வடகொரிய அரசின் நடவடிக்கைகள், கொள்கைகள் ஆகியவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூரில் கடந்த 12-ந் திகதி நடந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்பு நடந்த மறுநாளில் டிரம்ப், வடகொரியாவிடம் இருந்து இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லை என்று தெரிவித்தார்.
இதுபற்றி அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “வடகொரியாவிடம் இருந்து இனி அணு ஆயுத அச்சுறுத்தல் இல்லை. இன்று இரவு நன்றாக தூங்குங்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
ஆனால் நேற்று முன்தினம் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு டிரம்ப் அளித்த அறிக்கை ஒன்றில் வடகொரியாவிடம் இருந்து அணு ஆயுத அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ‘பல்டி’ அடித்து உள்ளார்.
அந்த அறிக்கையில், “கொரிய தீபகற்பத்தின் ஆயுத பயன்பாடு மற்றும் வடகொரிய அரசின் நடவடிக்கைகள், கொள்கைகள் ஆகியவை அமெரிக்க தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை, பொருளாதாரத்துக்கு அசாதாரணமான அச்சுறுத்தலாக தொடர்கின்றன” என கூறப்பட்டு உள்ளது.
மேலும் வட கொரியாவினால் அச்சுறுத்தல் தொடர்கிற நிலையில், அமெரிக்காவில் தேசிய நெருக்கடி நிலையை மேலும் ஓராண்டுக்கு தொடர்வதாகவும் டிரம்ப் அதில் தெரிவித்து உள்ளார்.
இதற்கிடையே வட கொரியாவுடன் ராஜ்ய ரீதியிலான பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருப்பதால், தென்கொரியா உடனான கூட்டு ராணுவ பயிற்சிகள் காலவரையறையற்று நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாக அமெரிக்க ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் கூறி உள்ளார்.