அவுஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் சிறிலங்காவிற்கு பல்லிகளை போன்ற அபூர்வ உயிரினங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
குறித்த உயிரினங்கள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப்பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த உயிரினங்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அவுஸ்திரேலியாவில் இருந்து சில பொதிகள் விமானம் மூலம் சிறிலங்காவிற்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளன. அந்த பொதியில் விலாசம் எழுதப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் குறித்த பொதியை பெற்றுக்கொள்ள வருமாறு பொதியில் இருந்த விலாசத்திற்கு அறிவித்த போதும் அதனை பொறுப்பேற்க எவரும் வருகைத்தரவில்லை.
இதன் மூலம் பொதியில் எழுதப்பட்டு இருந்த விலாசம் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விமான நிலைய சுங்கப்பிரிவினரால் குறித்த பொதி பிரித்து பார்க்கப்பட்டுள்ளது.
அதில் 5 சிறிய பொதிகளில் பல்லி போன்ற 32 உயிரினங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்கத்தின் வன விலங்கு பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளும் நிலையில், இன்றைய தினம் குறித்த விலங்குகள் அவுஸ்திரேலியாவுக்கு மீள அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சுங்க பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.