ஆஸ்திரேலிய நாட்டின் பாராளுமன்றத்தில் முதன் முறையாக கொண்டாடப்பட்ட சர்வதேச யோகா தினத்தில் முன்னாள் பிரதமர் டோனி அப்போட் பங்கேற்று யோகா பயிற்சி மேற்கொண்டார்.
ஜுன் 21-ம் திகதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-ம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஆஸ்திரேலிய நாட்டின் வாசுதேவ் கிரியா யோகா என்ற அமைப்பின் சார்பில் அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி அப்பேட் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினார். இதுதொடர்பாக பேசிய அவர், ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் யோகா தின கொண்டாட்டம் துவங்கப்பட்டது மிகவும் சிறப்பானது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனநாயகத்தின் அதிஅற்புத சக்தியாக உருவாகி வரும் இந்தியாவுடன் இந்த யோகா கலைக்கு தொடர்பு இருப்பதாகவும், இந்தியாவின் கலை உலகம் முழுவதும் எடுத்துச்செல்லப்படுவது சிறப்பான ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சமூக நலனுக்காக பாடுபடும் அரசியல் தலைவர்களின் மன உளைச்சலை சரிசெய்ய யோகா உதவும் என ஆஸ்திரேலியாவின் மூத்த அரசியல் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதுதொடர்பாக பேசிய வாசுதேவ் கிரியா யோகா அமைப்பின் தலைவர், உலகில் முதல்முறையாக ஆஸ்திரேலியாவில் தான் நாடாளுமன்றத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டதாகவும், இது வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி என்றும் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து பேசிய அவர், இதே நிகழ்ச்சி வரும் 21-ம் திகதி விக்டோரியன் நாடாளுமன்றத்திலும் நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்த யோகா நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் தலைவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.