போராளிகள் ஒன்றிணைய வேண்டும்!” – மேதா பட்கர்

நாட்டின் (இந்தியா) உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பெயரில் கொண்டுவரப்படும் திட்டங்கள் வணிகமயமாகத்தான் இருக்கின்றன. அவை உண்மையான வளர்ச்சியைக் கருத்தில் கொள்வதில்லை – மேதா பட்கர்

63 வயதிலும் மக்கள் போராட்டங்களின் ஆதரவுக் குரலாக இந்தியா முழுவதும் பயணித்துக்கொண்டிருக்கிறார் மேதா பட்கர். குஜராத்தின் நர்மதா ஆற்றில் கட்டப்பட்ட சர்தார் சரோவர் அணைக்கு எதிரான போராட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர். இந்தியா முழுவதும் நடைபெறும் சுற்றுச்சூழல் பிரச்னைகள், குடிசைகள் வெளியேற்றம் என விளிம்புநிலை மக்களின் குரலாகத் தொடர்ந்து களமாடி வருகிறார். ஸ்டெர்லைட், சென்னைக் குடிசைப் பகுதி வெளியேற்றம் போன்ற பிரச்னைகளுக்காகச் சமீபத்தில் சென்னை வந்த மேதா பட்கரின் பரபரப்பான நாளின் ஒரு சிறிய இடைவெளியில் சந்தித்து உரையாடினேன். 

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மூடப்பட்டாலும் வேதாந்தாவின் பல்வேறு தொழிற்சாலைகள் இந்தியா முழுவதும் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. இதனை எப்படி எதிர்கொள்வது? 

இது மாதிரிப் பிரச்னைகளை உள்ளூர் அளவிலும் சர்வதேச அளவிலும் கையாள வேண்டும். பொதுமக்கள் குறிப்பிட்ட தொழிற்சாலைக்கு எதிராகவே போராடுவார்கள். அவர்களுக்கு அதைத் தாண்டி அதனுடன் தொடர்புடைய பல்வேறு பிரச்னைகள் தெரிய வாய்ப்பில்லை. இங்குதான் சமூகச் செயற்பாட்டாளர்கள் மக்களை நிலைப்படுத்தும் வேலையைச் செய்ய வேண்டும். அதானியின் லாப வெறிக்கு எதிராகப் போராடுபவர்கள் அனைவரும் ஒன்றுகூடுவதைச் செயற்பாட்டாளர்கள்தாம் வழிவகுக்க வேண்டும். அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளில் ஒவ்வொரு விஷயத்துக்கும் போராடுவதற்கு தனி தனி அமைப்புகள் இருக்கின்றன. உதாரணமாக சிமென்ட் ஆலைகளுக்கு எதிராக ஒரு குழுவினர், ஃபோர்டு போன்ற கார் கம்பெனிகளுக்கு எதிராக ஒரு குழுவினர் எனப் போராடுகின்றனர். மிகப்பெரிய பிரச்னைகள் வரும்போது அனைவரும் ஒன்றுகூடி விடுகின்றனர். அதானி, அம்பானி, ஜின்டால் போன்ற பெருமுதலாளிகள் ஒன்று சேரும்போது கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக நாமும் ஒன்று சேர வேண்டும். தொழில்மயமாக்கல் நமக்கும் தேவைதான். ஆனால், விவசாயத்தை விலை கொடுத்தோ இயற்கை வளங்களை விலை கொடுத்தோ தொழில்மயமாக்கலை வளர்க்க வேண்டிய அவசியமில்லை. மிக வலிமையான மக்கள் போராட்டங்கள் இந்த அழிவுத் திட்டங்களுக்கு எதிராக எழுச்சியுறும். அதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை. மக்கள் எழுவார்கள். நாம் அதை மக்களிடையே கட்டாயப்படுத்தக் கூடாது. அதே நேரத்தில் சட்டரீதியான போராட்டங்களையும் முன்னெடுக்க  வேண்டும். புதிய நில கையகப்படுத்துதல் சட்டம், பழங்குடியின மக்களுக்கான சுய உறுதிச் சட்டம் எனப் பல சட்டத் திருத்தங்களை போராடித்தான் பெற்றுள்ளோம். அரசும் இந்தச் சட்டத்திருத்தங்களை முறையாகச் செயல்படுத்துவதில்லை. மோடி அரசு அனைத்துச் சட்டங்களையும் மக்களுக்கு எதிரானதாக மாற்றுவதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

 

மக்களின் எழுச்சிப் போராட்டங்கள் மிக முக்கியமானவை எனச் சொல்கிறீர்கள். ஆனால், அதனை அரசு வன்முறையால் எளிதாக ஒடுக்கிவிடுகிறதே? மக்கள் போராடுவதற்கு எப்படி முன்வருவார்கள்? 

இது மிகப்பெரிய சவால். மக்களுக்கான சவால் மட்டுமல்ல. சமூகச் செயற்பாட்டாளர்களுக்கும் மிகப்பெரிய சவால்தான். போராட்ட அனுபவங்களிலிருந்து நாம் பலவற்றைக் கற்றுக்கொள்கிறோம். கற்றுக்கொண்டதை அடுத்தடுத்த போராட்டங்களில் செயல்படுத்த வேண்டும். தொடர்ச்சியான போராட்டத்தால்தான் நீதி கிடைக்கும்.

தூத்துக்குடியில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் ஆறுபேர் கைது, சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்காகத் தொடர்ந்து பலர் கைது என மக்களுக்காகப் போராடுபவர்களை அரசு அதிகாரம் வன்மையாக ஒடுக்குவதைப் பற்றி?

மக்களுக்காகப் போராடுபவர்களை செயல்படுபவர்களை ஒரேயடியாக அழிக்க நினைக்கின்றனர் அதிகார வர்க்கத்தினர். இந்த வழக்குகள் அனைத்தும் முறையாகப் பதிவு செய்யப்பட்டு சட்ட நடைமுறைப்படி மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அரசு அப்படிச் செய்வதில்லை. மிகக்கடுமையான ஒடுக்குமுறையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். அரசு மிகப்பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. மக்களின் எழுச்சிப் போராட்டம் பெரிய அளவில் அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும்.

தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களின் பெயரில் இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? 

இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல. எல்லா இடங்களிலும் இதே நிலைதான். இந்தியா முழுவதும் இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு வேலைகள் நடக்கின்றன. குறிப்பாகத் தமிழகத்தில் பெரிய எதிர்ப்பு இருக்காது என அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால், இங்கு மக்கள் விழிப்புஉணர்வுடன் இருக்கின்றனர்.

இந்தியக் கடற்கரைகளில் செயல்படுத்தப்படவிருக்கும் சாகர் மாலா திட்டம் பற்றி?

அது மிகவும் அதிர்ச்சி தரக்கூடிய திட்டம். மோடி அரசு திட்டங்களின் பெயரால் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அவர்கள் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தை மதிப்பதில்லை. மக்களையும் மதிப்பதில்லை. இந்தத் திட்டம் இந்தியா முழுவதும் மிகப்பரிய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால், ஏற்கெனவே இருக்கும் பொருளாதார வளர்ச்சியும் குறையும். கன்னியாகுமரியிலிருந்து இந்தியக் கடற்கரையின் பல்வேறு மீனவ மக்கள் ஒன்றாக இந்தத் திட்டத்தை எதிர்க்கிறார்கள். இந்திய அளவில் இதற்கான போராட்டங்கள் வெடிக்கும்.

மேதா பட்கர்

சென்னை – சேலம் 8 வழி பசுமைச்சாலையை அமைப்பதில் அரசு அவ்வளவு தீவிரம் காட்டுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பெயரில் கொண்டுவரப்படும் திட்டங்கள் வணிகமயமாகத்தான் இருக்கின்றன. அவை, உண்மையான வளர்ச்சியைக் கருத்தில் கொள்வதில்லை. தற்போது பன்னாட்டு வங்கி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பெயர் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (Asian Infrastructure Investment Bank). இந்த வங்கியின் மூலம் இந்த மாதம் 25, 26 தேதிகளில் மும்பையில் இது தொடர்பான கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த மாதம் 21 லிருந்து 23 ம் தேதி வரை அதே இடத்தில் பல்வேறு செயற்பாட்டாளர்களும் தொண்டு நிறுவனங்களும் இதுகுறித்து கலந்தாலோசிக்க உள்ளன. இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் அழிப்பதே இந்த வளர்ச்சித் திட்டங்களின் வேலையாக இருக்கிறது. மக்களை பாதிப்பதால்தான் அவர்கள் இதனை எதிர்த்துக் கேள்வி கேட்கின்றனர். அடிப்படை வசதிகள்தாம் முதலில் வேண்டும் நெடுஞ்சாலைகள் அல்ல. மிக எளிதாகப் பயணம் செய்வதற்காக 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்களை வேரோடு பிடுங்கி எறிகின்றனர். நமக்கும் உள்கட்டமைப்புகள் தேவைதாம் அதற்காக முக்கியத்துவங்களை மறந்துவிடக் கூடாது. மக்களின் வாழ்வாதாரங்களை விலை கொடுத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவது கொடுமையானது. அவர்களுக்கென்று ஒதுங்க நிலம் கூட இல்லாமல் மொத்தமாக நெடுஞ்சாலைகளும் எக்பிரஸ்களும் எதற்கு? மன்சூர் அலிகான், பியூஷ் மானுஷ் என எவரையும் கைது செய்யக் கூடாது. ஜனநாயக நாட்டில் குறைந்தபட்சக் கடமையாகப் பொதுமக்களிடம் கருத்துக் கேட்புக் கூட்டத்தையாவது பழனிசாமி அரசு செய்ய வேண்டும். இந்திய ஜனநாயகப்படி அரசு செயல்பட வேண்டும்.

உங்களுடைய நீண்டநாள் போராட்டமான நர்மதா அணைப் போராட்டம் எந்த அளவில் உள்ளது? 

இத்தனை வருடப் போராட்டத்தில் புதிய சவால் நர்மதா நதியைக் காப்பதுதான். அரசு தொடர்ந்து அணைக் கட்டுவதில்தான் முனைப்பாக இருக்கிறது. ஆனால், நதியானது  இறந்து கொண்டிருக்கிறது.   நர்மதாவிலிருந்து அளவுக்கு அதிகமான நீரை எடுத்துவிட்டனர். சமீபத்திய குஜராத்தின் தேர்தலில் நர்மதாவின் நீர்தான் முக்கியப் பங்கு வகித்தது. குஜராத் மக்கள் இப்போது விழிப்படைந்துவிட்டனர். நர்மதா நதியைக் காப்பதன் அவசியம் மக்களுக்குப் புரிய வந்துள்ளது. குஜராத் சட்டமன்றத்தில் கூட விவாதங்கள் எழும்பியுள்ளன. இதைப்பற்றி ஏற்கெனவே சொல்லியிருக்கிறோம். இதற்காக ஜீன் 24ல் போபால் வரை 1000 பேர் நடைப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறோம். நர்மதா நதியைக் காப்பாற்றும் முயற்சி இது.

இன்னும் இன்னும் உரையாட நிறைய மக்கள் பிரச்னைகள் இருந்தும் அவரது பரபரப்பான நாளின் மற்ற கூட்டங்களுக்கு அவர் சென்றாக வேண்டிய கட்டாயம். உரையாடல் ஆரம்பிக்கும்போது இருந்த புன்னகை முடியும் வரை பெரிதாக மாறவில்லை அந்தப் போராளியிடம்!