எல்லோருக்கும் ஆச்சர்யமான ஒரு அறிவிப்பு விரைவில்!

நடிகர், இயக்குநர் என பன்முகத் திறமைகளை கொண்ட பார்த்திபன் எல்லோருக்கும் ஆச்சர்யமான ஒரு அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறி எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளார்.

நடிகர், இயக்குனர் பார்த்திபன் வித்தியாசமான சிந்தனைக்காக மட்டும் அல்லாமல் சமூக அக்கறைக்காகவும் பாராட்டப்படுபவர். அவர் அரசியலுக்கு வரப்போவதாக செய்தி வர, இதுகுறித்து பார்த்திபனிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது,

‘பெசண்ட் நகரில் ஒரு படகு போட்டியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டேன். பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து அந்த குப்பைகள் போடப்படுவதால் மீனவர்களின் வலைகளில் 20 சதவீதம் தான் மீன்கள் கிடைக்கின்றன. 80 சதவீதம் பிளாஸ்டிக் பைகளும் பாட்டில்களும் தான் வருகிறது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கடலில் இருந்து எடுக்கப்படும் கழிவுகள் மீண்டும் கடலுக்குள் செல்வதை தவிர்க்க ஒரு யோசனை கூறினேன்.

என்னுடைய சொந்த செலவில் பெரிய பெரிய பைகள் வாங்கி தருகிறேன் என்றும் அவற்றின் மூலம் அப்புறப்படுத்தலாம் என்றும் கூறினேன். அப்போது நிருபர்கள் ரஜினி, கமல் அரசியலுக்கு வருவதை பற்றி கேட்டபோது ‘நான் அரசியலுக்கு வரும்போது சொல்கிறேன்’ என்றேன்.

எப்போது என்று கேட்டால் நான் சமூக செயற்பாட்டில் இருப்பதால் இப்போதே அரசியலில் தான் இருக்கிறேன். காலம் வரும்போது நிச்சயம் முழுநேர அரசியலுக்கு வருவேன். கட்சி தொடங்குவது முக்கியம் அல்ல. சமூகத்துக்கு அவரவர்கள் பங்களிப்பை இதுபோல செய்தால் போதும்.

குப்பத்து ராஜாவில் வடசென்னை சேரிப்பகுதியில் வாழும் கதாபாத்திரம், திட்டம் போட்டு திருடற கூட்டம் படத்தில் வித்தியாசமான திருடர் கூட்ட தலைவன், துருவ நட்சத்திரம் படத்தில் ஸ்டைலிஷான ஒரு வேடம். மூன்றுமே வேறு வேறு விதமான கதாபாத்திரங்கள். என்னுடைய கதாபாத்திரங்களை தேர்வு செய்யும்போது அந்த வேடம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். இந்த படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி இருக்க வேண்டியவை. தாமதம் ஆனதால் கடந்த ஆண்டு எனக்கு படமே இல்லாதது போல் ஆகி விட்டது.

எல்லோருக்கும் ஆச்சர்யமான ஒரு அறிவிப்பு விரைவில் வரும்.