விரைவில் வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் அம்சம்!

வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ மற்றும் வாய்ஸ் கால் அம்சம் ஆன்ட்ராய்டு பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது.

வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் வழங்குவதற்கான சோதனை ஆன்ட்ராய்டு பீட்டா செயலியில் மேற்கொள்ளப்படுகிறது.
சமீபத்திய வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா v2.18.189 அல்லது v2.18.192 பதிப்புகளில் இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ஆன்ட்ராய்டு பீட்டா மற்றும் சில ஐஓஎஸ் பயனர்களுக்கு க்ரூப் காலிங் வசதி மே மாத வாக்கில் ஐஓஎஸ்-இல் v2.18.52  மற்றும் ஆன்ட்ராய்டு பீட்டா v2.18.145 வெர்ஷன்களிலும் சோதனை செய்யப்பட்டது.
இத்துடன் விண்டோஸ் தளங்களிலும் க்ரூப் வீடியோ மற்றும் ஆடியோ கால் அம்சம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியான நிலையில், இது குறித்து ஃபேஸ்புக் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும் வரும் வாரங்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு பீட்டா பதிப்புகளில் க்ரூப் காலிங் வசதி சோதனை செய்யப்படுகிறது. இம்முறை இந்த அம்சம் அனைத்து சாதனங்களிலும் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்த முதலில் வீடியோ அல்லது வாய்ஸ் கால் மேற்கொள்ள வேண்டும். பின் அழைப்பு இணைக்கப்பட்டதும், திரையில் ஆட் பெர்சன் (Add Person) ஐகான் வலதுபுறம் காணப்படும். இதை க்ளிக் செய்தால் பெயர் பட்டியல் தெரியும்.
இனி நீங்கள் தேர்வு செய்யும் மூன்றாவது நபர் உங்களின் அழைப்பினை ஏற்கும் பட்சத்தில் இரண்டு பெயர்களும் திரையில் தோன்றும். உடனடியாக க்ரூப் ஆடியோ மற்றும் வீடியோ கால் பயன்படுத்த கூகுள் பிளே வாட்ஸ்அப் பீட்டா பதிப்புக்கு பதிவு செய்வது அவசியமாகும்.
ஐபோனிலும் க்ரூப் கால்களை பெறவும், அழைக்கவும் முடியும். ஐஓஎஸ் தளத்தில் சரவர் சார்ந்த அப்டேட் முறையில் வழங்கப்படுகிறது. இதனால் இந்த அம்சம் குறைந்த எண்ணிக்கையிலான பயனர்களுக்கு படிப்படியாக வழங்கப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் இந்த அம்சம் முதல்முறையாக கண்டறியப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற ஃபேஸ்புக் எஃப்8 டெவலப்பர் நிகழ்வில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஃபேஸ்புக் மூலம் வெளியிடப்பட்டது.