பப்புவா நியூ கினியாவின் சதர்ன் ஹைலேண்ட் மாகாணத்தில் கலவரம் வெடித்ததையடுத்து 9 மாதங்களுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
பப்புவா நியூ கினியாவின் சதர்ன் ஹைலேண்ட மாகாண கவர்னர் தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்த தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளரின் ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கோர்ட் தீர்ப்பும் அவருக்கு எதிராக அமைந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள் வியாழக்கிழமை கடும் வன்முறையில் ஈடுபட்டனர்.
9 மாதங்களுக்கு இந்த நெருக்கடி நிலை அமலில் இருப்பதாகவும், அதுவரை மாகாண அரசு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகவும் பிரதமர் பீட்டர் ஓ-நீல் அறிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மாகாணத்தில் வன்முறையை கட்டுப்படுத்தி அமைதியை நிலைநாட்டுவதற்காக ஏராளமான படைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.