காணாமல் போனோர் அலுவலகத்தின் பணிகளை சிறப்புற முன்னெடுக்க அரசாங்கத்திற்கு குறுகிய காலக்கட்டமே காணப்படுகின்றது. என காணாமல்போனோர் அலுவலகத்தின் ஆணையாளர் கணபதிபிள்ளை வேந்தன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்.
வடக்கில் காணாமல் போனவர்களை மாத்திரம் கண்டுப்பிடிப்பது காணாமல் போனோர் அலுவலகத்தின் நோக்கமல்ல. தெற்கில் காணாமல் போனவர்களையும் கண்டுப்பிடிப்பதும் உறவுகளுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதும் அலுவலகத்தின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் வடக்கில் மாத்திரம் எதிர்ப்புக்கள் மேற்கொள்ளப்படவில்லை. தெற்கிலும் தொடர்ச்சியாக எதிர்ப்புக்கள் வந்த வண்ணமே காணப்படுகின்றன. அலுவலகம் அமைக்கப்பட்டு இதுவரை காலமும் காணாமல் போயுள்ளோர் தொடர்பில் உறுதியான தவகல்கள் வழங்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.
இதற்கு பல காரணங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. அதாவது கடந்த காலங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட அமைப்புக்கள் மாறுப்பட்ட தகவல்களை வழங்கியுள்ளன. இத்தகவல்களையும் , மக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டே அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
அலுவலகத்தின் நோக்கம் வரையறுக்கப்பட்டதாக காணப்படாது. வடக்கு மற்றும் தெற்கு மக்கள் அலுவலகத்தின் பெறுபேறுகளை தொடர்ந்து எதிர்பார்ப்பவர்களாகவே காணப்படுகின்றனர் அடுத்து வரும் அரசாங்கமும் இவ்விடயத்திற்கு முழுமையான ஆதரவு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என தெரிவித்தார்