கொஞ்சம் செயற்கை நுண்ணறிவு, சக்திவாய்ந்த சில்லு, இரண்டு மோட்டார் சக்கரங்கள். இவற்றையெல்லாம் சேர்த்தால் கிடைப்பதுதான், ‘ஓவிஸ்’ சீனாவைச் சேர்ந்த, பார்வர்டு எக்ஸ் ரோபாடிக்ஸ் தயாரித்துள்ள ஓவிஸ், ஒரு புத்திசாலி சூட்கேஸ்!
அது தன் உரிமையாளரை அடையாளம் கண்டுகொள்ளும் கேமிரா வசதியுடன் இருப்பதால், வேறு யாரும் அதை ‘கையாள’ முடியாது. உரிமையாளர் எங்கு சென்றாலும், அவரது வலது பக்கமாக கூடவே வரும் விசுவாசம் கொண்டது ஓவிஸ்.
படிகள், தடைகள் வந்தாலோ, பேட்டரி தீர்ந்து போனாலோ, உரிமையாளர் அதன் கைப்பிடியை பிடித்து இழுத்துச் செல்லலாம்.
ஓவிஸ் தானாக உடன் வரும்போது, யாரும் எதிரே வந்து மோதாமல், பதவிசாக அதுவே நகர்ந்து செல்லும்.
ஓவிசைவிட்டு உரிமையாளர், 2 மீட்டர் தொலைவைத் தாண்டிப் போனால், இதன் செயலி, உரிமையாளர் மணிக்கட்டில் கட்டியிருக்கும் கருவிக்கு செய்தி அனுப்பும். அட, இதில் துணிமணி, பணம், மடிக்கணினி போன்றவற்றையும் திணித்துக்கொள்ளலாம். விலை: 55 ஆயிரம் ரூபாய். சூட்கேசுடன் குடித்தனம் நடத்தும் சர்வதேச பயணியருக்கு இது உற்ற துணை!