சட்டங்களால் ஆண்களின் மனதை மாற்றிவிட முடியுமா?

“ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்

அடுப்படி வரைதானே – ஒரு

ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்

அடங்குதல் முறைதானே”

என்று பல ஆண்டுகளுக்கு முன் எழுதினார் கவிஞர் கண்ணதாசன். பெண்களின் கோபதாபங்கள் எல்லாம் சமையலறை வரையில்தான். இதுவே இந்த வரிகளின் அர்த்தம்.

பல தசாப்தங்கள் முடிந்து தற்போது நாம் டிஜிட்டல் யுகத்தில் வாழ்கிறோம். இன்று பெண்களுக்கான வாய்ப்புகள் பரந்து விரிந்திருக்கின்றன. சொல்லப் போனால் பெரிய பெரிய நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் பெண்கள் முக்கிய பொறுப்புகளை வகிக்கின்றனர். ஆனால், மற்றொரு புறம் பெண்கள் இன்னும் அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர். சில பெண்கள் இன்னும் சுதந்திரக் காற்றை சுவாசிக்காமலே இருக்கின்றனர் என்பதே உண்மை நிலை.

பாலியல் வன்கொடுமைகளிலும், குடும்ப வன்முறைகளிலும் சிக்கித் தவித்து செய்வதறியாமல் அவர்கள் தவிக்கின்றனர்.

இதற்கு ஒரு சாட்சிதான் திருத்துறைப்பூண்டியை சேர்ந்த லட்சுமி. திருமணம் ஆன இரண்டே வாரத்தில் தன் கணவரால் சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளார் இவர்.

பாதிக்கப்பட்ட லட்சுமி    

திருமணம் ஆன இரண்டே வாரத்தில் மனைவியின் தோட்டை வாங்கி அடமானம் வைத்து குடித்துவிட்டு, பின்னர் இரவு 11மணியளவில் லட்சுமியை அழைத்து கொண்டு தலைக்காடு பகுதியில் உள்ள தனது இரண்டு நண்பர்களிடம் விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார் அவரது கணவர் ராஜேந்திரன் .

இரவு 2 மணியளவில் வீட்டிற்கு வந்த லட்சுமியை விடிய விடிய தாக்கிய ராஜேந்திரன், அவரது முகத்தில் உரலை வைத்து அடித்ததாக கூறப்படுகிறது. தற்போது திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள லட்சுமி, தன் கணவரின் நண்பர்கள் இருவரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

முன்னதாக, கடந்த மாதத்தில் ஒடிசாவின் பாலேஷ்வர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தன் மனைவியை வைத்து சூதாடியதாக செய்தி வெளியானது. சூதாட்டத்தில் மனைவியை தோற்ற அந்த கணவன், வெற்றி பெற்ற மனிதரிடம் தனது மனைவியை ஒப்படைத்தார். சூதாட்டத்தில் பிறகு மனைவியை ஜெயித்தவன், அந்த பெண்ணின் கணவரின் முன்னரே பாலியல் பலாத்காரம் செய்தார் என்று கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பணயம் வைக்கப்பட்டவர்   

எவ்வளவு காலமாக பெண்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்? இன்னமும் இந்த நூற்றாண்டிலும் பெண்கள் இவ்வாறு நடத்தப்படுவதற்கு என்ன காரணம்?

சட்டங்களால் ஆண்களின் மனதை மாற்றிவிட முடியுமா?

பெண்களை மதிக்க வேண்டும் என்ற மனநிலை பல ஆண்களுக்கு இன்றும் இல்லை என்கிறார் குடும்பநல வழக்கறிஞர் சாந்தகுமாரி. நகர்புறங்களில் ஓரளவிற்கு பரவாயில்லை என்றாலும், கிராமப்புறங்களில் பல பெண்கள் இன்னும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள் என்கிறார் அவர்.

ஆனால், வட இந்தியாவைவிட தென் இந்தியாவில் பெண்கள் சற்று அதிகமாக மதிக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை என்று கூறும் அவர், ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் மேற்கு வங்கத்தில் நடந்த ஒரு சம்பவத்தினை விவரிக்கிறார்.

“தாயும், மகளும் மட்டும் இருந்த ஒரு குடும்பத்தில், வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. கிராம பஞ்சாயத்திற்கு இந்த விவகாரம் வந்தபோது வட்டியும் முதலுமாக கடனை அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். கட்ட வழியில்லை என்று அந்த தாய் கூறியதும், அப்போ மகளை விற்றுவிட சொன்னார்கள்.” இது பத்திரிகைகளிலும் வந்ததாக குறிப்பிடும் அவர், இந்தியாவை தவிர வேறெங்கும் இதுபோன்ற அநியாயங்கள் நடக்காது என்று தெரிவித்தார்.

“சட்டம் கொண்டு வந்தால் மட்டும் ஆண்கள் மனதை மாற்றிவிட முடியுமா?” என்று கேள்வி எழுப்பும் வழக்கறிஞர் சாந்தகுமாரி, “மனரீதியாக ஆண்கள் மாற வேண்டும்” என்கிறார்.

விட்டுக் கொடுப்பது பெண்களே…

மேலும், இது போன்ற குடும்ப வன்முறை வழக்குகளில் பெரும்பாலும் யாரும் தண்டிக்கப்படுவதில்லை என்று குறிப்பிடும் அவர், குடும்ப வன்முறைக்கு எதிரான சட்டங்களை எடுத்துக் கொண்டால் அதில் ‘உடனடி கைது’ என்ற ஒன்று கிடையாது என்பதால் யாரும் பயப்படுவதில்லை என்றார்.

“அப்படியே இருந்தாலும் இது தொடர்பான வழக்குகள், கடைசி வரை நடைபெறுவதும் இல்லை. கோர்ட்டுக்கு நடக்க முடியாமல் வழக்கை வாபஸ் பெறுவதும், காசு கொடுத்து வழக்கை முடிப்பதும், இல்லை என்றால் கடைசியில் அந்தப் பெண்னே கணவருடன் வாழ்வதாக கூறிவிடுவதும் நடக்கும்.

“எத்தனை சட்டம் வந்தாலும், குடும்பம் குழந்தைகள் என்று வந்துவிட்டால் பெண்கள் நிறைய விட்டுக் கொடுக்க வேண்டி இருக்கிறது.” என்கிறார் அவர்.

வழக்கறிஞர் சாந்த குமாரி    

பல்லாயிரம் ஆண்டுளாக ஆண்கள் உடம்பில் ஊறிப்போயுள்ள ஆதிக்க உணர்வு இன்றும் இருக்கத்தான் செய்கிறது என்றும் இதெல்லாம் மாற இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்றும் சாந்தகுமாரி குறிப்பிடுகிறார்.

வழி வழியாக வரும் ஆதிக்க சிந்தனை”

பெண்களை தாக்குவதற்கு தங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது என்றே சில ஆண்கள் நினைக்கின்றனர் என்கிறார் குடும்பநல வழக்கறிஞர் ஆதிலஷ்மி லோகமூர்த்தி.

“காலம் காலமாக ஆண்களுக்கு ஆதிக்க சிந்தனை என்பது உண்டு. அது வழிவழியாக வருகிறது. என்னதான் சட்டங்கள் இயற்றப்பட்டு அமலில் இருந்தாலும்கூட சமூகத்தின் பார்வை வேறாகத்தான் இருக்கிறது” என்கிறார் அவர்

பெண்களுக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் கௌரவமும் இன்னும் பலருக்கு கிடைக்கவில்லை. என்னோட சிந்தனையை பின்பற்றினால் நீ என் மனைவி என்ற ஆண்களின் பார்வை மாறாமல் எதுவும் மாறாது என்றும் ஆதிலஷ்மி தெரிவித்தார்.

பெண்களை இரண்டாம் நிலையில் வைப்பது இன்றும் மாறவில்லை”

பெண்கள் மீதான தாக்குதல்கள், கொடுமைகள் எல்லாம் எங்கோ ஒரு இடத்தில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. பல நேரங்களில் இதை நாம் வெளிப்படையாகக் காட்டவில்லை என்றாலும் சமூகத்தில் இது இருந்தே வந்திருக்கிறது என்று கூறிய அவர், பெண்களை இரண்டாம் நிலையில் வைப்பது இன்றும் மாறவில்லை என்கிறார்.

ஆண்களில் படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரர் என்றெல்லாம் கிடையாது. பெண் இப்படித்தான் வாழவேண்டும் என்ற மனநிலை இருக்கும் வரை இது போன்ற பிரச்சனைகள் இருக்கும்.

விழிப்புணர்வு

“படித்த பெண்களைக்கூட பலரும் மதிப்பதில்லை. இதெல்லாம் மாறி வந்தாலும், மாற்றத்தின் வேகம் மிகக் குறைவாக உள்ளதாக” கூறுகிறார் அவர்.

பாலின சமத்துவம் குறித்து தொடர்ந்து நம் குழந்தைகளுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இது தொடர்பாக என்னென்ன சட்டங்கள் இருக்கின்றன என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குடும்ப வன்முறை, பாலியல் வன்முறைக்கு எதிராக பல சட்டங்களும், சட்டத் திருத்தங்களும் உள்ளன. இருக்கிற சட்டங்களை பயன்படுத்த தெரிய வேண்டும் என்றும் ஆதிலஷ்மி தெரிவித்தார்.