்கக் கூடாது. அப்படிக் கொன்ற பின் அந்த வெற்றியை செல்ஃபி எடுத்துக் கொண்டாடியிருக்கவும் கூடாது. அப்படிக் கொண்டாடிய விதம் மிருகத்தனமானது. கடைசிக் கட்டப் போரில் அழிவுகளையும் இழப்புக்களையும் சந்தித்த ஒரு சமூகம் அதைச் செய்திருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

ஆனால் அதற்காக குற்றத்தை முழுக்க முழுக்க சாதாரண சனங்களின் மீது சுமத்தவும் முடியாது.சுமார் ஏழு மணியளவில் சிறுத்தை அம்பாள் குளத்தில் காணப்பட்டிருக்கிறது. முதலில் அது ஒரு பற்றை வளவுக்குள் தான் காணப்பட்டிருக்கிறது. ஊர் மக்கள் சுற்றி வளைக்கத் தொடங்க அது அருகில் உள்ள ஒரு தோட்டக் காணிக்குள் ஓடியிருக்கிறது. கிட்டத்தட்ட ஐந்து மணித்தியாலங்கள் அதைக் கட்டுப்படுத்தவோ பிடிக்கவோ முடியவில்லை.

மாடு கட்டப் போன ஒருவரை அது முதலில் தாக்கியிருக்கிறது. அவர் காயத்தோடு புத்திசாலித்தனமான ஒரு வேலையைச் செய்திருக்கிறர். அருகில் உள்ள பாடசாலைக்கு அதை அறிவித்திருக்கிறார். அதன்பின் பொலிசுக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலை நிர்வாகம் பிள்ளைகளை மேல் மாடிக்கு அனுப்பி பாதுகாத்திருக்கிறது. காவல் துறை சம்பவ இடத்திற்கு வந்து நின்றிருக்கிறது. வனஜீவராசிகள் திணைக்களத்தின் கிளிநொச்சி அலுவலகத்தில் இருந்து சிலர் முதலில் வந்திருக்கிறார்கள். ஆனால் வெறும் கையோடு வந்திருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கும் ஊர் மக்களுக்குமிடையில் முரண்பாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. அதே சமயம் தன்னை நெருங்கி வந்த ஊர் மக்களையும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் அலுவலர் ஒருவரையும் சிறுத்தை தாக்கியிருக்கிறது. பாடசாலை நிர்வாகமும், கல்வித்திணைக்களமும் சம்பவ இடத்திற்கு வந்து பிள்ளைகளின் பாதுகாப்புக் குறித்து பதட்டமடைந்திருக்கிறார்கள்.

இவ்வாறான ஓர் பதட்டச் சூழலில் கிட்டத்தட்ட 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மருத்துவரின் தலைமையில் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலர்கள் உரிய உபகரணங்களோடு வந்திருக்கிறார்கள். ஏற்கனவே பொறுமையிழந்து காணப்பட்ட ஊர் மக்கள் அந்த மருத்துவரோடும் ஏனைய அலுவலர்களோடும் முரண்பட்டிருக்கிறார்கள். தூசணத்தால் பேசியும் இருக்கிறார்கள். “நீங்கள் விலகி நின்றிருந்தால் நாங்கள் உரியதைச் செய்யலாம்” என்ற தொனிப்பட திணைக்கள அலுவலர்கள் ஊர் மக்களைக் கேட்டிருக்கிறார்கள். ஆனால் “நீங்கள் சிறுத்தையைக் காப்பாற்றி காட்டிற்குள் துரத்தி விடுவீர்கள் அது பிறகும் ஊருக்குள் வரும். அது பலரைக் காயப்படுத்திய பின் நீங்கள் பிந்தி வந்து நடவடிக்கை எடுப்பீர்கள்” என்றெல்லாம் கூறி ஊர்மக்கள் திணைக்கள அதிகாரிகளுடன் முரண்பட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் ஊரவர்களைக் கட்டுப்படுத்த முடியாத திணைக்கள அலுவலர்கள் சம்பவ இடத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள்.

அதன் பின் ஊர் மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறார்கள். ஏற்கனவே சிறுத்தை பலரைக் காயப்படுத்தி விட்டு தப்பியிருந்த ஒரு பின்னணியில் பாடசாலைப் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற கவலைகளின் பின்னணியில் சிறுத்தை வேட்டை நடந்திருக்கிறது. ஓர் ஊரவர் மரம் வெட்டப் பயன்படுத்தப்படும் செயின்சோ எனப்படும் எந்திர வாளை இயக்கியபடி முன்னே போயிருக்கிறார். சிறுத்தை அவரை நோக்கிப் பாய்ந்திருக்கிறது. ஆனால் அதன் கால்கள் வாளில் சிக்கிச் சேதமடைந்து விட்டன. சிறுத்தை காயத்தோடு விழுந்து விட்டது. அதன் பின் எல்லோரும் அதைச் சூழ்ந்து நின்று தாக்கியருக்கிறார்கள். அதன் பின் செல்ஃபி எடுத்திருக்கிறார்கள. குறைந்தது அது காயப்பட்ட பின்னராவது அதை அவர்கள் உரிய திணைக்களத்திடம் ஒப்படைத்திருக்கலாம்.

ஆனால் அப்படி நடக்கவில்லை. மனிதனுக்கும் விலங்குக்கும் இடையிலான போராட்டத்தில் இறுதியில் வெற்றி பெறும் மனிதன் அடையும் வெற்றிக் களிப்பு அந்த மக்களையும் தொற்றிக் கொண்டு விட்டது. சுமார் ஐந்து மணித்தியாலப் போராட்டத்தின் பின் சிறுத்தையைக் கொன்ற போது ஏற்பட்ட மகிழ்ச்சி அது. ஊரில் விசப்பாம்பை துரத்திச் சென்று அடித்த பின் ஏற்படும் ஒரு வித நிம்மதி உணர்வை ஒத்தது அது. ஆனால் சிறுத்தையைக் கொன்ற பின் ஒருவர் கூறுகிறார் “படம் எடுக்கிறவர் எடு” என்று. இங்கே தான் செல்ஃபி யுகத்தின் கொடூரம் வெளிப்படுகிறது. ஒரு கிடாய் ஆட்டின் தோற்றத்தைக் கொண்டிருந்த ஒரு விலங்கை பலர் சேர்ந்து கொன்றுவிட்டு அந்த வெற்றியை செல்ஃபி எடுத்துக் கொண்டாடிய போது வடமாகாண முன்னாள் அமைச்சர் ஐங்கரநேசன் கூறுவது போல தமிழ் மக்கள் சிறுமைப்பட்டுத்தான் போகிறார்கள்.

இவ்வளவும் நடந்த போது பொலிஸ் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறது. அங்கிருந்த பிரதேச சபை உறுப்பினர்களாலும் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. சிறுத்தையைக் கண்டவர்கள் பொலிசிற்கு தகவல் கொடுத்ததும் பெலிஸ் சம்பவ இடத்திற்கு வந்துவிட்டது. ஆனால் பொலீஸ்காரர் சிறுத்தை பதுங்கியிருந்த வளவிற்கு அருகிலிருந்த ஒரு சாலையில் அயலில் இருந்த ஒரு வீட்டிருந்து சில கதிரைகளைப் பெற்று அங்கேயே குந்தியிருந்திருக்கிறார்கள். ஊர்மக்கள் சிறுத்தையைக் கொன்று அதைத் தூக்கி வைத்துக் கொண்டாடிய போது பொலிஸ் அதைப் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறது.

இப்பொழுது சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டதாக தகவல் வந்திருக்கிறது. இது தொடர்பில் சில கேள்விகள் உண்டு. ஒரு பாடசாலைக்கு அருகே ஒரு சிறுத்தை வந்து தன்னை துரத்தி வந்த பத்துப் பேரை தாக்கிய பின் அந்த ஊர்மக்களின் உணர்வு எப்படியிருக்கும்?

பாடசாலைப் பிள்ளைகளை மேல் மாடிக்கு அனுப்பிவிட்டு கல்வித்திணைக்கள அதிகாரிகள் பதட்டத்தோடு அச்சூழலில் நடப்பவற்றை அவதானித்துக் கொண்டிருந்த ஒரு பின்னணியில் தான் சிறுத்தை வேட்டை நடந்திருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஏன் சம்பவ இடத்தை விட்டுச் சென்றார்கள்?

பொது மக்கள் ஒத்துழைக்கவில்லை என்றால் அரச ஊழியர்களான அவர்கள் தமது கடமையைச் செய்யவிடாது தடுத்த சனங்களை கட்டுப்படுத்துமாறு பொலிஸிடம் கேட்டிருக்கலாம் தானே? பொலிஸ் ஏன் பொது மக்களைக் கட்டுப்படுத்தி வன ஜீவராசிகள் திணைக்களம் அதன் கடமையை செய்வதை உறுதிப்படுத்தவில்லை? அப்படி செய்ய முடியாத அளவிற்கு பதட்டமான ஒரு சூழல் அங்கு நிலவியதா? ஆதற்கு அருகில் இருந்த ஒரு பாடசாலையும் காரணமா?

மேலும,ஊர்மக்கள் முரண்படுகிறார்கள் என்பதற்காக ஒரு திணைக்கள அலுவலர்கள் கோபித்துக் கொண்டு போகலாமா? ஜந்து மணித்தியாலங்களுக்கு மேலாக ஒரு பாடசாலைக்கு அருகே சிறுத்தை பதுங்கியிருந்த ஒரு சூழலில் முதலில் வெறுங்கையோடு வந்த வனஜீவராசிகள் திணைக்களத்தின் மீது பொதுமக்கள் கோபப்பட்டது சரியா? பிழையா?

அப்படிக் கோபப்பட்ட பொதுமக்களோடு கோபித்துக் கொண்டு திணைக்கள அலுவலர்கள் வெளியேறியது சரியா? காடும் காடும் சார்ந்த இடங்களையும் அதிகமுடைய ஒரு பெருநிலத்தில் உரிய திணைக்களம் தேவையான உபகரணங்களோடு ஆயத்தமாக இருக்கவில்லை. யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மருத்துவர் வரவேண்டியிருந்த்ருக்கிறது. இது எதைக் காட்டுகிறது? இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் எழுப்பியிருக்கும் கேள்விக்கும் பதில் கூறப்பட வேண்டும்.

சிறுத்தை ஊருக்குள் நுழைந்ததிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. பிரதான காரணம் காட்டுக்குள் மனிதர்கள் நுழைந்தமை. வேட்டைக்காரர்கள் எப்பொழுதும் காட்டுக்குள் நுழைகிறார்கள். காடு அவர்களுக்கு மற்றொரு வீடு. காட்டில் உள்ள ரகசியமான வேட்டைத் தடங்கள் வேட்டைக் காரர்களுக்கு மட்டுமே வாலாயமானவை. வேட்டைக்காரர்கள் காட்டின் பிள்ளைகளே. அவர்கள் காட்டைத் துவம்சம் செய்வதில்லை. கவிஞர் ஜெயபாலன் கடைசிக்கட்டப் போரின் போது வன்னியிலுள்ள ஒரு நண்பருக்கு எழுதிய மின் மடலில் “காடு எந்த ஒரு வேட்டைக் காரனையும் தூக்கிச் சாப்பிட்டு விடும்” என்று எழுதியிருக்கிறார். அதுதான் உண்மை.

ஆனால் வேட்டைக்காரர்களையும் காட்டையும் ஒரு சேரச் சாப்பிடும் மிகப்பெரிய வேட்டைக்காரர்கள் இப்பொழுது காட்டைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். காட்டிற்குள் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்? என்பதெல்லாம் சாதாரண சனங்களுக்குத் தெரியாது. செய்மதிப் படங்களுக்கும் அதிகம் தெரியாது. வன்னிக் காட்டில் பிரதான சாலையிலிருந்து காட்டுக்குள் நுழையும் பல கிரவல் சாலைகளின் முடிவில் என்ன இருக்கிறது என்ன நடக்கிறது என்று படைத்தரப்பிற்கு மட்டுமே தெரியும். எனவே காட்டுக்குள் படை வந்துவிட்டது. அதனால் காட்டு விலங்குகளுக்கும் மரங்களுக்கும் ஏனைய காட்டு வளங்களுக்கும் எது நடந்தாலும் முதற் பொறுப்பு படைத்தரப்பு தான்.

காட்டைப் பிடித்து வைத்திருக்கும் படைத்தரப்பு வேட்டைத் தடங்களை மூடிவிட்டது. வேட்டைக் காரர்கள் இப்போது அங்கே போக முடியாது. போனாலும் அவர்கள் கொல்லும் உடும்புக்கும் மானுக்கும் மரைக்குமாக அவர்களுக்கு சட்டப்படி பெரிய தண்டனை கிடைக்கும்.
ஆனால் வேட்டைக் காரர்களை விடவும் மிகப் பெரிய வேட்டைக் காரர்களான படைத்தரப்பை வனஜீவராசிகள் திணைக்களம் கட்டுப்படுத்துமா? நிச்சயமாக இல்லை என்று வன்னி வாசிகள் கூறுகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு அம்பாள் குளம், கிருஷ்ணபுரம் பகுதிகளில் படைத்தரப்பினர் தமது வளர்ப்புப் பிராணி ஒன்று தொலைந்து போய் விட்டதாகக் கூறித் தேடியிருக்கிறார்கள். கொல்லப்பட்ட சிறுத்தை மிகவும் கொழுத்த ஒரு சிறுத்தை என்றும் அது காட்டில் வளரும் சிறுத்தைகளை விட மினுக்கமாகக் காணப்பட்டது என்று ஒரு ஊர்வாசி கூறினார். இது தவிர கேப்பா புலவில் படைத்தரப்பு ஒரு சிறுத்தையைக் கொன்றதாகவும் ஒரு தகவல் உண்டு.

2009 மே க்குப் பின் வன்னிக்காடு பொது மக்களுக்கும் குறிப்பாக வேட்டைக்காரருக்குப் பெருமளவுக்கு மூடப்பட்டுவிட்டது. எனவே காட்டுக்குள் இருக்கும் மர்மங்களைப் பற்றி படைத்தரப்பைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அங்கே எவ்வளவு மரங்கள் வெட்டப்படுகின்றன. எவ்வளவு மண்ணும் கனிப்பொருட்களும் அகழப்படுகின்றன என்பது பற்றியும் யாருக்கும் தெரியாது. இது வன ஜீவராசிகள் திணைக்களத்திற்கும் சம்பந்தப்பட்ட ஏனைய திணைக்களத்திற்கும் தெரியுமா?

எனவே சிறுத்தை கொல்லப்பட்டமை தொடர்பில் அளவுக்கு மிஞ்சி உணர்ச்சி வசப்பட முடியாது. அங்கே மிருக வதை நடந்திருக்கிறது.அதில் குற்றம் புரிந்தவர்கள் தாங்களே எடுத்துக் கொண்ட செல்ஃபிப் படங்கள் தான் இப்பொழுது அவர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றன.

அதே சமயம் இது தொடர்பாக தென்னிலங்கை ஊடகங்கள் காட்டும் பிரதிபலிப்புக்களை ஒரு முஸ்லீம் நண்பர் முகநூலில் விமர்சித்திருக்கிறார். மாத்தள விமான நிலையத்தை காட்டுக்கு அருகே கட்டிவிட்டு அங்கு காட்டிலிருந்து வரும் விலங்குகளை சுட்டுக் கொல்லுமாறு உத்தரவிட்ட போது அதைப்பற்றி விமர்சிக்காத மேற்படி ஊடகங்கள் சாதாரண தமிழ் மக்கள் ஒரு சிறுத்தையைக் கொன்றதை தூக்கிப் பிடிக்கின்றன என்ற தொனிப்பட அவர் விமர்சித்திருக்கிறார்.

ஒரு சிறுத்தையை வைத்து மனிதாபிமான விவகாரங்களை நடாத்தும் எவரும் அச்சிறுத்தைக்குப் பின்னாலுள்ள சூழழியல்சார் அரசியலையும் அச்சிறுத்தையைக் கொன்ற சாதாரண சனங்களின் உளவியலையும் விளங்கிக் கொள்ள வேண்டும். செல்ஃபி யுகத்தின் உளவியலையும் விளங்கிக் கொள்ள வேண்டும். தமது காட்டின் மீதும் தமது தேசிய மிருகத்தின் மீதும் உரிமை கொண்டாட முடியாத ஒரு மக்கள் கூட்டம் அவர்கள். தமது காட்டையும் விலங்குகளையும், பறவைகளையும், பூச்சி புழுக்களையும் பாதுகாக்கும் உரிமையற்ற மக்கள் அவர்கள். தமது கடலையும், கடலேரிகளையும், கடலட்டைகளையும், பாதுகாக்கும் உரிமையற்ற மக்கள் அவர்கள. இவ்வாறான கூட்டு உரிமைகளற்ற மக்களைத்தான் வனஜீவராசிகள் சம்பந்தப்பட்ட சட்டங்களின் கீழ் விசாரிக்கப் போகிறார்கள்.

அதே சமயம், ஐந்து மணித்தியாலங்களுக்கும் மேலாக அதுவும் ஒரு பாடசாலைக்கு அருகில் ஒரு சிறுத்தையைக் கட்டுப்படுத்த தவறிய வனஜீவராசிகள் திணைக்களமும் பொலிஸ் திணைக்களமும் இது தொடர்பில் பதில் கூற வேண்டும்.ஆயுத மோதல்கள் முடிந்து ஒன்பதாண்டுகளான பின்னரும் உரிய திணைக்களங்கள் வினைத்திறனுடன் செயற்பட முடியாதிருப்பதற்கு யார் பொறுப்பு? ஒரு சிவில் சமூகத்தில் ஒரு சிறுத்தையைக் கட்டப்படுத்த உரிய திணைக்களங்களால்; முடியவில்லை என்பதும் முடிவில் ஐந்து மணித்தியாலங்களுக்குப் பின் மக்கள் சட்டத்தை கைகளில் எடுத்ததும் எதைக் காட்டுகின்றன? ஆங்கே சிவில் நிர்வாகம் முழுமையாக செயற்பட வில்லை என்பதையா?

தமது காட்டையும், நிலத்தையும், கடலையும், கடலட்டைகளையும் அனுபவிக்க முடியாத ஒரு மக்கள் கூட்டம் அதை வேறு யாரோ அனுபவிப்பதை கையாலாகாத் தனத்தோடு பார்த்துப் பொருமிக் கொண்டிருக்கும் ஒரு மக்கள் கூட்டம் தமது தேசிய விலங்கைத் தாங்களே அடித்துக் கொன்று விட்டார்கள்.

நிலாந்தன்