6-ம் இடம் என்பது ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை பாதாளம்!

உலக சாம்பியனான ஆஸ்திரேலிய அணி ஐசிசி சர்வதேச ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6-வது இடத்துக்குச் சரிந்து, பாகிஸ்தானுக்கும் கீழாகச் சென்றுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி முதல் இரு போட்டிகளிலும் மோசமான தோல்வியை அடைந்த காரணத்தால், தரவரிசைப்பட்டியலில் பாதாளத்துக்குச் சென்றது.

6-ம் இடம் என்பது ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை பாதாளம் என்றேதான் கூற முடியும். இதற்கு முன் கடைசியாக தரவரிசைப்பட்டியலில் 6-ம் இடத்தில் கடந்த 1984ம் ஆண்டு ஆஸ்திரேலியா இருந்தது அதற்குப்பின் இப்போது சரிந்துள்ளது.

இங்கிலாந்து அணியுடன் இன்னும் 3போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில், குறைந்தபட்சம் ஒரு போட்டியில்வென்றால்தான் பாகிஸ்தானைக் காட்டிலும் ஒரு இடம் மேலாக உயர்ந்து நிற்க முடியும்.இல்லாவிட்டால் டிம் பெய்ன் தலைமையிலான அணி மோசமான நிலைக்குச் செல்லும்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 5-0 என்று தோல்வி அடைந்தது. கடைசியாக ஆஸ்திரேலிய அணி 15 ஒருநாள் போட்டிகளில் 13 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி கடைசியாக விளையாடிய 23 ஒருநாள் போட்டிகளில் 9 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதில் 8 போட்டிகளில் கிடைத்த வெற்றி சொந்த நாட்டில் கிடைத்தது. சமீபத்தில் நியூசிலாந்து, இந்தியா, மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்களை இழந்துள்ளது. மேலும், சாம்பியன்ஸ் கோப்பையில் லீக் சுற்றோடு வெளியேறியது.

அந்த சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில்தான் ஆஸ்திரேலியாவை முந்திச்சென்ற பாகிஸ்தான் 5-ம் இடத்தைப் தக்கவைத்தது.

அதிலும் குறிப்பாக பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் சிக்கி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோருக்கு தடைவிதிக்கப்பட்டபின் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கில் மிகவும் வலுவிழந்து காணப்படுகிறது. இதில் பயிற்சியாளர் லீ மானும் சென்றுவிட்டதால், ஜஸ்டின் லாங்கர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி திண்டாடுகிறது.

மேலும், அனுபவ பந்துவீச்சாளர்கள் பாட் கம்மின்ஸ், மிட்ஷெல் ஸ்டார்க், ஜேஸ் ஹேசல்வுட் ஆகியோர் காயத்தால் இங்கிலாந்து தொடரில் இடம் பெறாததால், அனுபவமில்லாத டை, கேன் ரிச்சார்ட்சன் ஆகியோரை நம்பி களமிறங்கியுள்ளது ஆஸ்திரேலியா. இதனால், இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலிய பந்துவீச்சை இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் நொறுக்கி அள்ளிவிட்டனர்.

ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்து மீதமிருக்கும் 3 போட்டிகளில் குறைந்தபட்சம் ஒரு போட்டி, அல்லது மூன்றையும் வென்றால், தரவரிசையில் முன்னேற்றத்தை அடைய முடியும்.

மற்றபடி தரவரிசையில் இங்கிலாந்து அணி 124 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்திய 122 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 113 புள்ளிகளுடன் 3-ம் இடத்திலும் உள்ளன.

நியூசிலாந்து அணி 112 புள்ளிகளுடன் 4-ம் இடத்திலும், பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் 5-ம் இடத்திலும், ஆஸ்திரேலியா 102 புள்ளிகளுடன் 6-ம் இடத்திலும் உள்ளன.

வங்கதேசம்(93), இலங்கை(77), மேற்கிந்தியத்தீவுகள்(69), ஆப்கானிஸ்தான்(63), ஜிம்பாப்வே(55), அயர்லாந்து(38), ஸ்காட்லாந்து(33), ஐக்கிய அரபு அமீரகம்(18) ஆகிய அணிகள் முறையே 7 முதல் 14 இடங்களில் உள்ளன.

இதில் இந்திய அணி ஜூலை மாதம் இங்கிலாந்து சென்று ஒரு நாள் போட்டித்தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்று பெற்றி பெறும் பட்சத்தில், அல்லது 3-0 என்று தொடரை வெல்லும்பட்சத்தில் இங்கிலாந்து அணியை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தைப் பிடிக்க முடியும். அதேசமயம், சொந்த நாட்டில் தொடரை இழந்தால், இங்கிலாந்து அணி 2-ம் இடம் அல்லது 3-ம் இடத்துக்குக் கூட பின்னிறங்கலாம். இந்திய அணி தோற்றாலும் பின்னடைவைச் சந்திக்கும்.