உலகெங்கும் பதிப்புத் துறை சார்ந்த கூடுகைகளில், “விரைவில் அச்சு நூல் மறைந்து விடும், இனி மின்னூல்கள் மட்டுமே தழைக்கும்” என்று சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடர்ந்து பேசப்பட்டுவந்தது. பெரும் பதிப்பாளர்களை நோக்கிப் பல வரலாற்றுத் தீர்ப்புகளை வீசினர் தொழில்நுட்பக் கற்றுக்குட்டிகள். பதிப்புலகுக்குப் பெரும் பங்களித்த ஆளுமைகள் பலர் மனங்கலங்கி நின்றிருப்பதைக் கண்டிருக்கிறேன்.
தொழில்நுட்பத்தால் மட்டும் வரலாறு தீர்மானிக்கப்படுவதில்லை. தொழில்நுட்பத் தின் தாக்கத்தை மறுப்பது மூடத்தனம். ஆனால், தொழில்நுட்பம் பண்பாட்டின் செல்வாக்குக்கு உட்பட்டது என்பதை உணரா திருப்பது அறியாமை. அச்சு இயந்திரங்கள் வந்ததும் ஓலைச்சுவடி மறையவில்லை. அதற்குச் சில நூற்றாண்டுகள் ஆயின. ஏனெனில், அது தொழில்நுட்ப மாற்றம் மட்டுமல்ல, பண்பாட்டு மாற்றமும்தான். அதே நேரம், அச்சுக் கோக்கும் முறை நீங்கிக் கணினியில் உள்ளீடு செய்யும் முறை ஆதிக்கம் பெற 10 ஆண்டுகள் ஆயின. காரணம், அது அதிகமும் தொழில்நுட்ப மாற்றம் மட்டும்.
இன்றைய சூழலில் அச்சு நூலுக்கும் மின்நூலுக்கும் சாதகங்களும் பாதகங்களும் உள்ளன. இன்றைய வாழ்க்கைமுறையில் நூல் களுக்காக ஓர் அறையை ஒதுக்குவது அல்லது கணிசமான இடத்தைக் கொடுப்பது பலராலும் இயலாதது. நூல்களைப் படிக்கப் பயணங்கள் தோதானவை. ஆனால், இன்று விமானங்களில் கொண்டுசெல்லப்படக்கூடிய எடை ஆகக் குறைவு. பெரும் நூல்களைக் கையில் தாங்கிப் படிக்க எல்லோராலும் இயலுவதில்லை. இதுபோன்ற பல காரணிகள் மின்னூல்களின் தேவையை வலியுறுத்து கின்றன.
மின்னூல்களில் இன்னும் பல வசதிகள் உள்ளன. இரவில் பிறரைத் துன்புறுத்தாமல் கிண்டிலின் உள் ஒளியில் வாசிக்க முடியும். கைக்குச் சுமையாக இல்லாத எடை. எழுத்துருக்களை மாற்றும் சாத்தியம், படிக்கும்போது அகராதியில் பொருள் காணும் வசதி (ஆங்கிலத்தில் உள்ளது; தமிழில் இல்லை), குறைந்த விலை என்று பல சாதகங்கள் உண்டு. குறிப்பாக புத்தகக் கடைகள் இல்லாத தமிழகத்தின் சில வட மாவட்டங்கள், இந்தியாவின் பிற பகுதிகளில் வாழும் தமிழர்கள், அயலில் வாழ்பவர்கள் தமிழ் அச்சு நூல்களைப் பெறுவதில் பல கஷ்டங்கள், கூடுதல் செலவுகள் உள்ளன. இத்தகைய சூழல்களில் மின்னூல் கள் வாசகரைத் தொலைவுகளைக் கடந்து உடனுக்குடன் எட்டுகின்றன.
அச்சு நூல்களின் வருகைக்கு முன்னர் ஓலைச்சுவடிக்கும் கணினி தொழில்நுட்பத் தின் முன்னர் அச்சுக் கோத்தலுக்கும் சாதகங் கள் இருக்கவில்லை. ஆனால், மின்னூல்களின் முன்னர் அச்சு நூல்களுக்குச் சாதகங் கள் உள்ளன. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் தனியாக 50 மின்னூல்களுக்கு ஒரு நூல் அட்டவணை தயாரித்தேன். அதை சென்னை புத்தகச் சந்தையில் இளையர்களாகப் பார்த்துக் கொடுத்தேன். ஐடி துறையில் பணியாற்றிய பலரும் அதைக் கையில்கூட வாங்கவில்லை. அச்சு நூல்கள்தான் வேண்டும் என்றார்கள். இந்தப் போக்கு இன்று பல இடங்களிலும் தலைகாட்டுகிறது. பதின்பருவத்தினர்கூட அச்சு நூல்களையே விரும்புகின்றனர்.
அச்சு நூல் தரும் உடைமை உணர்வை மின்னூல்கள் தருவதில்லை. ஒரு வாசகருக்கு சில நூல்களின் பதிப்புகளோடு ஆழமான ஒட்டுதல் ஏற்படும். அவற்றைப் பொக்கிஷமாகப் பாதுகாப்பார்கள். அதற்குக் காரணங்கள் பல இருக்கலாம். ஆகச் சிறந்த பதிப்பாக இருக்கலாம், காதலன் கொடுத்த முதல் பரிசாக இருக்கலாம், முதல் சம்பளத்தில் வாங்கிய தாக இருக்கலாம், தந்தை விட்டுச்சென்ற சொத்தாக இருக்கலாம், மனம் கவர்ந்த எழுத்தாளரிடம் கையெழுத்து பெற்ற நூலாக இருக்கலாம். அச்சு நூலுடனான இத்தகைய உணர்வு, உறவு ஒரு மின்னூலுடன் சாத்திய மில்லை.
ஒரு நூல் வாங்குகிறீர்கள். பின்னர் அது தடைசெய்யப்படுகிறது. இப்போது உங்களிடமிருக்கும் நூல் உங்களுடையதுதான். ஆனால், நீங்கள் கிண்டிலில் ஒரு நூல் வாங்குகிறீர்கள். அதன் மீது ஒரு புகார் வருகிறது. ‘அமேசான்’ அதை விற்பனை செய்வதில்லை என்று முடிவெடுக்கிறது.
இப்போது நீங்கள் வாங்கிய நூல் கிண்டிலிலிருந்து மறைந்துவிடும். அதாவது, நீங்கள் கிண்டிலில் வாங்கும் மின்னூல்கள் உங்களுக்கு உடைமையாவது இல்லை. அவை உங்களுக்கு இரவல் தரப்படுகின்றன, அவ்வளவுதான். அந்த இரவல் நிரந்தரமானதாக இருக்கலாம் அல்லது திரும்பப் பெறப்படலாம்.
வாங்கிய மின்னூல்களை 100 ஆண்டு களுக்குப் பிறகு படிக்க முடியுமா? இந்தத் தொழில்நுட்பம் அன்றும் தழைக்குமா? இந்தக் கேள்விகளுக்குச் சரியான பதில் இல்லை.
ஆனால், நீங்கள் இன்று வாங்கும் அச்சு நூல்களை முறையாகப் பாதுகாத்தால் 100 ஆண்டுகளுக்குப் பிறகும் படிக்க முடியும். அதேபோல ஒரு வழக்கில் நீங்கள் ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய நூலைச் சாட்சியமாக, ஆவணமாகச் சேர்க்க முடியும். ஒரு மின்னூலுக்கு அந்த மதிப்பு இல்லை. ஏனெனில், மென் கோப்புகள் அனைத்தையுமே மாற்ற முடியும், திரிக்க முடியும்.
இன்று 19, 20 வயதான தலைமுறை, இணையத்துடன் ஸ்மார்ட் போனுடனும் சமூக வலைதளங்களுடனும் வளர்ந்தவர்கள். இவர்களை இணையம் எனும் திணைப் பரப்பின் மண்ணின் மைந்தர்கள் எனலாம். இவர்கள் வாசிப்பு பற்றி அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், அவர்கள் அச்சு நூல்களை விரும்புவது வியப்புடன் கவனிக்கப்பட்டது. குறிப்பாக பாடப்புத்தகங்கள். அச்சு நூல்களை அவர்கள் கூடுதல் கவனத்துடன் படிக் கிறார்கள், நன்றாக நினைவில்கொள்ள முடி கிறது, செய்திகளைப் பக்க எண்களுடன் தொடர்புபடுத்தி நினைவில்கொள்கிறார்கள். அத்தோடு முக்கியமான விஷயம், அச்சு நூல்களைப் படிக்கையில் முழுக் கவனமும் படிப்பில் இருப்பதாகவும் மின்னூல்களைப் படிக்கையில் அதே சாதனத்தில் பல திக்கு களுக்குச் சென்று விளையாடுவதால் கவனச் சிதைவு ஏற்படுவதாகவும் நினைக்கிறார்கள்.
உலகெங்கும் மின்னூல்களின் வளர்ச்சி மட்டுப்பட்டுவருகிறது. தொழில்நுட்பங்களை உடன் அணைத்துக்கொள்ளும் அமெரிக்காவிலும் ஐந்தாண்டுகளுக்கு முந்தைய மவுசு இப்போது இல்லை. மின்னூலும் அச்சு நூலும் கூட்டாகத் தழைக்கும் என்பதே வலுப்பெற்றுவரும் எண்ணம். ஆக, அச்சு நூல்களுக்கான தேவை தொடர்ந்து இருந்துகொண்டிருக்கும். அச்சு நூல்களுக்கான மரண முன்னறிவிப்புகளை நிறுத்திக்கொள்வது நல்லது.
கண்ணன், ஆசிரியர் – பதிப்பாளர், ‘காலச்சுவடு பதிப்பகம்’,
தொடர்புக்கு: kannan31@gmail.com