அவுஸ்திரேலிய அரசு வழங்கிய 70 மில்லியன் டொலர் நஷ்டஈடு மனுஸ் தீவு தடுப்பு முகாமிலிருந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் 1,700 பேருக்கு, பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.
மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள தஞ்சக் கோரிக்கையாளர்கள் அங்கு தாம் நடத்தப்பட்ட முறை தொடர்பில், அவுஸ்திரேலிய குடிவரவு திணைக்களத்திற்கெதிராக கூட்டு சட்ட நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இந்த நிலையில் மனுஸ் தடுப்பிலுள்ளவர்களுக்கு சுமார் 70 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை இழப்பீடாக வழங்குவதற்கு அரசு முன்வந்திருந்தது.
இதற்கான அனுமதியை நீதிமன்றம் வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் ஜுன் 15ம் திகதிக்கு முன்னர் 1693 பேருக்கு குறித்த பணம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டியுள்ளது.
இந்த நிலையில் பெரும்பாலானோர் பணத்தைப் பெற்றுவிட்டனர். மீதம் 340 பேருக்கு மாத்திரமே வழங்கப்பட வேண்டியுள்ளது.
இதேவேளை அவுஸ்திரேலிய சட்ட வரலாற்றில் மனித உரிமைகளை அடிப்படையாக வைத்து நஷ்டஈடு வழங்கப்பட்ட முதல் நிகழ்வாக இது அமைந்துள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
அத்துடன் சுமார் மூன்றரை ஆண்டுகளாக இவ்வழக்கு நடைபெற்றிருந்தது. அரசு நஷ்டஈடு வழங்க முன்வந்ததன் அடிப்படையில் எதிர்வரும் 30 ஆம் திகதி விக்டோரிய நீதிமன்றினால் வழக்கு நிறைவுக்கு வரவுள்ளதாக தெரிகிறது.