ட்ரம்ப் – கிம் சந்திப்பு: பலன் யாருக்கு?

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உடனான சந்திப்புக்கு பிறகு நாடு திரும்பியதும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ட்விட்டரில் இவ்வாறு பதிவிடுகிறார் ‘நம்முடைய மிகப்பெரிய மற்றும் மிக ஆபத்தான பிரச்சினை வட கொரியா என்று அதிபர் ஒபாமா சொன்னார். இனிமேல் அப்படி இல்லை. இன்றிரவு நிம்மதியாக உறங்குங்கள்’. ஓவர் நைட்டில் ஒபாமா ஆகிவிட்டான் என்று ஒரு சொலவடை நம் ஊரில் உண்டு. அதுபோல, கிம் ஜாங் உன் உடனான சந்திப்புக்குப் பிறகு தனது பழைய நடவடிக்கைகளை மறக்கச் செய்து, ஒரே இரவில் ஒபாமாவின் வெளியுறவுத் திட்டமிடல்களைத் தாண்டி, டொனால்டு ட்ரம்ப் ஒருபடி மேலே சென்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

பதவியிலுள்ள அமெரிக்க அதிபர் ஒருவர் பரம எதிரியான வட கொரியாவின் அதிபரை முதல்முறையாக சந்திக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை ட்ரம்பும், கிம் ஜாங் உன்னும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். அணு ஆயதங்களை வைத்திருக்கும் பைத்தியக்காரன், மனநிலை குழம்பியவர் என்று மாற்றி மாற்றி திட்டிக்கொண்டிருந்த இருவரும் 13 விநாடிகள் கை குலுக்குகிறார்கள்.

பத்திரிகையாளர்களும், கேமராமேன்களும் சூழ்ந்துநிற்க தர்மசங்கடமான முக பாவத்தோடு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறார்கள். பின்பு ட்ரம்ப், கிம்மை அழைத்துசெல்ல மெல்ல சகஜ நிலை திரும்புகிறது. உலக நாடுகளுக்கிடையேயான அமைதி நடவடிக்கைகளுக்கு, அணு ஆயுத ஒழிப்புக்கு இந்த சந்திப்பு ஒரு முக்கியமான தொடக்கமா, உலக வர்த்தகம் மேம்பட இந்த சந்திப்பு உதவுமா என்பது நம்முன் உள்ள மிகப்பெரிய கேள்வி.
அமெரிக்கா- வடகொரியா ஒப்பந்தம்

தனது அணு ஆயதங்களை முழுமையாக அழிப்பதாக வட கொரியா உறுதி அளித்திருக்கிறது. அதற்கு பிரதிபலனாக வட கொரியாவுக்கு போதுமான பாதுகாப்பை அமெரிக்கா அளிக்கும். தென் கொரியாவுடன் இணைந்து கொரிய தீபகற்ப பகுதிகளில் அமெரிக்கா செய்யும் ராணுவ பயிற்சிகள் தொடராது என்றும் அமெரிக்கா உறுதி அளித்திருக்கிறது. ஆனால் வட கொரியாமீது அமெரிக்கா விதித்திருக்கும் பொருளாதார தடைகள் எதுவும் விலக்கிக் கொள்ளப்படவில்லை. தென் கொரியப் பகுதிகளில் உள்ள தனது ராணுவத்தை காலப்போக்கில் விலக்கிக் கொள்வதாகவும் அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.

இந்த ஒப்பந்தத்துக்கு முன்னதாக முழுமையான, திரும்ப உருவாக்க முடியாத வகையில் அணு ஆயுதம் ஒழிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த ஒப்பந்தத்தில் அப்படிப்பட்ட வார்த்தைகள் ஏதும் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. எந்த விதமான கால எல்லையும் வரையறை செய்யப்படவில்லை. அணு ஆயதங்கள் எப்போது ஒழிக்கப்படும், எப்போதிலிருந்து அமெரிக்கா, வட கொரியாவுக்கு பாதுகாப்பு அளிக்கும் என எதற்கும் பதில் இல்லை.

உடனடியாக அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகளை கிம் தொடங்குவார் என ட்ரம்ப் கூறுகிறார். இவ்வளவு நாட்கள் பரம எதிரியாக இருந்த அமெரிக்கா பாதுகாப்பு அளிப்பதாக சொன்னவுடன் அந்த வார்த்தைகளை நம்பி வட கொரியா அணு ஆயுதங்களை ஒழிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என்பது நம்பமுடியாததாகவே உள்ளது. இருப்பினும் இந்த சந்திப்புக்கு முன்னதாக கடந்த மே 24 அன்று புங்யே-ரி அணு சோதனை மையத்தை அழித்ததாக வட கொரியா சொல்லியிருப்பது நம்பிக்கை தரும் அறிகுறி.

யாருக்கு நன்மை?

ட்ரம்ப், கிம் இருவருமே கொள்கை அளவில் உலகுக்கு ஆபத்தானவர்கள்தான். ஒருவர் தொடர்ந்து மூன்றாம் தலைமுறையாக ஒரு நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடத்துபவர், தன் நாடு எப்படி இருக்கிறதென்றே வெளி உலகிற்கு காட்டாதவர், ஜனநாயகத்தை, கருத்து சுதந்திரத்தை முடக்குகிறவர். மற்றொருவர் தன் நாடு மட்டும் வாழ்ந்தால் போதும், அனைத்தும் தன் நாட்டுக்கே, தன் மக்களுக்கே என்கிறவர். இவர்கள் இருவரின் கொள்கைகளும் பெரிய அளவில் வரவேற்பு பெறுமாயின் உலகம் ஒருபோதும் சகஜ நிலையில் இருக்கமுடியாது.

இருப்பினும் ட்ரம்ப், கிம் இருவரும் தங்களது பழைய நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு இப்படி ஒரு நிகழ்வை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டியிருப்பதன்மூலம் வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையே நிலவிவந்த மறைமுக போர் தற்காலிகமாக முடிவுக்கு வந்திருப்பது நன்மையே. வீடு திரும்புவதற்குள் ட்ரம்ப் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் வாய்ப்புண்டு என ஈரான் செய்தி தொடர்பாளர் கூறியிருப்பது வேடிக்கையாக இருந்தாலும், சில நாட்களிலேயே ட்ரம்ப் அவ்வாறு மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

வட கொரியா மற்றும் ஆசியப் பகுதிகளில் சீனா செலுத்தி வரும் தாக்கத்தை ஓரளவுக்கு குறைப்பதற்கு ட்ரம்புக்கும், உலக அரங்கில் அமெரிக்க அதிபருக்கு இணையாக தனது பிம்பத்தைக் கட்டியெழுப்ப கிம்முக்கும் இந்த சந்திப்பு உதவியிருக்கிறதென்று சொல்லலாம். அதேவேளையில் இதற்கு முன் புஷ் அமெரிக்க அதிபராக இருந்தபோது ஆறு நாடுகளுக்கு இடையே நடந்த சந்திப்பில் வட கொரியா செய்துகொண்ட இதேபோன்ற ஒப்பந்தம் என்ன ஆனது என்பதும் யோசிக்கவேண்டிய விஷயம்தான்.

பொருளாதார பலன்கள்

அணு ஆயுதத்தை ஒழிக்கப்போவதாக உலகத்துக்கு காட்டவேண்டிய நிர்பந்தம் பொருளாதார ரீதியிலும் வட கொரியாவுக்கு ஏற்பட்டது என்றுதான் சொல்லவேண்டும். 2017-ம் ஆண்டு ஜப்பான் கடலில் வட கொரியா வீசிய ஏவுகணை அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்துக்கு குறிவைக்கப்பட்டது என்று சொல்லப்பட்டதால் இரு நாடுகளுக்கும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. உலக பங்கு சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்தன.

ஐநா பாதுகாப்பு சபை, வட கொரியாமீது புதிய பொருளாதார தடைகளை விதித்தது. இந்த பொருளாதார தடையை அமெரிக்கா முன்னெடுப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் வட கொரியாவின் முக்கிய வர்த்தக கூட்டுறவான சீனா இந்த பொருளாதார தடைக்கு ஆதரவாக ஐநாவில் வாக்களித்தது.

ரஷ்யாவும் வட கொரியா மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்கலாம் என ஒப்புக்கொண்டது. இது ஒரு மிக முக்கியமான மாற்றம். கிம் ஜாங் உன்னுக்கு இந்த முடிவு மிகப்பெரிய அதிர்ச்சியை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும். இந்த பொருளாதார தடைதான் கிம்மின் மனதை மாற்றிய முக்கியமான காரணியாக இருக்கக்கூடும். இந்த பொருளாதார தடையிலிருந்து விலக்கு பெறுவதற்காக கிம் கடுமையாக முயற்சிப்பார் என்று நிச்சயம் சொல்லலாம்.

ட்ரம்புக்கும், கிம் ஜாங் உன்னுக்கும் நடந்த சந்திப்பைத் தொடர்ந்து இந்திய பங்கு சந்தை கடந்த திங்களன்று 0.7 சதவீதம் ஏற்றம் கண்டது. உலகளாவிய அளவிலும் இந்தப் போக்கு காணப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகளின் பங்கு சந்தைகள் ஏற்றம் கண்டன. ஆசிய அளவில் ஜப்பான், சீனா, ஹாங்காங், தென் கொரியா போன்ற நாடுகளின் பங்கு சந்தைகள் ஏற்றத்தில் முடிந்தன. பொருளாதார ரீதியில் இந்த சந்திப்பு உலக அளவில் மிக நல்ல பலன்களைக் கொடுத்துள்ளது.

வட கொரியா மீது பொருளாதார தடை விதிக்க ஆதரவளித்த சீனா , வட கொரியாவின் பொருளாதாரம் சரிவதைத் தொடர்ந்து கிம்-ட்ரம்ப் சந்திப்பதற்கான முதற்கட்ட முயற்சிகளை எடுத்ததாகக் கூறப்படுகிறது. ட்ரம்பை சந்திப்பதற்கு முன்பாக சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து கிம் ஆலோசனை நடத்தியிருப்பதை இதனோடு பொருத் திப் பார்க்கலாம். சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகள் இந்த சந்திப்பால் மேம்படும் வாய்ப்பிருப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஆனால் இதற்கான சாத்தியக்கூறுகள் எந்தளவுக்கு உள்ளன என்பதற்கு காலம்தான் பதில் கூற வேண்டும்.

வரும் காலங்களில் தனது முக்கிய வர்த்தக கூட்டாளிகளில் ஒன்றான தென் கொரியாவை அமெரிக்கா எவ்வாறு அணுகப்போகிறது என்பதும் கவனிக்கவேண்டிய விஷயமே. ராணுவ உதவி விலக்கப்படுமேயானால் இந்த உறவு பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் ட்ரம்ப்-கிம் சந்திப்பை தென் கொரியா வரவேற்றுள்ளது நல்ல அறிகுறியே.

இந்த சந்திப்பின் நீண்டகால விளைவுகளால் இந்தியாவுக்கும் பொருளாதார ரீதியிலான நன்மைகள் கிடைக்க உள்ளன. கடந்த காலங்களில் இந்தியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையில் சில கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன. பாகிஸ்தானுக்கு வட கொரியா அணு ஆயுதம் தருவதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. வட கொரியா மீது பொருளாதார தடை விதிக்க இந்தியாவும் ஆதரவு அளித்துள்ளது. ஆனால் பொருளாதார தடைக்கு முன்பு சீனா மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்து வட கொரியாவின் மூன்றாவது முக்கிய வர்த்தக கூட்டாளியாக இந்தியா இருந்து வந்தது.

வட கொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் இன்னமும் நீடிக்கின்றன. அவை மிக விரைவில் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. அவை நீக்கப்பட்டால் இந்திய பொருளாதாரத்துக்கும் அது நன்மை செய்யும். ஆனால் எல்லாமே கிம் ஜாங் உனின் கைகளில்தான் உள்ளது. சீனாவும், ரஷ்யாவும் தன்னை கைவிடும் வாய்ப்புகள் உள்ள நிலையில் உலகத்தோடு சேர்ந்து இயங்குவதைத் தவிர வேறு வழிகள் எதுவும் தற்போதைக்கு கிம்முக்கு இல்லையென்றே சொல்லலாம்.

-akhilkumar.a@thehindutamil.co.in