அமெரிக்காவைக் கண்டுபிடித்தது கொலம்பஸ் இல்லையா?

ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆணிவேராகத் திகழ்ந்தவர்கள் ஆப்பிரிக்கர்கள். அட்லாண்டிக் கடல் பகுதியில் தனித்துவிடப்பட்டிருந்த அமெரிக்க கண்டங்களில் ஐரோப்பியர்கள் கோலோச்சுவதற்குத் தங்கள் வேர்வையோடு ரத்தத்தையும் விலையாகக் கொடுத்தவர்களும் அவர்களே. ஸ்பானிய மன்னர் ஃபெர்டினான்ட் அமெரிக்க பூர்வகுடிகளிடமிருந்து ஆக்கிரமித்த நிலப்பகுதியைப் பயனுள்ள வகையில் பயன்படுத்த முடிவுசெய்தார். அதற்காக அவரிடமிருந்த 200 ஆப்பிரிக்க அடிமைகளை அங்கே அனுப்பி உழைக்கவைத்தது முதலே அமெரிக்காவுடனான அவர்களின் தொடர்பு தொடங்கியதாகப் பழைய வரலாறு கூறுகிறது.

வரலாற்றின் பக்கங்களில் பாதி மட்டுமே படிக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ச்சியாக நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஆப்பிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்குமான தொடர்பும் அடிமை வர்த்தகத்தில் தொடங்கியதில்லை, அதற்கும் 200 ஆண்டுகள் முன்பிருந்தே ராஜ்ஜியங்களுக்கு மத்தியிலான வர்த்தகத் தொடர்பு மூலமாகத் தொடங்கிவிட்டது. அதற்காகவே ஓர் அரசர் தனது அரச பதவியை இழந்து, ராஜ்ஜியத்தை இழந்து கடலோடியாகச் சுற்றித் திரிந்துள்ளார்.

அது ஆப்பிரிக்கக் கண்டத்தின் பெரும்பான்மைப் பகுதியை மாலி சாம்ராஜ்ஜியமாக மான்ஸா வம்சத்தினர் ஆண்டுகொண்டிருந்த காலம். 13ஆம் நூற்றாண்டின் இறுதியில் 9-வது மான்ஸா பேரரசரான இரண்டாம் அபூ பக்கரிக்குத் தனது சாம்ராஜ்ஜியத்தில் இருக்கும் நைஜர் ஆற்றுக்கு அப்பால் நிலப்பகுதி இருப்பதைப் போலவே அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பாலும் நிலப்பகுதி இருக்குமோ என்ற சந்தேகம் தோன்றியது. அதைத்தேடி கப்பல் பயணம் மேற்கொள்ளவேண்டும் என்று முடிவுசெய்தார். தெற்கு ஆப்பிரிக்கக் காடுகளில் தொடங்கி சஹாரா முழுவதும் ஆண்டுகொண்டிருந்த அவருக்குத் தனது அகன்ற நிலப்பரப்போ அங்கிருக்கும் அளவில்லாத் தங்கமோ போதவில்லை. கண்ணிற்குப் புலப்படாத உண்மைகளைக் கண்டறியும் அறிவாற்றலின் மீதும், அபாயங்கள் நிறைந்த வீரதீரச் செயல்களின் மீதுமே ஆர்வமாக இருந்தார்.

கடற்பயணம்

Photo Courtesy: Leo and Diane Dillon

அட்லாண்டிக்கிற்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதை கண்டறிய 2000 கப்பல்களோடு மாலுமிகளை அனுப்பிவைக்கிறார் அபூ பக்கரி. மாலி சாம்ராஜ்ஜியத்தைப் பற்றி இபின் பட்டூட்டாவின் வரலாற்றுப் பதிவுகளில் குறிப்புகள் காணப்படுகின்றன.

“ஆய்வுப்பயணத்தின் மீதான ஆர்வத்தால், பேரரசர் சாட் ( Chad Lake)) ஏரிக்கரையோரங்களில் வாழ்ந்துகொண்டிருந்த கப்பல் பொறியாளர்களை வரவழைத்து டிஜொலிபா (நைஜர் நதிக்கு அவர்கள் வைத்த பெயர்) மற்றும் செனெகல் நதிகளில் பெரும் கடற்பயணத்தை நடத்துவதற்காக 2000 கப்பல்களைக் கட்டினார்.”

2000 கப்பல்களில் மாலுமிகள், வணிகர்கள், கட்டட வல்லுநர்கள், கலைஞர்கள், போர் வீரர்கள், கல்வியிற் சிறந்தவர்கள் அனைவரும் 2 வருடங்களுக்குத் தேவையான உணவுப்பொருட்களோடு அனுப்பிவைக்கப்பட்டனர். பாதியளவு கப்பல்கள் செல்லும் வழியிலேயே அட்லாண்டிக் கடலின் சீற்றத்திற்குப் பலியாகிவிட்டது. மீதமிருந்த கப்பல்கள் அந்த நிலப்பகுதியை அடைந்தபோது கடலில் கலக்கும் பெரிய ஆற்றின் வேகமான நீரோட்டத்தில் சிக்கிச் சீரழிந்துவிட்டன. அனைத்திலும் தப்பிப் பிழைத்த ஒற்றைக் கப்பலின் மாலுமிகளிடம் பயணத் தகவல்களைப் பெற்றுக்கொண்டு இரண்டாம் அபூ பக்கரி அவரே கடற்பயணத்தை மேற்கொள்ள முடிவுசெய்தார். அவர் கண்களுக்கு அட்லாண்டிக்கின் சீற்றமோ, பெயர் தெரியாத ஆற்றின் (அமேசான் நதி) வேகமோ தெரியவில்லை. தெரிந்ததெல்லாம் அங்கு ஒரு நிலப்பகுதி இருக்கிறது என்பது மட்டும்தான். அங்கு வாழும் மக்களைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டுமென்ற அவரது அறிவுத்தாகம் இதைச்செய்யத் தூண்டியது.

அபூ பக்கரி 2

Photo Courtesy: Global Research

இந்த முறை அவரோடு சிலரை மட்டுமே அழைத்துக்கொண்டார். மேலும் பல இழப்புகளைச் சந்திக்க அவரது மனம் தயாராக இல்லை. தனது தம்பியான கன்கோவூ மௌசாவை ( Kankou Moussa) மான்சா முசா ( Mansa Musa) என்ற பெயரோடு பேரரசராகப் பட்டம் சூட்டிவிட்டுத் தனது பயணத்திற்கான ஆயத்தங்களைச் செய்யத் தொடங்கினார். 1311-ம் ஆண்டு அவர் தொடங்கிய பயணம்  மான்சா முசாவின் ஆட்சியில் மாலியை உலகிலேயே செல்வச் செழிப்புமிக்கதொரு சாம்ராஜ்ஜியமாக மாற்றியது.

தென் அமெரிக்கா

Photo Courtesy: Atlanta Blackstar

சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டு புத்திசாலித்தனமாகக் கப்பல்களைச் செலுத்திய அபூ பக்கரி முந்தைய பயணத்தைவிடச் சுலபமாகவே அமெரிக்காவைச் சென்றடைந்தார். “போரே போம்பாக்” என்று அவரால் அழைக்கப்பட்ட இன்றைய பிரேசில் அவரது வருகைக்குப் பிறகு ஆப்பிரிக்காவுடன் பண்டமாற்று முறையில் பல்வேறு வணிக உறவுகளை மேற்கொண்டது. மாலி நாட்டில் இருந்த தங்கச் சுரங்கத்தின் பெயரால் அவர் அந்த நிலப்பகுதியை அழைத்ததன் காரணம், தங்கச் சுரங்கத்தைவிடப் பெரிய செல்வத்தை நல்கும் நாடாக பிரேசில் இருந்ததே. அங்கு வாழ்ந்துகொண்டிருந்த பூர்வகுடிகளான டூபிக்களுடன் (Tupis) வணிக உறவை வளர்த்துக்கொண்டார். 1314-ம் ஆண்டு மான்சா முசாவிற்கு வணிகப் பரிவர்த்தனை நிகழ்த்துவதற்காக உதவிகள் கேட்டுத் தகவல் அனுப்பினார். அதன்மூலம் கிடைத்த உதவிகளே சோளம், பீன்ஸ், வேர்கடலை, புகையிலை, பட்டு, சில பழ வகைகள் ஆகியவற்றை உலகம் அறியச்செய்தது. இவற்றைப் பரிமாற்றிக்கொண்டு அபூ பக்கரி அவர்களுக்கு அதுவரை பழக்கமில்லாத ஆடு, மாடு, கோழி வளர்ப்புகளைப் பழக்கப்படுத்தினார். அத்தோடு பயிர் வகைகள், சிறுதானிய வகைகளையும் அறிமுகப்படுத்தினார். இதன்மூலம் இருவரும் தங்களுக்குள் சுயச்சார்பில் பூர்த்தியடைந்துகொண்டனர். போரே போம்பாக்குடனான மாலி சாம்ராஜ்ஜியத்தின் வணிக உறவு அவர்களின் செல்வத்தை முன்பைவிடப் பல மடங்கு அதிகப்படுத்தியது.

மம்மி

Photo Courtesy: Atlanta Blackstar

இந்த வரலாறு உண்மையில்லை, புனையப்பட்டதென்று விமர்சிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். கொலம்பஸ் அமெரிக்கா செல்வதற்கு முன்பே அங்கு ஆப்பிரிக்கர்களின் உறவு இருந்தது என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் அதைக் கொலம்பஸே சொல்லிருப்பதாகச் சொல்கிறார் இந்த ஆராய்ச்சியில் முக்கியப் பங்குவகித்த டியெமோகோ கொனாடே ( Tiemoko Konate). டூபி இன மக்களின் ஆயுத நுனியில் வார்க்கப்பட்டிருந்த தங்கத்தை ஆய்வு செய்ததில் அது மேற்கு ஆப்பிரிக்காவின் தங்கத் தொல்லெச்சங்களோடு ஒத்துப்போவதும் அதன் காலம் கொலம்பஸ் சென்றதற்கு 100 ஆண்டுகள் முந்தையதாக இருந்ததும் இந்த வரலாற்றுக்கு ஆதாரமாகச் சொல்லப்படுகின்றன. அமெரிக்கப் புகையிலைகளை 1609-ம் ஆண்டில் விரிஜீனிய வணிகக் கம்பெனிதான் முதலில் வணிகம் செய்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், எகிப்திய மம்மிக்களை ஆய்வுசெய்ததில் அவர்களின் கல்லறையில் அமெரிக்கப் புகையிலைகளும் இருந்துள்ளன.

அட்லாண்டிக் பெருங்கடல்

Photo Courtesy: Atlanta Blackstar

பிரமிட் அமைப்பில் கட்டப்பட்டிருந்த கட்டடங்கள், அவர்களின் நிர்வாகக் கட்டமைப்பு, அதிநவீன காலக் கணிதம் ஆகிய அனைத்துமே ஆப்பிரிக்கக் கலாச்சாரத்தோடு ஒத்துப்போவதும் இதற்கான சாட்சிகள். தென் அமெரிக்காவின் மெக்சிகோவில் கண்டுபிடிக்கப்பட்ட ஓல்மெக் நாகரிகம் ( Olmec civilization) கூட ஆப்பிரிக்க நாகரிகத்தோடு ஒத்துப்போவதாகவும், அவர்கள் செதுக்கிய சிலைகளில் இருக்கும் அகன்ற வாயும், அடர்த்தியான தாடியும் கொண்ட கறுப்பு மனிதர்களின் சிலைகளும் இவற்றுக்கான அழுத்தமான ஆதாரங்களாக ஆராய்ச்சியாளர்கள்முன்வைக்கிறார்கள். இனி ஆப்பிரிக்கர்களின் வரலாற்றில் அவர்கள் அடிமைகளென்பது மட்டுமல்ல, அவர்கள் உலகை ஆள்வதற்கல்ல, அரவணைக்க முற்பட்டவர்கள் என்பதும் இனி பரவலாகப் பேசப்படும். ஏனோ அன்பாலும் அறிவாலும் ஆக்கத்தை விரும்பியவர்கள் வரலாற்றில் அழிக்கப்பட்டதே அதிகம். அதில் ஆப்பிரிக்கர்கள் ஆழமான காயங்களை அனுபவித்தவர்கள். இந்தக் கண்டுபிடிப்பு இனி உலக வரலாற்றில் அவர்களின் பங்கைப் பறைசாற்றும்.