ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி!

ஜேஸன் ராயின் முத்தாய்ப்பான சதம், பட்லரின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால், கார்டிப்பில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 38 ரன்களில் வெற்றிபெற்றது இங்கிலாந்து அணி.

சதம் அடித்து அசத்திய ஜேஸன் ராய் ஆட்டநாயகராக தேர்வு செய்யப்பட்டார். ஆஸ்திரேலிய அணிக்கு புதிய பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் பொறுப்பேற்றபின் அந்த அணி சந்திக்கும் 2-வது தோல்வியாகும்.

இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. வரும் செவ்வாய்கிழமை நாட்டிங்ஹாமில் நடக்கும் 3-வது போட்டியில் இங்கிலாந்து வென்றால் தொடரை கைப்பற்றிவிடும்.

ஆஸ்திரேலிய ஆடவர் அணிக்கு நேற்று சோகமான நாளாக அமைந்துவிட்டது. ஏனென்றால், உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியில் பிரான்ஸ் அணியிடம் தோல்வி, ரக்பி யூனியன் இன்டர்நேஷனல் போட்டியில் அயர்லாந்திடம் தோல்வி, கிரிக்கெட்டில் இங்கிலாந்திடம் தோல்வி என சுற்றிவளைத்து தோல்வி அடித்தது. ஆஸ்திரேலிய அணியில் அனுபவ வீரர்கள் ஸ்மித், டேவிட் வார்னர் இல்லாத வலியைச் சிறிது சிறிதாக அந்த அணி உணரத் தொடங்கி இருக்கிறது.

உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி தான் விளையாடிய கடைசி 8 ஒருநாள் ஆட்டங்களில் கடைசி 7 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டாஸ்வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் பைனே பீல்டிங் செய்ய முடிவெடுத்தார். முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. 343 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 47.1 ஓவர்களில்304 ரன்களுக்கு ஆட்டமிழந்து 38 ரன்களில் தோல்வி அடைந்தது.

கடந்த 2011-ம்ஆண்டு சிட்னியில் இங்கிலாந்து அணி சேர்த்த 334 ரன்களை ஆஸ்திரேலிய அணி சேஸ் செய்தது. அதன்பின் அந்த அணி 2-வது பேட் செய்து 300 ரன்களுக்கு மேல் இங்கிலாந்து அணியை சேஸ் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி அடித்த 343 ரன்கள் என்ற ஸ்கோர், ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அந்த அணி அடித்த மிக அதிகபட்ச ஸ்கோராகும். அதேபோல கார்டிப் மைதானத்திலும் எடுக்கப்பட்ட மிக அதிகபட்ச ஸ்கோராகவும் அமைந்தது.

இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து அணி கடைசியாக கடந்த 8 ஒருநாள் போட்டிகளில் 7 ஆட்டங்களில் வென்றுள்ளது. ஸ்காட்லாந்திடம் கடந்த வாரம் இங்கிலாந்து அணி தோல்வியுற்றது என்பது தனிக்கதை.

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோ, ஜேஸன் ராய் நல்ல தொடக்கம் அளித்து வலுவான அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். கடந்த போட்டியில் சதம் அடித்த பேர்ஸ்டோ இந்தப் போட்டியில் 42 ரன்களில் வெளியேறினார். ஹேல்ஸ் 26 ரன்களிலும், ஜோய்ரூட்22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஜேஸன் ராய், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஜோஸ் பட்லர் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியப் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார்கள். ஜேஸன் ராய் 52 பந்துகளில் அரைசதத்தையும், 97 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார். இது ஒருநாள் போட்டியில் அவர் அடிக்கும் 5-வது சதமாக அமைந்தது.

இவருக்குத் துணையாக ஆடிய ஜோஸ்பட்லர் டி20போட்டியைப் போல் பவுண்டரி, சிக்ஸராக பறக்கவிட்டு 38 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ஐசிசி சாம்பியன் கோப்பைக்குப்பின் இங்கிலாந்து அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட ஜேஸன் ராய் நீண்ட இடைவெளிக்குப்பின் ஒருநாள் அணியில் இடம் பெற்று, இப்போது சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 120 ரன்கள் அடித்து ஆட்டமிழந்த ஜேஸன் ராய் கணக்கில் 2 சிக்ஸர்கள், 12பவுண்டரிகள் அடக்கம்.

கேப்டன் மோர்கனுக்கு காயம் ஏற்பட்டதால், இந்தப் போட்டியில் பட்லர் கேப்டன் பொறுப்பை ஏற்று இருந்தார். அதை சிறப்பாகச் செய்து தேர்வாளர்கள் நம்பிக்கையைப் பெற்று இருக்கிறார். மற்றவகையில் இங்கிலாந்து அணியில் ஷாம் பில்லிங்ஸ்(11), மொயின் அலி(8), வில்லி(11), பிளங்கெட்(1) எனச் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஜோஸ் பட்லர் 70 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 2சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.

இந்த முறையும் இங்கிலாந்து அணியில் நடுவரிசை ஆட்டக்காரர்கள் சொதப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். கடந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோய் ரூட், ஹேல்ஸ், பில்லிங்ஸ் ஆகியோரின் மோசமான ஃபார் இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தது.

ஆஸ்திரேலிய அணியில் ரிசர்சார்ட்ஸன், கே ரிச்சார்ட்ஸன், ஆன்ட்ரூ டை ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை அந்த அணி பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாகச் செயல்படவில்லை. அந்த அணியில் ஒன்டவுன் இறங்கிய ஷான் மார்ஷ் சேர்த்த 131 ரன்களே குறிப்பிடத்தகுந்ததாகும். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

பந்தை சேதப்படுத்தும் விவகாரத்தில் நீக்கப்பட்ட டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்குப் பதிலாக அழைக்கப்பட்ட ஷான் மார்ஷ் நீண்ட இடைவெளிக்குப் பின் சதம் அடித்துள்ளார். கடைசியாக 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக சதம் அடித்த மார்ஷ் 5ஆண்டுகளுக்குப் பின் இப்போது சதம் அடித்துள்ளார்.

தொடக்க ஆட்டக்காரர் ஹெட்(19), ஷார்ட்(21) ஆகியோர் நிலைத்து ஆடாமல் விரைவாக வெளியேறியது ஏமாற்றமாகும். இதனால், நடுவரிசையில் இறங்கிய வீரர்களின் மீது சுமை ஏற்றப்பட்டது. அதை உணர்ந்த மார்ஷ் நிலையான பேட் செய்தார். 54 பந்துகளில் அரைசதத்தையும், 97 பந்துகளில் சதத்தையும் நிறைவு செய்தார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆரோன் பிஞ்ச் டக்அவுட்டிலும், ஸ்டோய்னிஸ் 9 ரன்களிலும் வெளியேறினார்கள். கடைசி 20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 179 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் விக்கெட்டுகள் கைவசம் இல்லாமல் இருந்தது. முக்கியமான அந்தக் கட்டத்தில் மேக்ஸ்வெல் 34 ரன்களில் மொயின் அலி சுழலில் வீழ்ந்தார்.

அதன்பின் மார்ஷ், ஆஸ்டன் அகர் கூட்டணி ஓரளவு நிலைத்து ஆடி 96 ரன்கள் சேர்த்தனர். ஆனால், அதில் ரஷித் பந்துவீச்சில் அகர் 46 ரன்கள் சேர்த்திருந்த போது,பட்லரால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.

அடுத்து வந்த பைனி 15 ரன்களில் விரைவாக வெளியேறினார். சதம் அடித்து நிலைத்து ஆடிய மார்ஷ் 131ரன்களில் பிளங்கெட் வேகத்தில் போல்டாகி விக்கெட்டை இழந்தார். அதன்பின் ஆஸ்திரேலியாவின் சரிவு தொடங்கியது. கடைசி வரிசை வீரர்கள் ஆன்ட்ரூ டை 10 ரன்களிலும், ரிச்சார்ட்சன் 2 ரன்களிலும் வெளியேற ஆஸ்திரேலியா அணி 47.1 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஆஸ்திரேலிய அணியில் மார்ஷ் (131), அகர் (46) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் அனைவரும் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்கள். பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கர் பதவி ஏற்றபின் ஆஸ்திரேலிய அணி சந்திக்கும் 2-வது தோல்வி இதுவாகும்.

இங்கிலாந்து அணித் தரப்பில் பிளங்கெட் 4 விக்கெட்டுகளையும், ரஷித் 3 விக்கெட்டுகளையும், மொயின் அலி 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.