சிலியின் காடுகளைப் (Chilean forests) பற்றித் தெரியாதவன், இந்தப் பூமியை நன்குணர்ந்தவன் என்று சொன்னால் அதை நான் ஏற்றுக்கொள்ளவே மாட்டேன்” – என்கிறார் சிலியன் கவிஞர் பாப்லோ நெருடா. அந்தப் பழைய கவிஞர் 50 வருடங்கள் கடந்து வந்து அவர் உலவித்திரிந்த சிலியின் மேற்குக் காடுகளைப் பார்த்தால் “நாம வேற எங்கேயோ இருக்கிறோம்” எனக் குழம்பிவிடுவார். அந்த அளவிற்கு அந்த வனப்பகுதி முழுவதும் மாற்றமடைந்து தற்போது முழுக்கப் பைன் மற்றும் யூகலிப்டஸ் மரங்களால் நிரம்பியுள்ளது.

தமிழகத்தின் கொடைக்கானலைக்கூட ஓர் அரகானியாவாகக் கொள்ளலாம். அங்கும் இதே நிலைதான். முழுவதும் சோலைக் காடுகளாகப் பசுமையாகக் காட்சியளித்த பகுதி, இன்று பண மரங்களால் நிரம்பிக் கிடக்கிறது.

இத்தகைய ஆக்கிரமிப்புத் தாவரங்களை அரகானியாவில் வளர வைத்ததன் மூலமாக அப்பகுதியின் பூர்வகுடிகளான மபூஷே (Mapuche) இன மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டார்கள். அத்தோடு அவர்கள் வாழும் பகுதிகளையும் கட்டாயமாக ஆக்கிரமித்துக்கொண்டு அவர்களை இடம்பெயரச் செய்து பல நூற்றாண்டுகளாக வாழ்ந்துவந்த பூர்வகுடிகளின் வாழிடத்தையும் அழித்துள்ளனர். அதற்கு அரசாங்கமே உதவியாகவும் இருந்து வருகிறது. இதை எதிர்த்தும் தங்கள் நிலத்தை மீட்கும் பொருட்டும் அரகானியாவைச் சேர்ந்த மபூஷே இன மக்கள் கடந்த 20 ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள். சிலி அரசின் அக்கறையற்ற தன்மை அவர்களை மேலும் சீண்டிவிடவே கடந்த நான்காண்டுகளாகத் தீயிடும் போராட்டங்களையும் மேற்கொண்டு வருகிறார்கள்.
மபூஷே நிலம் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு இயக்கத்தின் செயலாளரான ஹெக்டர் லைடுல் (Hector Llaitul) தான் தற்போது அவர்களின் போராட்டத்திற்குத் தலைமை தாங்கிவருகிறார்.

விவசாய நிலங்கள், மரத் தொழிற்சாலை, மரக் கிடங்கு போன்றவற்றிற்குத் தீ வைத்துவிடும் மக்கள், “அவர்களின் லாபமீட்டும் வழிகளைத் தடுத்துவிட்டால் அவர்களே இங்கிருந்து சென்றுவிடுவார்கள் அல்லவா? அதன்பிறகு எங்கள் நிலத்தினை அதன் இயல்புத்தன்மைக்குக் கொண்டுவந்து அதை நாங்கள் பத்திரமாகப் பார்த்துக்கொள்வோம். முதலில் அந்நியர்கள் பேராசைக்காரர்கள் எங்கள் நிலத்தைவிட்டுப் போகவேண்டும். எங்கள் நிலம் எங்களுக்கே”என்கிறார்கள்.
சென்ற மாதம் சாலைகளைப் பயன்படுத்த இயலாத வகையில் சேதப்படுத்தியவர்கள், அதோடு 16 வனச்சரக வாகனங்களுக்குத் தீ வைத்துள்ளனர். சமீபத்தில் அரகானியா பகுதியின் தலைநகரமான டெமூகாவில் மரங்களுக்குத் தீ வைத்துக் காட்டுத் தீயை உருவாக்கியதன் மூலம் அங்குள்ள பண மரங்களைப் பெருமளவில் அழித்துத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்கள். 2017-ம் ஆண்டில் மட்டும் இது மாதிரியான 43 தாக்குதல்களை அந்த மக்கள் செய்துள்ளனர் என்று பதிவுகள் கூறுகின்றன. ஆனால் உயிர்ச் சேதங்கள் எதுவும் நிகழ்ந்ததாக இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
அவர்கள் யாரையும் காயப்படுத்துவதோ, கொல்வதோ அவர்களின் நோக்கமல்ல. தாங்கள் இழந்த உரிமைகளை மீட்டெடுப்பது மட்டுமே அவர்களின் நோக்கம். அதற்காகப் பல்வேறு இன்னல்களைச் சந்தித்துவரும் அந்த மக்களின்மீது அந்நாட்டுக் குடிமக்கள் அனுதாபப் படவேண்டும். அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். மாறாக, இன்று மபூஷே இன மக்கள் அனைவரும் அந்நாட்டுப் பத்திரிக்கைகளாலும், மக்களாலும் சமூக விரோதிகளாக, வன்முறையாளர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். அதைப் பற்றியெல்லாம் கவலைப்படும் நிலையில் அந்தப் பூர்வகுடிகள் தற்போதில்லை. தங்கள் பாதையில் மேன்மேலும் தீவிரமடைந்து கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையெல்லாம் ஒன்று மட்டுமே. தங்கள் மூதாதையர்களின் நிலம்.

மபூஷேக்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் 2014-ம் ஆண்டு உருவான ஒரு கறுப்புப் புள்ளியே நாட்டு மக்கள் அனைவரும் தற்போது அவர்களைச் சமூக விரோதிகளாகப் பார்ப்பதற்குக் காரணம். மபூஷே மக்களைப் பற்றியும் அவர்களின் நீண்டகாலப் போராட்டங்களைப் பற்றியும் புத்தகம் எழுதியுள்ள ஆல்பர்டோ ஹுர்டாடோ பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் நிக்கோலஸ் ரோஜாஸ் கூட இச்சம்பவத்தை அம்மக்களின் போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவாகவே அவரது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மபூஷே மக்களை வழிநடத்திக் கொண்டிருந்தவரும், அந்த அமைப்பின் தலைவருமான செலஸ்டினோ கொர்டோவோ (Celestino Cordovo) 2014-ம் ஆண்டு ஒரு பண்ணைக்குத் தீ வைக்கும் முயற்சியில் வயதான தம்பதியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அதுதான் நாட்டு மக்களின் அனுதாபத்தைப் பெறுவதில் அவர்களைத் தோல்வியடையச் செய்தது. அத்தோடு பத்திரிகைகளும் அவர்களுக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பாக அமைந்தது. ட்ராய் நகரத்தை அழிக்க ட்ரோஜன் வீரர்களுக்குக் கிடைத்த குதிரை பொம்மையைப் போல் இந்தச் சம்பவம் மபூஷே மக்களுக்கு எதிராக அமைந்துவிட்டது. இதைத் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்திக் கொண்டது சிலி அரசாங்கம்.

அவர்களுக்கு எதிரான அனைத்து அடக்குமுறைகளையும் கையாண்டது. தான் செய்த தவறுக்குத் தண்டனையை ஏற்றுக்கொள்ளத் தயாரென்றும் தன் மக்களை விட்டுவிட வேண்டுமென்றும் சிறைக்குள் பல போராட்டங்களை முன்னெடுத்தார் செலஸ்டினோ. அவை எதற்கும் அரசாங்கம் மதிப்பளிக்கவில்லை. கடந்த ஆண்டில் அவரிருந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்குக்கூட அரசாங்கம் எதிர்வினையாற்றவில்லை. இப்போது அரகானியா பகுதி முழுவதும் போலீஸார்களின் நடமாட்டம் நிறைந்து காணப்படுகிறது. அப்பகுதி முழுவதையும் ராணுவமயமாக்குவதிலும் அரசு அதிக முனைப்போடு செயல்பட்டு வருகிறது.
கடந்த நான்காண்டுகளாக மபூஷே மக்களின்மீது தொடுக்கப்படும் போலீஸ் அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிவரும் லைடுல் மீதும் வன்முறையைத் தூண்டிவிடுவதாகக் கடந்த ஆண்டில் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அதற்கு ஆதாரமாக வாட்ஸ் அப்பில் வன்முறையைத் தூண்டும் விதமாகச் செய்திகளைப் பரப்பியதாகக் குறுந்தகவல்கள் காட்டப்பட்டன. ஆனால், அவரிடம் அத்தகைய ஆண்ட்ராய்டு கைப்பேசிகள் இல்லையென்பதும் அடிப்படை நோக்கியா கைப்பேசியைத் தான் அவர் பயன்படுத்துகிறார் என்பதும் நிரூபிக்கப்பட்ட பிறகு இது சோடிக்கப்பட்டதென்று வழக்கைத் தள்ளுபடி செய்து விடுதலை செய்தனர்.
அவர்களது போராட்டத்தால் அங்கிருந்து வெளியேறிய மரத் தொழிற்சாலைகள் சிறிது சிறிதாக மீண்டும் உள்நுழைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. “இப்போதிருக்கும் அரசியலமைப்புச் சட்டம் அவ்வளவு உறுதியானதாக இல்லை, மிகக் கொடூரமான வன்முறைகளைக்கூட இம்மக்களின் மீது மிகச் சாதாரணமாக நடத்துகிறார்கள்” என்று அப்பகுதியின் நிர்வாகி லூயிஸ் மேயோல் அந்நாட்டுப் பத்திரிகைகளில் கூறியுள்ளார்.
“அவர்கள் எங்களுக்குத் தேவையானவற்றைச் செய்யவில்லை, அவர்களுக்கு லாபம் தருவதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள். அதில் எங்களையும் சமாதானப்படுத்த ‘வேலைவாய்ப்பு’ என்ற சிறிய துண்டைப் போடுகிறார்கள் அதற்கு நாங்கள் மயங்கமாட்டோம். எங்களுக்குத் தேவை எங்கள் நிலம்.”

ஒரு கோடியே எண்பது லட்சம் பேர் வாழும் சிலி நாட்டில் 15,00,000 மக்கள்தொகை கொண்ட மபூஷே மக்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கேள்வியெழுப்பவில்லை. மாறாக அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். இதற்குக் காரணம் மபூஷே மக்கள் தீவிரவாதிகள் என்பதல்ல. அவர்கள் தீவிரவாதிகளாக ஆளும் வர்க்கத்தால் சித்தரிக்கப்பட்டுவிட்டார்கள். காரணம், அவர்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடுகிறார்கள். இங்கு அதிகார வர்க்கத்திற்கு எதிராகத் தாங்கள் இழந்த உரிமைகளுக்காகப் போராடும் ஒவ்வொரு ஜீவனும் சமூக விரோதியே.
Eelamurasu Australia Online News Portal