மழை மட்டுமா அழகு! சுடும் வெயில்கூட ஒரு அழகு!’ நமது ரசனையின் திசையைச் சற்றே மாற்றிப் பார்க்கச்செய்யும், `சைவம்’ திரைப்படப் பாடலின் வரிகளை எழுதியது நா.முத்துக்குமார். பலரும் திரும்ப திரும்பக் கேட்டு லயிக்கும் பாடல். குழந்தைமைத் ததும்ப ததும்ப தன் இனிமையான குரலில் பாடி, வரிகளை நம் நெஞ்சுக்கு நெருக்கமாக்கியது உத்ரா உன்னிகிருஷ்ணன் குரல்.
மென்மையான குரலுக்குச் சொந்தக்காரர் பாடகர் உன்னிகிருஷ்ணன். `காதலன்’ படத்தில் தொடங்கியது அவரது திரையிசைப் பயணம். பின்பு ரசிகர்களால் கொண்டாடப்படும் பல பாடல்களைப் பாடியுள்ளார். இவரின் அன்பு மகள்தான் உத்ரா. இரண்டாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்தே இசை பழகி வரும் உத்ரா, பாடகி சைந்தவி வீட்டுக் கொலுவுக்குச் சென்றிந்தபோது, ஒரு பாடலைப் பாடியுள்ளார். அந்தக் குரலின் இனிமையை ரசித்த சைந்தவி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷிடம் உத்ராவை அறிமுகப்படுத்தினார். இப்படித்தான் `சைவம்’ பாடல் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பாடல் வரிகளை 15 நிமிடங்களில் பயிற்சி எடுத்துக்கொண்டு, மூன்று மணி நேரத்திலேயே பாடலைப் பாடி முடித்து ஆச்சர்யப்படுத்தினார் இந்த இசை இளவரசி.
இசை ரசிகர்களின் விருப்பத்துக்குரிய பாடலாக அது அமைந்தது. 2014-ம் ஆண்டுக்கான தேசிய விருது அறிவிப்பில், சிறந்த பாடகிக்கான விருதை உத்ரா தட்டிச்சென்றபோது எல்லோரிடமும் இந்தப் பாடல் புகழ்பெற்றது. அதன்பின், மீண்டும் அந்தப் பாடல் எங்கெங்கும் இசைக்கப்பட்டது. இந்தியா முழுக்க யாரிந்த குரலுக்குச் சொந்தக்காரர் என வியப்போடு தேடினர். தேசிய விருது கிடைத்த செய்தியை அவரின் தாத்தா சொன்னபோது, `அப்படியா!’ எனச் சொல்லிய உத்ரா, தான் விளையாடிக்கொண்டிருந்த வீடியோ கேமை தொடர்ந்திருக்கிறார். ஆம்! அப்போது அவருக்கு வயது 10. பலரின் வாழ்த்துகள் வந்து சேர சேர தேசிய விருது என்றால் என்ன எனப் புரிந்துள்ளது. தான் பாடிய முதல் பாடலுக்குத் தேசிய விருதுபெற்ற மகிழ்ச்சியைக் கொண்டாடினார்.
உத்ராவுக்கு மியூசிக் ரோல்மாடலாக மட்டுமன்றி, விருதுபெறுவதிலும் ரோல்மாடலாக இருக்கிறார் தந்தை உன்னிகிருஷ்ணன். ஆம்! உன்னிகிருஷ்ணனும் `காதலன்’ படத்தின் `என்னவளே.. அடி என்னவளே…” என்ற தனது முதல் பாடலுக்காக தேசிய விருது வாங்கியவர். (ஏ.ஆர். ரகுமான் இசையில் வைரமுத்து இந்தப் பாடலை எழுதியிருந்தார்) இந்த ஒற்றுமை ஆச்சர்யமானதுதானே!
அதன்பிறகு உத்ரா பல பாடல்களால் ரசிகர்களை ஈர்த்துக்கொண்டிருக்கிறார். அவற்றில், `பிசாசு’ படத்தில் இடம்பெற்ற `போகும் பாதை தூரமில்லை’ பாடல் மிகவும் முக்கியமானது. கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுதிய இந்தப் பாடல், துயரமே வாழ்க்கையாக இருக்கும் ஒருவரிடமிருந்து வெளிப்படும் நம்பிக்கையை இசைக்கும். மிகத் தேர்ச்சிபெற்ற ஒருவராலே இந்த வரிகளுக்கு ஜீவன் கொடுக்க முடியும் எனச் சொல்லும் அடர்த்தியான சொற்கள். உத்ரா இந்தப் பாடலை மிகச் சிறப்பாகப் பாடியிருப்பார். சோகம் இழைந்தோட, அதில் சிறு நம்பிக்கையை விதைக்கும் அவரின் குரல், பாடல் வெளியாகி 4 ஆண்டுகளாகியும் பலரின் ரிங்டோனாக உலா வருகிறது. சமூக ஊடகங்களில் இன்றும் அதிகம் பகிரப்படும் பாடல் இது.
நமது பிறந்தநாள் கொண்டாட்டங்களிலும் `ஹேப்பி பர்த் டே டு யூ’ என ஆங்கிலத்திலேயே பாடப்பட்டு வருவதற்கு ஒரு மாற்றாக, அழகுத் தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை எழுதினார் கவிஞர் அறிவுமதி.
நீண்ட நீண்ட காலம்
நீ
நீடு வாழ வேண்டும்!
வானம் தீண்டும் தூரம்
நீ
வளர்ந்து வாழ வேண்டும்
எனத் தொடங்கும் இந்தப் பாடலை உற்சாகம் பொங்கும் குரலில் பாடியிருப்பார் உத்ரா. தமிழ் இல்லங்களில் பிறந்தநாள் வாழ்த்தாக உத்ராவின் குரல் பரவிக்கொண்டேயிருக்கிறது.
திரையிசையில் புதிய தடம் பதித்துவரும் உத்ராவுக்கு இன்று பிறந்தநாள். அவரின் இசைப் பயணத்தில் இன்னும் ஏராளமான விருதுகளைப்பெற வாழ்த்துவோம்!