தூத்துக்குடிக்காக சர்வதேச அமைப்பை உருவாக்கும் திருமுருகன் காந்தி!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்பது ஒரு சர்வதேச பிரச்னை. அதைத் தமிழ்நாட்டின் பிரச்னையாக மட்டும் பார்க்கக் கூடாது. இதைச் சர்வதேச பிரச்னையாக கொண்டுபோகும் வேலைகளில் இறங்கி ‘தூத்துக்குடி படுகொலைக்கும், தமிழ்நாட்டுக்குமான நீதி’ எனும் தலைப்பில், ஐரோப்பாவில் கூட்டமைப்பை உருவாக்கி இருக்கிறது மே பதினேழு இயக்கம்.

தென்னாப்பிரிக்காவில் `மரிக்கானா’ (Marikana) எனும் சிறு நகரத்தில் போராடிய சுரங்கத் தொழிலாளர்களின் மீது 2012-ம் ஆண்டு துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 50. அப்போது நடந்த துப்பாக்கிச்சூடு லொன்மின் (Lonmin) என்ற கனிமச் சுரங்க நிறுவனத்துக்கு எதிரான போராட்டம் என்பதைக் கவனிக்க வேண்டும். இத்தனைக்கும் தங்களுடைய கூலி உயர்வையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டித்தான் நடந்தது. அந்தத் துப்பாக்கிச்சூடு தொடர்ச்சியாக லொன்மினில் தொடங்கி ஆங்லோ அமெரிக்கன் போன்ற பல நிறுவனங்களுக்கும் பரவியது. அங்கும் பல கொலைகள் நிகழ்த்தப்பட்டன. இந்த நிறுவனங்களால் தென்னாப்பிரிக்காவில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கும் தூத்துக்குடி படுகொலைகளுக்கும் பெரிய வித்தியாசமில்லை.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு

வேதாந்தா நிறுவனத்துக்கு எதிராக ஜாம்பியா, ஆஸ்திரேலியா, அயர்லாந்து உட்பட பல உலக நாடுகளிலும், இந்தியாவில் சட்டீஸ்கர், ஒடிஷா, கோவா எனப் பல இடங்களிலும் அதற்கு எதிரான போராட்டங்கள் நடக்கின்றன. ஸ்டெர்லைட் எதிர்ப்பு என்பது ஒரு சர்வதேச பிரச்னை. அதைத் தமிழ்நாட்டின் பிரச்னையாக மட்டும் பார்க்கக் கூடாது. இதைச் சர்வதேச பிரச்னையாக கொண்டுபோகும் வேலைகளில் இறங்கி ‘தூத்துக்குடி படுகொலைக்கும் தமிழ்நாட்டுக்குமான நீதி’ எனும் தலைப்பில், ஐரோப்பாவில் கூட்டமைப்பை உருவாக்கி இருக்கிறது மே பதினேழு இயக்கம்.

தற்போது ஜெர்மனியில் இருக்கும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், திருமுருகன் காந்தியைத் தொடர்புகொண்டு பேசினோம்… 

“ஜூன் 22-ம் தேதியன்று, தூத்துக்குடி படுகொலை நடந்து ஒருமாத காலத்தில் ‘தூத்துக்குடி படுகொலைக்கும், தமிழ்நாட்டுக்குமான நீதி’ எனும் தலைப்பில் கூட்டமைப்பினை உருவாக்கியது மே பதினேழு இயக்கம். இந்தக் கூட்டமைப்பு ஐரோப்பாவில் இயங்கும் சூழலியலாளர்கள், முற்போக்காளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் ஆகியோரை இணைத்து ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தில் முக்கிய பங்குவகித்து செயல்படும் நாடான ஜெர்மனிக்கு சூழலியல் சார்ந்த அக்கறையும், முக்கியமான அரசியல் பங்களிப்பும் உண்டு. ஜெர்மானிய நாட்டில் இயங்கும் சூழலியலாளர்கள், பசுமைக் கட்சி, இடதுசாரிகள் போன்றவர்கள் இம்மாதிரியான கருத்துகளை தீவிரமாக முன்னெடுப்பவர்கள். இதேபோன்று மூன்றாம் உலக நாடுகளில் செயல்படும் பன்னாட்டு நிறுவனங்கள் செய்யும் மனித உரிமை மீறல்கள், சூழலியல் சீர்கேடுகளுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்படும் செயற்பாட்டாளர்களைக் கடந்த மூன்று வாரங்களாக நேரடியாகச் சந்தித்து தூத்துக்குடியில் நிகழ்த்தப்பட்ட பயங்கரங்கள், சூழலியல் சீர்கேடுகள் பற்றியான விளக்கங்களை மே பதினேழு இயக்கம் சார்பில் விரிவான விளக்கத்தையும், கூட்டத்தையும் நடத்தினோம். இது குறித்தான ஆவணங்களையும் அவர்களிடத்தில் பகிர்ந்தோம். இதே வேளையில் ஜெனீவா நகரில் தலைமையகமாக கொண்டு இயங்கும் ஐ,நா மனித உரிமை அவையிலும் ஆவண அறிக்கைகள் பதிவுசெய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. இந்த ஆவணங்களையும், வேதாந்தா – ஸ்டெர்லைட் தொடர்பான இதர விவரங்களையும் பகிர்ந்தோம்.

‘தூத்துக்குடி படுகொலைக்கும், தமிழ்நாட்டுக்குமான நீதி’ கூட்டமைப்பை அமைக்க வேண்டிய அவசியம் என்ன? 

“இக்கூட்டமைப்பைக் கொண்டு குறிப்பாக இந்தியாவுக்கு வெளியே தமிழ்நாட்டின் சூழலியல் போராட்டங்கள் பற்றிய விவரங்களைக் கொண்டு சேர்ப்பதன் மூலம் பன்னாட்டு நிறுவனங்களின் எதேச்சதிகார போக்கினை எதிர்கொள்ளும் வலிமையை நாம் பெறமுடியும். மேலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களுக்குள் வலிமையான கட்டமைப்பினையும் கூட்டுப் பயங்கரவாதத்தினையும் செயல்படுத்தும்போது அதை எதிர்த்து நிற்கும் எளிய மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட்டு நிற்கவேண்டுமென்று மே பதினேழு இயக்கம் கருதியது. எளிய மக்களின் ஒரே வலிமையான ஆயுதம் என்பது அவர்களின் ஒற்றுமையும், சகோதரத்துவமுமே. இதன் மூலமாகவே எதேச்சதிகாரமாகவும், சட்ட வரம்புகளை மீறிச் செயல்படும் நிறுவனங்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் கிடைப்பது மட்டுமல்ல, கார்ப்பரேட் நிறுவனங்களைத் தனிமைப்படுத்துவதும் சாத்தியம். வாக்குவங்கி அரசியல் அதிகாரம் இது போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களில் கட்டுப்பாட்டில் வந்துவிட்ட நிலையில், மக்கள் இயக்கங்களாகத் தேர்தலுக்கு அப்பாற்பட்ட நிலையில் இயங்கினால் மட்டுமே தங்களது வாழ்வாதாரத்தையும், எதிர்கால சந்ததிகளின் வளத்தையும் பாதுகாக்க முடியும் என்பதால் இந்தக் கூட்டமைப்பு முயற்சிகளை இந்தியாவுக்கு வெளியே உருவாக்க முடிவெடுத்தோம்.

தூத்துக்குடி

இக்கூட்டமைப்பின் செயல்பாடு எப்படி இருக்கும்? 

“இந்தக் கூட்டமைப்பில் மேலும் பல இயக்கங்களை இணைப்பதற்கான முயற்சிகளை எடுத்திருக்கிறோம். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் தமிழர்கள் தனித்து இல்லை என்பதை வேதாந்தா நிறுவனத்துக்கு உணர்த்தும் சிறு முயற்சியே இது. ஸ்னோலினின் படுகொலை தூத்துக்குடி பயங்கரவாதத்தில் மிக மோசமானது மட்டுமல்ல அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய பயங்கரவாதம்.  இதனாலேயே ஸ்னோலின் புகைப்படத்தை இந்தப் பயங்கரவாதத்துக்கு எதிர்ப்பு அடையாளமாக்க வேண்டும் என்று கூட்டமைப்பினர் சொன்னார்கள். ஒரு இளம் மாணவியைக் கொலை செய்யும் எந்த ஒரு நடவடிக்கையும் நியாயப்படுத்திவிட முடியாது. பாகிஸ்தானின் மலாலா மீதான கொலை முயற்சியை உலகம் எதிர்த்து நின்றது நியாயமெனில், ஸ்னோலின் படுகொலைக்காக உலகம் கொதித்து எழவேண்டும் என அனைவரும் பேசினர். ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் உயிர் நீத்த அனைவரின் தியாகத்துக்கான நீதியைப் பெற்றுத் தர வேண்டும். ஸ்டெர்லைட் நிறுவனமும், அதன் தாய் நிறுவனமான வேதாந்தா நிறுவனமும் சர்வதேச மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் எனும் கடமையை மேற்கொள்வதாக அனைவரும் உறுதி அளித்தனர். ஸ்னோலின் உள்ளிட்ட தியாகிகளின் கோரிக்கைக்காக தமிழ்நாடு மட்டுமல்ல சர்வதேச ஜனநாயக ஆற்றல்களும் கைகோக்கும் என்று இந்தக் கூட்டமைப்பு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. இதற்கு அடுத்த நாளான ஜூன் 23-ம் தேதி நான் ’தி லிங்க்’ கட்சியின் பிராந்திய மாநாட்டுக்கு அழைக்கப்பட்டேன். அந்த நாட்டில் இக்கட்சியின் புகழ்பெற்ற மூத்த பாராளுமன்ற உறுப்பினர் உல்லா யெல்ப் அவர்கள் தூத்துக்குடி பிரச்னை குறித்து அங்கு திரண்டிருந்த நூற்றுக்கணக்கான கட்சித் தோழர்களிடம் விவரித்தார்.

இந்தக் கூட்டமைவின் செயல்பாடுகளை ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவின் செய்தி தளங்களுக்கான செய்திகளைக் கொண்டுசெல்லும் பொறுப்பினை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றுக்கொண்டனர். இக்கூட்டமைப்பின் பெயராக “Justice for Thoothukudi, Justice for Tamilnadu” என்று முன்மொழியப்பட்டது. இது தூத்துக்குடிக்கான நீதி மட்டுமல்ல தமிழ்நாட்டில் நடக்கும் பல்வேறு போராட்டங்களுக்கான நீதிக்கும் துணையாக நிற்குமென்று முடிவெடுக்கப்பட்டது. ஸ்னோலினின் புகைப்படத்தை ஓவியமாகத் தோழர்.ட்ராட்ஸ்கி மருது வரைந்து கொடுத்திருந்தார். அப்படத்தைக் கூட்டமைப்பின் அடையாளமாக முன்வைத்தனர். இக்கூட்டமைப்பின் முதல் செயல்பாடாக அனைத்துத் தரப்பிலிருந்தும் இணைந்து கருத்தரங்கம் ஒன்றினை நடத்துவதாக முடிவெடுக்கப்பட்டது. இது குறித்த அறிவிப்பும் ஓரிரு நாள்களில் வெளியிடப்படும். இதற்குரிய தயாரிப்புகளில் தற்போது மே பதினேழு இயக்கமும், இதர தோழமை இயக்கங்களும் செயல்பட்டு வருகின்றன. தூத்துக்குடியில் நடக்கும் ஒடுக்குமுறைகள் இனி உலகம் முழுமைக்கும் கொண்டு செல்லப்படும்” என்றார்.