பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்க துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மனித உரிமைகள் மற்றும் நாட்டின் பிரஜைக்கான அடிப்படை சுதந்திரம் என்பவற்றை பேணுவதற்கும், அவற்றை விரிவுபடுத்துவதற்கும்  சிறிலங்காவினால்  முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் முன்நகர்வுகள் பாராட்டுக்குரியவை. எனினும் பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்குதல் அல்லது சர்வதேச தரநியமங்களுக்குட்படுத்தல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், 2015 ஒக்டோபரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தல், மக்களின் காணிகளை விரைவாக விடுவித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இலங்கை துரிதமான நடவடிக்கைகளை சிறிலங்கா  முன்னெடுக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கையின் இணை ஆணைக்குழு என்பவற்றின் கீழ் தொழிற்படும் சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித உரிமைகள் தொடர்பான அரச தொழிலாளர் குழுமத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் ப்ருசெலில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றை பாதுகாப்பதற்கு இலங்கையால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு, இனமத சார்பான வன்முறைகள், செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவும், அவற்றை முற்று முழுதாக நிறுத்துவதற்கும் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்துவரும் முன்நகர்வுகளை வரவேற்பதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சிறிலங்கா அரசால் முன்னெடுக்கப்படும் தொழிலாளர்கள் தொடர்பான நடவடிக்கைகள், சுற்றாடல் பாதுகாப்புத் திட்டங்கள், சிறந்த நிர்வாகத்தை கட்டயெழுப்புவதற்கான முயற்சிகள் என்பனவும் ஆராயப்பட்டதுடன், இலங்கையின் நல்லிணக்க முயற்சிக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மனித உரிமைகள் தொடர்பான விடயத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம், தகவல் அறியும் உரிமைச்சட்டம் போன்ற முக்கிய நகர்வுகள் சிறிலங்கா  அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மனித உரிமைகள் விடயம் தொடர்பில் சர்வதேசத்திற்கு பொறுப்புக்கூறல், தொழிலாளர் உரிமைகள், சுற்றாடல் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் இலங்கையின் தொடர்ச்சியான செயற்பாடுகளை ஜரோப்பிய ஒன்றியம் கண்காணித்து வருகின்றது.

மேலும் பயங்கரவாதத்தடைச் சட்டத்தை நீக்குதல் அல்லது சர்வதேச தரநியமங்களுக்குட்படுத்தல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், 2015 ஒக்டோபரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தல், மக்களின் காணிகளை விரைவாக விடுவித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் சிறிலங்கா  துரிதமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

அத்தோடு ஊடக சுதந்திரம், சிவில் சமூகங்களின் உரிமைகளை வலுப்படுத்தல், பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகளை மேலும் முன்னேற்றுதல், சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளித்தல், காணி விடுவிப்பு ஆகியன தொடர்பிலும் மேற்படி கூட்டத்தொடரில் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.