செஸ்ட்ர் லீ ஸ்ட்ரீட்டில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை ஊதித்தள்ளியது இங்கிலாந்து, இதன் மூலம் 4-0 என்று ஒயிட்வாஷுக்குத் தயாரானது இங்கிலாந்து.
முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா ஏரோன் பிஞ்ச், ஷான் மார்ஷ் சதங்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 310 ரன்கள் எடுத்தது, இலக்கை விரட்டிய இங்கிலாந்து ஜேசன் ராயின் 83 பந்து சதத்தினாலும் பேர்ஸ்டோ, பட்லர் அதிரடியில் 45வது ஓவரில் 314/4 என்று வெற்றி பெற்று தொடரில் 4-0 என்று முன்னிலை பெற்றது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து கடைசி 9 ஒருநாள் போட்டிகளில் 8-ல் வென்றுள்ளது.
ஆஸ்திரேலிய அணி ஏரோன் பிஞ்ச்சின் 106 பந்துகள் 100 ரன்களுடனும் ஷான் மார்ஷின் 92 பந்துகள் 101 ரன்களிலும் 225/1 என்று 39வது ஓவரில் பெரிய அதிரடிக்கான நடைமேடையுடன் இருந்தது, ஆனால் மார்க் உட் திறமையாக வீசி ஃபிஞ்ச்சை எல்.பியும் அதே ஓவரில் ஸ்டாய்னிஸை இன்ஸ்விங்கரில் பவுல்டு செய்தார். ஆஸி. 227/3 என்று ஆக 48வது ஓவரில் கேரி, ஷான் மார்ஷ், நெசர் ஆகியோரை வீழ்த்தி 50வது ஓவரில் கேப்டன் டிம் பெய்னையும் காலி செய்து 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற கடைசி 3 ஓவர்களில் 14 ரன்களையே ஆஸ்திரேலியா எடுக்க முடிந்தது.
9வது ஓவரில் ஜோ ரூட்டைப் பந்து வீசக் கொண்டு வர ஆஸ்திரேலிய வீரர்களான அதிரடி பிஞ்ச், ஷான் மார்ஷ் இருவருமே, பாய்காட் வர்ணிக்கும் இந்த லாலிபாப் பவுலரை சமத்காரமாக ஆட அவர் முழு 10 ஓவர்களையும் வீசி 44 ரன்களையே கொடுத்துச் சிக்கனம் காட்டினார், இவரை வெளுத்திருந்தால் ஆஸ்திரேலியா எளிதில் 350 ரன்கள் சென்றிருக்கும். அதுவும் தன் நூற்றுக்கும் மேலான ஒருநாள் போட்டி பங்கேற்பில் ஜோ ரூட் 2வதுமுறையாக 10 ஒவர்களையும் வீசியுள்ளார். இங்கேயே ஆஸ்திரேலியப் பின்னடைவு ஆரம்பித்தது என்றே கூற வேண்டும்.
ஏரோன் பிஞ்ச் 65 பந்துகளில் அரைசதம் கண்டார், மிகவும் பழைய பாணி ஆட்டம், இங்கிலாந்து 65 பந்துகளில் 100 என்று சாத்துமுறை கொடுக்கும் போது அரைசதம் என்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும். சரி ஷான் மார்ஷ் என்ன செய்தார் அவரது அரைசதம் 62 பந்துகளில் வந்தது. ட்ராவிஸ் ஹெட் சிலபல ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு உரியதைக் கொடுத்து 43 பந்துகளில் அரைசதம் கண்டார். ஆனால் அதே ஷார்ட் பிட்சில் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனார்.
ஷான் மார்ஷ் ஒரு ஓவரில் தன்னை வெளிப்படுத்தினார் அடில் ரஷீத்தின் ஒரே ஓவரில் 25 ரன்களை விளாசி சதத்தை 91 பந்துகளில் எடுத்தார். ஆனால் இவரும் அபாரமான கேட்சிற்கு கடைசியில் வெளியேறினார், ஜேசன் ராய், எல்லைக் கயிற்றைத் தாண்டுவோம் என்று எண்ணி பந்தை சாமர்த்தியமாக உள்ளே தூக்கி எறிய ஓவர்ட்டன் கேட்சை பூர்த்தி செய்தார். இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் 10 ஓவர்களில் 73 ரன்கள் 2 விக்கெட். மார்க் உட் 2 விக்கெட், டேவிட் வில்லே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பேர்ஸ்டோ, ராய், பட்லர் விரட்டலில் மீண்டும் ஆஸி. ஓட்டம்
312-ல்லாம் ஒரு இலக்கா என்ற வகையில் ஜேசன் ராயும் பேர்ஸ்டோவும் தங்கள் இஷ்டத்துக்கு ஆஸி களவியூகத்தில் ஓட்டைகளைக் கண்டுபிடித்து பவுண்டரிகளாகச் சாத்தி 23.4 ஓவர்களில் 174 ரன்களைச் சேர்த்தனர். ஜேசன் ராய் 36 பந்துகளில் அரைசதம் கண்டவர் 81 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் சதம் விளாசினார். இந்த தொடரில் ராயின் 2வது சதமாகும் இது. ராய், பாயிண்டில் கேட்ச் ஆனார், பேர்ஸ்டோ 66 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 79 ரன்களுக்கு டிம் பெய்னிடம் கேட்ச் ஆகி ஸ்டான்லேக் பந்தில் வெளியேறினார். ரூட் ஸ்லாக் ஸ்வீப்பை மிஸ் செய்து 27 ரன்களில் ஆகரிடம் பவுல்டு ஆக, மோர்கனும் ஆகர் பந்தில் டிம் பெய்னிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.
அப்போதுதான் மோர்கன் இறங்கினார், கடந்த சாதனை (481 ரன்கள்) போட்டியில் தான் பங்களிப்பு செய்யாத ஆக்ரோஷம் அவரிடம் இருந்தது 29 பந்துகளில் 9 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக இருந்தார். அலெக்ஸ் ஹேல்ஸ் ஒரு மாற்றத்துக்காக 45 பந்துகளில் 34 ரன்கள் என்று மெதுவாக ஆடினார், எப்போது வேண்டுமானாலும் இந்த ஆஸி.யை அடித்து நொறுக்கலாம் என்ற நம்பிக்கையோ, இல்லை தெனாவட்டோ, 45வது ஒவரில் 314/4 என்று இங்கிலாந்து வெற்றி பெற்று 4-0 என்று முன்னிலை பெற்றது.