சிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை விடுத்த அழைப்பு!

கடந்த புதன்கிழமை சிவகுமாரனின் நினைவு நாளில் தமிழ் மக்கள் பேரவை ஒர் ஊடகவியலாளர் சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. பேரவையை ஓரு மக்கள் இயக்கமாக மாற்றும் செயற்பாட்டின் ஒரு பகுதியாக இளையோர் அமைப்புக்களை உருவாக்குவது பற்றி அதில் கூறப்பட்டுள்ளது. ஓர் இளையோர் மாநாட்டை விரைவில் ஏற்பாடு செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகுமாரனின் நாளை இதற்கென்று தெரிவு செய்தது தற்செயலானதாகத் தோன்றவில்லை. ஏனெனில் ஈழத் தமிழர்களுடைய ஆயுதப் போராட்டத்தின் முன்னோடிகள் பலர் தமிழ் மாணவர் பேரவையைச் சேர்ந்தவர்களே. குறிப்பாகச் சிவகுமாரன் ஈழத்து சயனைட் மரபின் முன்னோடியாவார்.

நஞ்சருந்தி உயிரைத் துறப்பது ஏற்கெனவே வேறு போராட்டங்களிலும் காணப்பட்டுள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம்தான் அதனை ஒரு மரபாக வளர்த்தெடுத்தது. அது புலிகள் இயக்கத்தின் ஒரு குறியீடாகவும் மாறியது. சயனைட் மரபு எனப்படுவது தான் சார்ந்த ஓர் அமைப்பின் அல்லது போராட்டத்தின் ரகசியங்களை எதிரி எடுக்கக்கூடாது என்பதற்காக தன்னைத் தானே மாய்த்துக்கொள்ளும் ஒரு மரபாகும். ஒரு பொது இலட்சியத்தின் தொடர்ச்சியைப் பாதுகாப்பதற்காக ஒரு தனி நபர் தனது உயிரைத் தியாகம் செய்வதை அது குறிக்கும். ஒரு பொது இலட்சியத்தோடு ஒப்பிடுகையில் ஒரு தனி நபரின் வாழ்க்கை முக்கியமானது அல்ல என்பதனை அது குறிக்கும்.

சிவகுமாரன் ஈழத்து சயனைட் மரபின் முன்னோடியாவார். தனது இலட்சியத்தை நிறுவனமயப்படுத்த முன்னரே தன் உயிரைத் தியாகம் செய்தார். அவரது போராட்டப் பாதையில் பல தடவை கைது செய்யப்பட்டார். சிறையில் நிகழ்ந்த சித்திரவதைகளின் காரணமாக எதிரியிடம் உயிரோடு பிடிபடக்கூடாது என்று முடிவெடுத்தார். அதன் விளைவே சயனைட் குப்பியாகும். ஒரு புறம் சயனைட் அவரைச் சித்திரவதையிலிருந்து விடுதலை செய்தது. இன்னொரு புறம் அவரது இலட்சியத் தொடர்ச்சியை அது பாதுகாத்தது. அவர் கண்ட கனவை விடுதலைப்புலிகள் இயக்கம் அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் சென்றது. பகின் என்றழைக்கப்படும் மண்டைதீவைச் சேர்ந்த ஒரு புலிகள் இயக்கப் போராளி முதன் முதலாக சயனைட் அருந்தி உயிர் துறந்தார். ஒரு பொது இலட்சியத்தை விடவும் ஒரு தனிநபரின் உயிர் பெறுமதியானது அல்ல என்பதே சயனைட் மரபு உலகத்திற்குக் கொடுத்த அனுபவமாகும். தமிழீழ விடுதலைப் போராட்டம் முழு உலகத்திற்கும் ஒரு புதிய அனுபவமாக கிடைத்ததிற்கு இதுவும் ஒரு காரணம்.

இம்மரபின் முதற் தியாகி ஆகிய சிவகுமாரனின் நினைவு நாளில் விக்னேஸ்வரன் இளைஞர்களை அரசியல்மயப்படுத்துவது குறித்து தனது அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சிவகுமாரன் வாழ்ந்த காலத்திற்கும் விக்னேஸ்வரன் அழைப்பை விடுக்கும் காலத்திற்குமிடையே ஒரு முக்கியமான ஒற்றுமையும் உண்டு. வேற்றுமையும் உண்டு.

ஒற்றுமையானது மிதவாதத் தலைவர்களிடம் இளையவர்கள் அதிருப்தியும், கோபமும் அடைந்தமையாகும். தமிழ் மாணவர் பேரவையில் இருந்த பலரும் ஒரு காலகட்டத்தில் தமிழ் மிதவாதத் தலைவர்களை ஏதோ ஒரு விகிதமளவிற்கு நம்பியவர்கள்தான். பின்னர் அத்தலைவர்கள் மீது அதிருப்தி கொண்டு தலைவர்களுக்கு எதிராகத் திரும்பியதோடு ஆயுதப் போராட்டத்தையும் தொடங்கினார்கள். தமிழ் மிதவாதிகளின் இளைஞர் சேனையாகச் செயற்பட்ட இளைவர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி, ஏமாற்றம் என்பவற்றை விளங்கப்படுத்த இங்கேயொரு கூர்மையான உதாரணத்தைக் கூறலாம்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பில் ஒரு முக்கியஸ்தராக இருந்தவரும், இணைந்த வடக்கு – கிழக்கின் முதன்மைப் பொறுப்பில் இருந்தவருமாகிய ஒருவரின் அனுபவம் அது. ஒரு முறை சுவரொட்டிகளை ஒட்டுவதற்காக இளைஞர்கள் சென்ற போது அவர்களோடு சேர்ந்து ஒரு தமிழ் மிதவாதத் தலைவரின் மகனும் சென்றுள்ளார். இரவிரவாக சுவரொட்டிகளை ஒட்டிய பின் மாப்பசை ஒட்டிய கைகளோடு குறிப்பிட்ட தலைவர் வீட்டிற்குத் திரும்பிய அவர்கள் அங்கேயே உறங்கியிருக்கிறார்கள். நடுஇரவில் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த இடத்திற்கு வந்த அத்தலைவரின் மனைவி அவர்கள் மத்தியில் உறங்கிக் கொண்டிருந்த தன் மகனை தட்டி எழுப்பியிருக்கிறார். அவரது கைகளில் ஒட்டியிருந்த மாப்பசையைக் கண்டதும் ‘நீ ஏன் அவர்களோடு சென்றாய். அது உன்னுடைய வேலையல்ல. அதைச் செய்வதற்குத்தான் அவர்கள் இருக்கிறார்கள். நீயெல்லாம் அதைச் செய்யக்கூடாது. வந்து உள்ளே படு.’ என்று மகனை கண்டித்து விட்டு அழைத்துச் சென்றிருக்கிறார். இந்த உரையாடலை அங்கே தூங்காமல் விழித்துக் கொண்டிருந்த மேற்சொன்ன ஈ.பி.ஆர்.எல்.எவ் பிரமுகர் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறார்.

இப்படித்தான் தமிழ் இளைஞர்கள் மிதவாதத் தலைவர்களின் கபடத்தனங்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கெதிராகத் திரும்பினார்கள். அவர்களில் ஒருவரே சிவகுமாரன். பல தசாப்தங்களுக்கு முன்பு சிவகுமாரனைப் போன்றவர்கள் மிதவாதத் தலைவர்களிடமிருந்து விலகியும் அதே சமயம் ஆயுதப் போராட்டத்தை நோக்கியும் திரும்பினார்கள். இப்பொழுதும் தமிழ் மிதவாதத் தலைவர்களுக்கு எதிராக இளையோர் மத்தியில் அதிருப்தியும், கோபமும் அதிகரித்து வருகிறது. ஒரு சிறிய தொகை இளைஞர்கள் பதவிகளுக்காகவும், சலுகைகளுக்காகவும் மிதவாதத் தலைவர்களின் பின் திரிகிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் பொதுப் போக்கு அதுவல்ல. இது சிவகுமாரனின் காலத்திற்கும், இப்போதிருக்கும் நிலமைக்குமுள்ள முக்கியமான ஒற்றுமையாகும்.

வேற்றுமை எதுவெனில் ஓர் ஆயுதப் போராட்டத்தின் தோல்விக்குப் பின்னரான காலகட்டம் இதுவென்பதாகும். சிவகுமாரன் ஓர் ஆயுதப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் காணப்படுகிறார். ஆனால் தமிழ் மக்கள் பேரவையின் இளையோர்க்கான அமைப்பு ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு ஒன்பது ஆண்டுகளின் பின் உருவாகவிருக்கிறது.  இன்றைய இளையோர் பின்வரும் பிரதான காரணிகளின் விளைவுகளாகக் காணப்படுகிறார்கள்.

முதலாவது தலைமைத்துவ வெற்றிடம் அல்லது இருக்கின்ற தலைவர்களின் போதாமை. இதற்குள் விக்னேஸ்வரனும் அடங்குவார். மாகாண சபைக்குள் விக்னேஸ்வரனுக்கு எதிரான சூழ்ச்சிகளில் இருந்து அவர் மீண்டெழுந்த கையோடு யாழ்பாணத்தில் அவருக்கு ஆதரவாக இளையோர் அமைப்பொன்றை உருவாக சிலர் முயற்சித்தார்கள். ஆனால் அவர்கள் தங்களை ஒருங்கிணைப்பதற்கிடையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வந்து விட்டது.அவ்விளைஞர்களிற் சிலர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு போய் விட்டார்கள். ஏனையோர் தீவிரமிழந்து தத்தமது சொந்த வாழ்வின் சோலிகளோடு போய் விட்டார்கள். அக்காலகட்டத்தில் அவர்களுக்குத் தலைமை தாங்க விக்னேஸ்வரன் தயாராக இருக்கவில்லை. இது முதலாவது காரணம்.

இரண்டாவது காரணம்,ஆயுதப் போராட்டத்தின் தோல்வியால் ஏற்பட்ட அதிர்ச்சி கூட்டுக்காயம், கூட்டு மனவடுக்கள் முற்றாக ஆறாத ஒரு நிலமை. மூன்றாவது காரணம், வெற்றி பெற்ற தரப்பாகிய அரசாங்கத்தின் புலனாய்வுக் கட்டமைப்புக்குள் தப்பிப் பிழைத்திருக்க வேண்டிய ஓர் இராணுவ அரசியற் சூழல். இதனால் இளையோரை அரசியல் நீக்கம் செய்ய விளையும் தரப்புக்களுக்கு அதிகம் வாய்ப்பான சூழல் காணப்படுவது.

நாலாவது காரணம், தொழில்நுட்பப் பெருக்கம். அதாவது கைபேசிகள், மடிக்கணனிகள், ரப் போன்றவற்றின் பெருக்கத்தாலும் இணைய வேகம் அதிகரித்தமையினாலும் இளையோரின் கவனத்தைக் கலைக்கும் வளர்ச்சிகள் அதிகரித்து வருகின்றன. ஒரு தலைமுறையின் மனப்பதிவே மாறி வருகிறது. ஆழமான வாசிப்பும், ஆழமான யோசிப்பும் குறைந்து வருகிறது. முகநூலில் ஸ்குறோல் பண்ணிக் கடப்பதைப் போல அறிவுசார் விடயங்கள் பலவற்றையும் நுனிப்புல் மேயும் போக்கு அதிகரித்து வருகிறது. இவ்வாறாக தொழில்நுட்பத்தின் கைதிகளாகக் காணப்படும் இளையோரைத்தான் விக்னேஸ்வரன் அணிதிரட்ட வேண்டியிருக்கும்.

மேற்சொன்ன பிரதான காரணிகளின் கூட்டு விளைவாக கட்டியெழுப்பப் பட்டிருக்கும் இளையோரின் உளவியலை விக்னேஸ்வரன் எந்தளவிற்கு விளங்கி வைத்திருக்கிறாரோ தெரியவில்லை. புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையானது வழமையான அவரது அறிக்கைகளைப் போல கலைத்துவம் மிக்க சொற்களால் எழுதப்பட்டிருந்தது. கூர்மையான அரசியற் செய்திகள் எதுவும் அதில் இருக்கவில்லை. இளைஞர்களை நோக்கி விவேகானந்தர் அழைத்த பொழுது அந்த அழைப்பில் காணப்பட்டதைப் போல பேரெழுச்சியோ புத்தெழுச்சியோ விக்னேஸ்வரனின் அழைப்பில் காணப்படவில்லை.

இது புரிந்து கொள்ளத்தக்கதே. ஏனெனில் தன்னுடைய அரசியல் இலக்குகளைக் குறித்தும் அதற்கான வழி வரைபடத்தைக் குறித்தும் சரியான தரிசனத்தோடும் உரிய அர்ப்பணிப்போடும் தலைமைத் தாங்கத் தயாராக இருக்கும் போதே அவருடைய அழைப்பில் ஓரு பேரெழுச்சியை எதிர்பார்க்கலாம். ஆனால் அவர் இப்பொழுதும் தளம்பிக் கொண்டே இருக்கிறார். நல்லவராகவும், நீதிமானாகவும் இருந்தால் மட்டும் போதாது. அதற்குமப்பால் இளையோரை வசீகரிக்கும் விதத்தில் உறுதியான துலக்கமான தலைமைத்துவத்தை வழங்க வேண்டும். அப்பொழுது தான் இளையோரை அணி திரட்டலாம். தான் செல்லும் வழி எதுவென்பதைக் குறித்து ஒரு தலைமையிடம் தளம்பலில்லாத தெளிவான வழி வரைபடம் இருக்க வேண்டும். ஆனால் இக்கட்டுரை எழுதப்படும் இக்கணம் வரையிலும் விக்னேஸ்வரன் அப்படியொரு தலைவராகத் தன்னை எண்பித்திருக்கவில்லை.

இளைஞர்களை எந்தளவு தூரம் ஆக்க சக்தியாக்கலாம் என்பது தலைமைத்துவத்தில் தான் தங்கியிருக்கிறது. இலட்சியவாதத் தலைவர்கள் தோன்றும் போது இளையவர்கள் அதிசயங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள். நடந்து முடிந்த நினைவு கூர்தலின் போது யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தொடக்கத்தில் முரண்டு பிடித்தாலும் முடிவில் விக்னேஸ்வரனின் தலைமைத்துவத்தை ஓரளவிற்காவது ஏற்றுக் கொண்டார்கள். நினைவு கூர்தல் தொடர்பில் மாணவர்களை முன்கூட்டியே அரவணைத்து அவர்களுடைய நம்பிக்கைகளை வென்றெடுத்திருந்தால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட குழப்பங்களை தவிர்த்திருக்கலாம்.

எனினும் அதற்கிருக்கக்கூடிய எல்லாவிதமான வரையறைகளோடும் விக்னேஸவரனின் அழைப்பிற்கு ஒரு கால முக்கியத்துவம் உண்டு. இது ஓர் இடைமாறு காலகட்டம். நவீன தமிழில் தோன்றிய ஒரு வீர யுகம் முடிந்து விட்டது. ஒர் அறிவு யுகம் இனித் தொடங்க வேண்டியிருக்கிறது. ஒரு வீர யுகத்திலிருந்து பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் தான் ஓர் அறிவு யுகத்தைக் கட்டியெழுப்பலாம். தமிழில் தோன்றிய நவீன வீர யுகமானது அதற்கேயான யுக புருஷர்களையும், யுகக் கவிஞர்களையும், யுகப்பாடல்களையும், யுகக் குறியீடுகளையும் கொண்டு வந்தது. அது போலவே தமிழில் தோன்றவிருக்கும் அறிவு யுகத்திற்கும் புதிய யுக புருஷர்கர்கள், அறிஞர்கள், விமர்சகர்கள் இனி எழுவர்.

இப்பொழுது நடந்து கொண்டிருப்பது ஓர் இடைமாறுகால கட்டம் அல்லது யுகம் மாறுகாலகட்டம் எனலாம். விக்னேஸ்வரன் இவ்இடைமாறுகால கட்டத்திற்குரியவர். அவரை அவருக்குரிய வரையறைகளோடு விளங்கிக் கொள்ள வேண்டும். ஓர் இடைமாறுகால கட்டத்தின் தலைமைகள் இப்படித்தான் இருக்கும். ஓர் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னரான தலைமைகளும் இப்படித்தான் இருக்கும். அதாவது ஒரு யுக முடிவின் பின் செலிபரேட்டிகளே – பிரமுகர்களே சமூக இயக்கங்களை முன்னெடுப்பார்கள். பின்னர் பொருத்தமான கிளர்ச்சியாளர்கள் அல்லது போராளிகள் அதற்குத் தலைமை தாங்குவார்கள்.

ஈழத் தமிழ் அரசியல் இப்பொழுதும் இரண்டு யுகங்களுக்கிடையேதான் நிற்கிறது. இக்கால கட்டத்தில் விக்னேஸ்வரனின் அழைப்பு ஆக்கபூர்வமானது. முதலில் யாழ் பல்கலைக்கழகமும் உட்பட அரங்கில் உள்ள எல்லா மாணவர் அமைப்புக்களையும் ஒன்று திரட்ட வேண்டும். தாயகத்தில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் இளையோரையும் அவர் ஒன்று திரட்ட வேண்டும்.

கடந்த ஒன்பதாண்டுகளில் எந்தவொரு தமிழ்க் கட்சியும் பலமான மாணவர் அமைப்பைக் கட்டியெழுப்பியிருக்கவில்லை. எந்தவொரு கட்சிக்கும் பலமான இளையோர் அமைப்பெதுவும் இல்லை. தமிழரசுக்கட்சிக்கென்றிருந்த இளைஞர் அணியின் துடிப்பு மிக்க தலைவர் எதிரணிக்குப் போய் விட்டார்.

எனது நண்பரான ஒரு புலமைச் செயற்பாட்டாளர் பின்வருமாறு கூறுகிறார். ‘எமது கட்சிகள் செயற்பாட்டியக்கங்களுக்கு கிராம மட்டத்தில் பலமான வலைப்பின்னல்கள் இல்லை. ஆனால் ஒப்பீட்டளவில் படைத்தரப்பிற்கு மிகப்பலமான ஒரு கிராம மட்ட வலைக்கட்டமைப்பு உண்டு’ என்று. இவ்வலைக்கட்டமைப்பு அதிக பட்சம் தொண்டு அடிப்படையிலானது அல்ல. மாறாக தொழில் பூர்வமானது. அது முழுக்க முழுக்க நலன்சார் வலைப்பின்னல் எனவே ஒப்பீட்டளவில் பலமாகக் காணப்படுகிறது.

இப்புதிய களயதார்த்தத்தை எதிர் கொண்டே ஓர் இளையோர் அமைப்பைக் கட்டியெழுப்ப வேண்டியிருக்கும்.இதில்; பேரவை ஒரு முதலடியை எடுத்து வைத்திருக்கிறது. ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்திற்கான முதல் அடிவைப்பாக அது அமைய வேண்டும். தமிழ்க் கூட்டுக் காயங்களிலிருந்து ஊற்றெடுக்கும் ஒரு புதிய தமிழ் ஜனநாயகத்தை அது பலப்படுத்த வேண்டும். தமிழ் அரசியலை அறிவியல் மயப்படுத்தும் ஒரு மகத்தான அடிவைப்பாக அது அமையட்டும். சிவகுமாரனிடமிருந்த ஓர்மமும் அர்ப்பணிப்பும் பெரும்பாலான இளையோரிடம் உண்டு. ஆனால் அதை ஆக்க சக்தியாக மாற்ற வல்ல தலைவர்கள் இல்லை என்பதே பிரச்சினை.சிவகுமாரனைப் போல ஓர்மமும் அர்ப்பணிப்பும் மிக்க தலைவர்கள் முன் வரும் போது அது நடக்கும். ஒரு வீர யுகத்துக்குப் பின்னரான தமிழ் அரசியல் அதற்குரிய புதிய வழியைத் திறக்கும். ஒரு புதிய தமிழ் அறிவு யுகம் பிறக்கும்.

நிலாந்தன்