காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது! – அமெரிக்கா

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக மூன்றாவது நாடு தலையிடக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

தலைநகர் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான சீனத் தூதர் லோ சாங்குயி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் ஆகிய 3 நாடுகளும் அங்கம் வகித்து வருகிறது. இந்த அமைப்பின்கீழ் 3 நாடுகளும் ஒத்துழைப்பை அதிகரித்துக் கொள்ள வேண்டும். அப்படி செய்வதால் இந்தியா, பாகிஸ்தான் இடையேயான விவகாரங்களுக்கு தீர்வு காண உதவியாக இருக்கும் என தெரிவித்தார். ஆனால் சீனாவின் இந்த கருத்தை இந்தியா திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறியதாவது:

ஜம்முகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமெரிக்கா கடைப்பிடித்து வரும் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவும், பாகிஸ்தானும் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக உள்ளது. இதில் மூன்றாவது நாடு தலையிடக் கூடாது என வலியுறுத்தினார்.