ஒரு பேராசிரியையின் கதை
“கல்லூரி பேராசிரியை ஆகவேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு. சிறு வயதில் என் பள்ளி ஆசிரியயையிடம் இருந்து நான் பெற்ற அந்த கனவும், ஈர்ப்பும் வாழ்நாளில் எந்த தருணத்திலும் குறைந்துவிடவில்லை.
பத்தாவது மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த போது, பலரும் என்ஜினியரிங் சேர சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். ஆனால், என் கனவு மீது நம்பிக்கை கொண்டிருந்த என் அப்பா தான் மற்றவர் பேச்சை எல்லாம் கேட்காமல் நான் ஆசிரியர் பணியில் சேர ஊக்கம் அளித்தார்.
எனக்கு சட்டம் மீது அதிக ஆர்வம். அரசியல் மற்றும் இந்திய கட்டமைப்பு சார்ந்து நிறைய புரட்சிகரமான சிந்தனைகள் கொண்டிருந்தேன் நான். ஆகையால், சட்டம் பின்றி சட்ட பயிற்றுவிக்கும் பேராசிரியராக முயற்சித்து வந்தேன்.படித்து முடித்த கையோடு ஒரு கல்லூரியில் வேலையும் கிடைத்தது. மிகுந்த ஆர்வம்.. என் கனவு நினைவான தினம் அது. முதல் நாள் கல்லூரிக்கு புடவையில் புத்தகங்களை குழந்தையை போல கையில் ஏந்தி செல்கிறேன்.
எத்தனையோ கல்லூரிகளுக்கு சேர்க்கைக்காகவும், தேர்வுகள் எழுதவும் சென்றிருக்கிறேன். ஆனால், முதல் முறையாக நான் வேலைக்கு சென்ற்ஹா கல்லூரிக்குள் ஒரு பேராசிரியையாக காலெடுத்து வைக்கும் போது ஏதோ கோவிலுக்குள் செல்வது போன்ற உணர்வு… இந்த உலகில் எனக்கென ஒரு மதிப்பு பிறந்தது போன்ற எண்ணம் மனதுக்குள்.ஆனால், என் வாழ்நாள் கனவு பணி, இவ்வளவு தொந்தரவுகள் நிறைந்து இருக்கும் என்று சில மாதங்கள் கழித்து தான் அறிந்துக் கொண்டேன். இதர பாடங்களுக்கும், சட்ட பாடத்திற்கும் நிறையவே வித்தியாசம் இருக்கின்றன.
மற்ற பாடங்கள் வாழ்க்கை எப்படி வாழ வேண்டும், எப்படி வேலை செய்ய வேண்டும் என்று கற்பிக்கும். சட்டம் மட்டுமே ஒழுக்கம், நடைமுறை, சமூகத்தில் நாக்கும் பிரச்சனைகள், அவற்றுக்கான தீர்வுகள் போன்றவற்றை கற்பிக்கும். என் வகுப்பு மாணவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தேன்.
அவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள். இப்படி ஒரு அழகான சூழல் என் வாழ்வில் அமையம் என்று நான் நினைக்கவே இல்லை. பொதுவாகவே, மாணவர்கள் என்றால் புதியதாக வரும் பேராசிரியைகளை கிண்டல் செய்வார்கள், மதிப்பு அளிக்க மாட்டார்கள் என்றே கருதினேன். ஆனால், என் வகுப்பு மாணவர்கள் அதற்கு நேரெதிர்.
கிளாஸ் ரூம் அவ்வளவு சுத்தமாக இருந்தது எனில், ஸ்டாப் ரூம் அதற்கு நேரெதிர். என் வயதொத்த ஒரு பேராசிரியை இருந்தார். அவரும் நான் முதல் நாளில் இருந்தே நெருக்கமாகிவிட்டோம். மிகுந்த நட்புடன் பழகுவோம். எங்கள் ப்ரேக்கில் ஒன்றாக காபி குடிப்பது, மதிய உணவை பகிர்ந்துக் கொள்வது, மற்ற ஆரோக்கியமான விவாதங்கள் என நாங்கள் தோழிகள் போல பழகி வந்தோம்.
நான் சேர்ந்திருந்த போது டீன் பதவி எங்கள் துறையில் காலியாக இருந்தது. நான் வேலைக்கு சேர்ந்த ஒரு மாதத்திற்கு பிறகு தான் புதிய டீன் பணியமர்த்தப்பட்டார். அவர் முதலில் பார்ப்பதற்கு இனியவர் போல தோற்றம் கொண்டிருந்தார். ஆனால், எங்கள் துறையில் அவரை அறிமுகம் செய்துக் கொண்ட போது.. கடைசியாக… … உங்களுக்கு என்னை வரும் நாட்களில் பிடிக்காமல் கூட போகலாம் என்று பகிரங்கமாக கூறினார்.
சரி! வயதில் மூத்தவர். ஏதோ விளையாட்டாக கூறுகிறார் போல என்று கருதினோம். டீன் வரும் வரை எங்களுடன் சகஜமாக பேசி பழகி வந்த மற்றொரு மூத்த பேராசிரியை, டீன் வந்த பிறகு மொத்தமாக மாறிவிட்டார். நான், என் வயதொத்த அந்த பேராசிரியை மற்றும் ஒரு ஆண் பேராசிரியர் ஒரு குழு என்று வைத்துக் கொண்டால். டீனும், அந்த மூத்த பேராசிரியையும் ஒரு குழு. நாங்கள் மூன்று பேர் காபி குடித்தாலும், பயோ-மெட்ரிக் அட்டன்டன்ஸில் பன்ச் வைக்க ஒரு நிமிடம் தாமதம் ஆனாலும், உடனே மெயில் செய்துவிடுவார்.
டீனுக்கு மட்டுமல்ல, கல்லூரி மேலாண்மை குழு உறுபினர்கள் அனைவருக்கம் அந்த மின்னஞ்சல் போகும். உண்மையில் என்ன செய்தி என்றால்… அந்த மூத்த பேராசிரியை மீது மாணவர்களுக்கும் பெரிதாக மதிப்பில்லை. தன் பேச்சை கேட்கும் மாணவர்கள், தான் சொல்லும் வேலையை செய்யும் மாணவர்களுக்கு மட்டும் அதிக மார்க். மற்றவர்களுக்கு குறைந்த மார்க் என பிரித்து பழகும் நபர் அவர். அதுமட்டுமின்றி, அவர் தன் வேலையையும் பெரிதாக செய்வதில்லை.
தனக்கு தெரியாத, தனக்கு சரியாக வராத பாடங்களை சரியாக எடுக்க மாட்டார் என்ற செய்தியும் மாணவர்கள் மூலம் அறியவந்தேன். எங்கே இத்தனை நாள் இந்த கல்லூரியில் இருந்த தன் பெயர் கெட்டுவிடுமோ, புதியதாக வந்தவர்கள் நற்பெயர் வாங்கிவிடுவார்களோ என்ற அச்சத்தால்… தன்னை டீன் மற்றும் மேலாண்மை உறுப்பினர்கள் முன் நல்லவள் போல காண்பித்துக் கொள்ள எங்களை பழிவாங்கி கொண்டிருந்தார் அவர். நாங்கள் தவறு செய்திருந்தால் பரவாயில்லை. ப்ரேக் நேரத்தில் பேசுவது, காபி குடிப்பதை எல்லாம் கூட பல பொய்களுடன் சேர்ந்து பொய் கூறி எங்கள் பெயரை கெடுக்க முயற்சி செய்தார்.
ஆரம்பத்தில் துறை சார்ந்த கலந்தாய்வு சந்திப்புகளில் அனைவரது பேச்சும் கேட்கப்படும். இப்போதெல்லாம், டீன் மற்றும் அந்த மூத்த பேராசிரியர் மட்டும் தான் பேசுகிறார்கள். நாங்கள் அவர்கள் சொல்வதை கேட்டு நடந்துக் கொள்ள வேண்டும். எங்கள் பாடங்களை தாண்டி, அவருக்கு வராத பாடங்களையும் சேர்த்து நாங்களே எடுக்க வேண்டும். பிடித்த வேலையானாலும் கூட ஓய்வின்றி செய்வதற்கு நாங்கள் ஒன்றும் ரோபோக்கள் இல்லையே.
ஆசிரியர் பணி என்பது ஒரு சேவை. அதற்கு விருப்பப்பட்டு வரவேண்டும். ஆனால், இன்று மிக குறைந்த சதவிகித ஆசிரீயர்கள் மட்டுமே பிடித்து, கனவுடன் இந்த வேலைக்கு வருகிறார்கள். மற்றவர்கள் எல்லாம், படித்ததற்கு வேலை கிடைக்கவில்லை என்றால் அதற்கு மேல் இன்னொரு டிகிரி அல்லது பி.எட் படித்துவிட்டு சம்பளத்திற்காக இந்த வேலைக்கு வந்துவிடுகிறார்கள். இதனால் மக்கள், சமூகம் என்பதை தாண்டி ஒரு தலைமுறையே பாதிக்கப்படுகிறது என்பது தான் உண்மை. மேலும், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் கல்வியை லாப நோக்கத்துடன் தான் காண்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை மாணவர்கள் முதலீட்டாளர்கள். அவர்களை வைத்து லாபம் பார்க்க வேண்டும். அதுவும் கொள்ளை லாபம். எனவே, அதிக ஊதியம் கொடுத்து நல்ல ஆசிரியர்களை பணியமர்த்த அவர்களுக்கு நேரமில்லை. எனவே, திறமை உள்ளவர்களா? இல்லையா? என்று பாராமல் இரண்டு டிகிரி படித்திருந்தால் போதும் என வேலை கொடுத்துவிடுகிறார்கள். இதனால், ஆசிரியர் வேலையே மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
நான் வேலை செய்துவரும் கல்லூரி நிறுவனம் என்று மட்டுமில்லை.. பெரும்பாலான இடங்களில்… என்னை போல கனவுகளுடன் வருவோரும் சிலரால், சிலரது தனிப்பட்ட வஞ்சகத்தால் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள். ஒவ்வொரு கல்லூரியிலும் என்னை போன்ற ஒருசிலர் கனவுகளும், ஆசைகளும் இருந்தும் பிடித்த வேலையை முழுமையாக செய்ய முடியாமல்… சில அதிகார வர்க்க, புத்தி கொண்டவர்களால் தடுமாறி வருகிறோம். இதை கேட்க யாருமில்லை… சில கல்லூரிடல் தங்களிடம் இல்லாத வசதிகளை இருக்கிறது என்று கூறி மாணவர்களை ஏமாற்றி, அரசாங்கத்தை ஏமாற்றி கிரேடு மட்டும் வாங்கி வைத்துக் கொள்கிறார்களே தவிர. அவர்களால் மாணவர்களின் வாழ்க்கையில் எந்த கிரேடு உயர்வும் காணப்படுவதில்லை.
சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை வெளியானது. அதில், இந்தியாவில் நிறைய இளம் பட்டதாரிகள் ஆண்டுதோறும் தேர்ச்சி பெற்று வெளிவருகிறார்கள். ஆனால், அவர்களிடம் பட்டம் மட்டும் தான் இருக்கிறதே தவிர ஸ்கில் இல்லை என்று அதில் கூறப்பட்டிருந்தது.
யார் வேண்டுமானாலும் படித்து தேர்வில் தேர்ச்சி பெற்றுவிடலாம். ஆனால், ஸ்கில் என்பது கற்பிக்கும் ஆசானிடம் இருந்து வருவது. அவர்களது வழிக்காட்டுதலில் இருந்து வருவது. அப்படியான நல்ல ஆசான்களுக்கு இங்கே பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதற்கு அரசு தான் ஒரு தீர்வு காண வேண்டும். ஆனால், நம் ஊரில் அரசிடம் இருந்தும் தீர்வு காண வேண்டும், அரசியலிலும் நல்லதோர் தீர்வு காண வேண்டும். “