அவுஸ்ரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் தலைவர் பேராசிரியர் ரொறி மெட்காப் (Prof. Rory Medcalf) அண்மையில் சிறிலங்காவிற்கு வருகை தந்திருந்தார். இவர் சிறிலங்காவில் தங்கியிருந்த போது ?டெய்லி மிரர்? நாளிதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார்.
பேராசிரியர் தனது நேர்காணலில் சிறிலங்காவின் மூலோபாய அமைவிடம் மற்றும் அவுஸ்ரேலியாவின் பார்வையில் சிறிலங்காவின் அமைவிடத்தின் முக்கியத்துவம் தொடர்பாக விளக்கமளித்திருந்தார்.
பேராசிரியரின் நேர்காணலிலிருந்து சில முக்கிய குறிப்புக்கள் பின்வருமாறு:
*நாங்கள் அவுஸ்ரேலியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான மூலோபாய மற்றும் பாதுகாப்பு உறவை மேலும் விரிவுபடுத்த விரும்புகிறோம்.
*கடல் பாதைகளில் சிறிலங்கா மையப் புள்ளியில் அமைந்துள்ளது. கப்பல்கள் தங்கி நிற்பதற்கான முக்கிய அமைவிடத்தை சிறிலங்கா கொண்டுள்ளது.
*சிறிலங்கா மீது சீனா தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் எவ்வாறு பயன்படுத்துகிறது என்பது தொடர்பாக வேறு பல நாடுகளைப் போலவே அவுஸ்ரேலியாவும் கவலையடைந்துள்ளது.
*மத்திய மற்றும் சிறிய சக்தி வாய்ந்த நாடுகள் ஒன்றிணைய வேண்டிய ஒரு பிராந்தியமாக இது காணப்படுகிறது.
*சீனாவுடன் முதலீடு செய்ததை விட நாங்கள் அமெரிக்கா, யப்பான் மற்றும் வேறு பல நாடுகளுடன் பெரிய முதலீட்டு உறவுகளைக் கொண்டுள்ளோம்.
பேராசிரியர் ரொறி மெட்காப்புடனான நேர்காணலின் முழு விபரம் பின்வருமாறு:
கேள்வி: சிறிலங்காவிற்கான தங்களின் பயணத்தின் நோக்கம் என்ன?
பதில்: அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், கல்விமான்கள், முன்னாள் கடற்படை அதிகாரிகள் போன்ற பல்வேறு தரப்பினரை உள்ளடக்கிய பிரதிநிதிகள் சிறிலங்காவிற்கு வருகை தந்துள்ளனர். அவுஸ்ரேலியா மற்றும் சிறிலங்காவிற்கு இடையிலான உறவை மேலும் ஆழப்படுத்துவதில் நாம் உண்மையில் விருப்பம் கொண்டுள்ளோம். இது எமக்கான கற்றல் அனுபவமாகவும் உள்ளது.
சிறிலங்காவானது இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் செயற்படு நிலையிலுள்ள முக்கிய பங்காளி நாடாக வளர்ந்து வருகிறது. இந்த நிலையில் சிறிலங்காவின் மூலோபாய பார்வை எவ்வாறானதாக உள்ளது என்பதை விளங்கிக் கொள்வதும் எமது பயணத்தின் நோக்காகும்.
இரண்டாவதாக, சிறிலங்காவும் அவுஸ்ரேலியாவும் இணைந்து மேலும் பல செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது என நாம் நம்புவதால் அவுஸ்ரேலியாவின் தோற்றப்பாடுகள் என்ன என்பதையும் சிறிலங்காவுடன் பகிர்ந்து கொள்வதை நோக்காகக் கொண்டுள்ளோம்.
சிறிலங்கா, இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய மூன்று நாடுகளையும் உள்ளடக்கிய முத்தரப்பு கலந்துரையாடலில் ஈடுபடுவது புதிய விடயமாகும். அத்துடன் இது ஒரு பிராந்தியக் கலந்துரையாடலாகவும் உள்ளது.
ஆகவே சிறிலங்காவிற்கான எமது பயணத்தை எமது அரசாங்கத்திற்குப் பயன்படும் விதமாக மாற்றியமைப்போம் என நாம் நம்புகிறோம்.
கேள்வி: இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் சிறிலங்காவின் மூலோபாய அமைவிடத்தை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?
பதில்: சிறிலங்காவானது மூலோபாய முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. பாரிய பொருளாதாரச் செயற்பாடுகள் தொடர்பாக சீனா, யப்பான், இந்தியா, தென்கொரியா போன்ற ஆசிய நாடுகளிலும் அதன் கடல் பாதைகளிலும் நாங்கள் தங்கியுள்ளோம்.
இவ்வாறான கடல் பாதைகளின் மையப்புள்ளியில் சிறிலங்கா அமைந்துள்ளது. கப்பல்கள் தரித்து நிற்பதற்கான முக்கிய இடமாக சிறிலங்கா காணப்படுகிறது. இப்பிராந்தியத்தில் எத்தகைய கடல் சார் செயற்பாடுகள் நடக்கின்றன என்பதைப் பார்ப்பதற்கான கேந்திர அமைவிடத்தையும் சிறிலங்கா கொண்டுள்ளது.
இரண்டாவதாக, சிறிலங்காவில் சீனா தனது அதிகாரத்தையும் நலன்களையும் விரிவாக்குவதுடன் இந்திய மாக்கடலில் தனது இருப்பைப் பலப்படுத்துவதற்கும் சிறிலங்காவைப் பயன்படுத்தி வரும் நிலையில் சிறிலங்காவானது மூலோபாயப் போட்டி மிக்க நாடாக மாறியுள்ளது. சீனா தனது அதிகாரத்தையும் செல்வாக்கையும் எவ்வாறு சிறிலங்காவில் பயன்படுத்துகிறது என்பது தொடர்பாக வேறு பல நாடுகளைப் போலவே அவுஸ்ரேலியாவும் கவலையடைந்துள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் ஆட்சியைக் கொண்டுள்ள அமெரிக்கா தொடர்பாக சில பதற்றங்கள் நிலவுவதால், அவுஸ்ரேலியாவானது சீனா அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளுடன் அல்லாது, மத்திய நாடுகளுடன் தனது உறவை விரிவுபடுத்துவதில் அக்கறை காண்பிக்கின்றது.
குறிப்பாக யப்பான், இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் அவுஸ்ரேலியா தனது உறவை விரிவுபடுத்தி வருகிறது. சிங்கப்பூர் மற்றும் சிறிலங்கா போன்ற சிறிய நாடுகளுடனும் அவுஸ்ரேலியா தனது உறவைப் பலப்படுத்தி வருவது இங்கு முக்கியமானதாகும்.
ஆகவே நடுத்தர நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர்வதுடன் பாரிய அதிகாரத்துவப் போட்டியை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பான தகவல்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டிய தேவையுள்ளது.
கேள்வி: சிறிலங்கா ஏற்கனவே சீனாவின் ஒரு பாதை ஒரு அணை என்கின்ற திட்டத்துடன் இணைந்து கொண்டுள்ளது. இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் இத்திட்டமானது எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படும்?
பதில்: நான் தனிப்பட்ட ரீதியாக ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டம் தொடர்பாக எச்சரிக்கையாக உள்ளேன். ஒரு மட்டத்தில் நோக்கும் போது இத்திட்டமானது சீனா போன்ற எழுச்சியுறும் சக்தி வாய்ந்த நாடுகள் இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் முதலீடு செய்வதானது நல்லதொரு செயலாகும். ஏனெனில் இப்பிராந்தியத்தில் மேலும் கட்டுமானங்கள் தேவையானதாகும். இந்த நாட்டில் வேறு சில திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதையும் நீங்கள் காணமுடியும்.
ஆனால் இவ்வாறான திட்டங்கள் எதிர்மறையான மூலோபாய மற்றும் அரசியல் செல்வாக்காக மாறிவிடக் கூடாது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அத்துடன் இவ்வாறான திட்டங்களால் நாடுகள் கடன் பொறிக்குள் தள்ளப்படுவதைத் தவிர்க்க வேண்டிய தேவையும் உள்ளது.
வணிக நோக்கங்களைக் கொண்ட பொருளாதார முதலீடுகள் ஆராயப்பட வேண்டும். பொருளாதார ரீதியாக எந்தவொரு நாட்டின் மீதும் தங்குவதைத் தவிர்ப்பது தொடர்பாக அவுஸ்ரேலியா ஆராய்ந்து வருகிறது. ஏனெனில் எதிர்காலத்தில், இது பல நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தலாம்.
வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பாக அவுஸ்ரேலியா தெளிவான வழிகாட்டல்களைக் கொண்டுள்ளது. நாங்கள் பல நாடுகளுடன் திறந்த பொருளாதாரச் செயற்பாடுகளை மேற்கொள்கிறோம். சீனா எமது பாரியதொரு வர்த்தகப் பங்காளியாக உள்ளதென்பது உண்மை தான். ஆனால் எமக்கான பாரிய முதலீட்டு பங்காளி நாடு அமெரிக்கா ஆகும்.
நாங்கள் அமெரிக்கா, யப்பான் போன்ற பல நாடுகளுடன் சீனாவை விட அதிக முதலீட்டு உறவுகளைக் கொண்டுள்ளோம். இவற்றுக்கப்பால், அனைத்து வெளிநாட்டு முதலீடுகளும் தற்போது தேசிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார நியமங்களுக்கு அமைவாக அவுஸ்ரேலியாவால் மதிப்பீடு செய்யப்படுகின்றன.
கேள்வி: சீனாவின் நிகழ்ச்சி நிரலில் பல நாடுகள் தங்கியிருக்கும் நிலையில் எதிர்காலத்தில் அவுஸ்ரேலியாவானது சீனாவுடன் எத்தகைய உறவுகளைக் கொண்டிருக்கும்?
பதில்: இதனை நான் வேறு விதமாகப் பார்க்கிறேன். பிராந்திய நலனிற்காக ஒரு நாட்டின் நிகழ்ச்சித் திட்டத்தில் மற்றைய நாடுகள் தங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. நாடுகள் தத்தமது இறையாண்மைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
நீதி, இறையாண்மை, நிறைவு போன்ற அடிப்படைகளில் சீனாவுடனான தனது உறவை பாகிஸ்தான் உறுதிப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. அமெரிக்கா தொடக்கம் தென்கிழக்காசியாவின் இந்திய மாக்கடல் வரை பரந்து விரிந்துள்ள ஒரு பாரிய பிராந்தியமாக இந்திய-பசுபிக் பிராந்தியம் அமைந்துள்ளது. அத்துடன் இப்பிராந்தியமானது ஆபிரிக்கக் கரை வரையும் நீண்டுள்ளது.
பல அதிகார சக்திகளைக் கொண்டுள்ள ஒரு பிராந்தியமாகவும் தனியொரு நாடு அதிகாரம் செலுத்துவதற்குக் கடினமான பரந்த பிராந்தியமாகவும் இது காணப்படுகிறது. பல்முகத் தன்மை கொண்ட சமவலுவைக் கொண்ட பிராந்தியமாக இது காணப்படுவதால் நாங்கள் மற்றைய நாடுகளுடன் ஒற்றுமையாகச் செயற்படுவதுடன் சிறிய நாடுகள் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கேள்வி: சிறிலங்காவின் துறைமுக அபிவிருத்தியில் சீனாவின் முதலீட்டை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?
பதில்: சிறிலங்கா மீதான தனது முதலீட்டை சீனா தனக்கான மூலோபாய செல்வாக்காக தவறாகக் கருதுகிறதா என்பதே எனது கேள்வியாகும். அவ்வாறாயின், நீண்ட கால அடிப்படையில் நோக்கில் இது உங்களின் நலனாக இருக்காது.
ஏனெனில் இது பல்வேறு அதிகார சக்திகள் குவிந்துள்ள பிராந்தியமாகும். இதனை தனியொரு நாடு அதிகாரம் செலுத்துவதற்கு இயலாத விரிந்த பிராந்தியமாகும். நடுத்தர மற்றும் சிறிய சக்திகள் ஒன்றிணைய வேண்டிய பிராந்தியமாகவும் இது காணப்படுகிறது. இது தொடர்பாக நாங்கள் அனைவரும் இணைந்து ஆராயவேண்டிய தேவையுள்ளது.
அத்துடன் சீனா போன்ற அதிகாரத்துவ நாடுகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பாகவும் மதிப்பீடு செய்ய வேண்டும். எதிர்காலத்தில் அதிகாரத்துவத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு செயற்பாட்டையும் நாம் தவிர்க்க வேண்டும். சீனாவின் பொருளாதாரத் திட்டங்கள், ஏற்கனவே கொலனித்துவத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் நவீன-கொலனித்துவ அனுபவமாக மாறுவதைப் பார்க்க நாங்கள் விரும்பவில்லை.
கேள்வி: இந்த நாடுகளுடன் சிறிலங்கா தனது நட்புறவை எவ்வாறு சமவலுப்படுத்த முடியும்?
பதில்: இது நல்லதொரு வினாவாகும். ஒரு நாடு சந்திக்கக்கூடிய முக்கிய பிரச்சினையாகவும் இது உள்ளது. சிறிலங்கா மீது வேறு நாடுகள் போதியளவு கவனம் செலுத்தாத அல்லது விளங்கிக் கொள்ளாத நிலை முன்னர் காணப்பட்டது. ஆனால் தற்போது இதற்கு எதிர்மாறான பிரச்சினை சிறிலங்காவிற்கு உள்ளது.
சிறிலங்கா ஒரு சிறிய நாடாகவும் ஜனநாயக நாடாகவும் கேந்திர முக்கியத்துவம் மிக்க நாடாகவும் உள்ளதால் இது தனது தேசிய முன்னுரிமைகள் மற்றும் தேசிய விழுமியங்கள் தொடர்பாகவும் ஒரு தெளிவான வரையறையைக் கொண்டிருக்க வேண்டும்.
ஆகவே இதற்கான உள்ளக ஆளுமைகளையும் திறன்களையும் சிறிலங்கா கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக திறமையான புத்தாக்க ஆற்றலைக் கொண்ட இராஜதந்திரிகளை சிறிலங்கா கொண்டிருக்க வேண்டும். இவ்வாறான இராஜதந்திரிகள் சிலர் தற்போது செயற்பட்டாலும் கூட இதற்கும் அதிகமானவர்களை சிறிலங்கா உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும்.
சிறிலங்கா தன் மீது அதிகாரம் செலுத்த முன்வரும் அனைத்து நாடுகளுடனும் வினைத்திறன் மிக்க வகையில் முகாமை செய்யக்கூடிய ஆளுமையை விருத்தி செய்ய வேண்டும். இந்த வகையில் தேசிய பாதுகாப்பு மற்றும் தேசியக் கோட்பாடு தொடர்பாக பயிற்சிகளையும் கல்வியையும் வழங்கக் கூடியவாறான தொடர்புகளை சிறிலங்காவானது அவுஸ்ரேலியாவுடன் முன்னெடுக்க முடியும் என நான் பரிந்துரைக்கிறேன்.
ஒரு பல்கலைக்கழகத்தின் தலைவர் என்ற வகையில் நான் இதனைக் கூறுகிறேன். இவ்வாறான பயிற்சிகள் மூலம், இந்திய மாக்கடலில் சிங்கப்பூர் கொண்டுள்ள இராஜதந்திர முக்கியத்துவம் போன்று, சிறிலங்கா ஒரு முக்கிய இராஜதந்திர செயற்பாட்டாளராக மாறுவதற்கு அவுஸ்ரேலியா உதவ முடியும்.
கேள்வி: இந்திய மாக்கடலில் கட்டளையிடுவதை உறுதிப்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பு எத்தகையது என தாங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: இந்திய மாக்கடலில் கட்டளையிடுவதில் இந்திய மிகப் பிரதான பங்காற்றுகிறது. இந்தியாவானது மிகப்பாரிய சக்தி வாய்ந்த நாடாக தொடர்ந்தும் காணப்படுகிறது. ஆனால் ஏனைய நாடுகளால் எழும் சவால்களை எவ்வாறு கையாள்வது மற்றும் மற்றைய நாடுகளுடன் இணைந்து பணியாற்றுதல் தொடர்பாகவும் இந்தியா ஆராய்ந்து வருகிறது.
எடுத்துக்காட்டாக, இந்திய மாக்கடல் மீதான சீனாவின் செல்வாக்கானது சிறிய நாடுகளுக்கு எவ்வாறான வகையில் பாதிப்பற்ற நலனை ஏற்படுத்தும் மற்றும் அமெரிக்கா, யப்பான், பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியா போன்ற நாடுகள் இப்பிராந்தியத்தில் நுழையும் போது அவற்றுடன் பாதுகாப்பு சார் தொடர்புகளை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்பதை இந்தியா ஆராய வேண்டும்.
கேள்வி: உலகின் சக்திவாய்ந்த நாடுகளுடன் தனது உறவுகளை சமப்படுத்துவதில் சிறிலங்கா பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்கின்றது. சிறிலங்கா மீது அரசியல் சார் நலன்களைக் கொண்டுள்ள நாடு இந்தியாவாகும். தங்களது பார்வையில் இந்தியாவுடனான உறவை சிறிலங்கா எவ்வாறு சமவலுப்படுத்த முடியும் என தாங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: சிறிலங்காவானது சுயாதீன வெளிநாட்டுக் கோட்பாட்டை நிலையாகக் கொண்டிருக்க வேண்டிய தேவையுள்ளது. ஆனால் சீனாவின் செல்வாக்கிற்காக இந்தியாவின் செல்வாக்கை சிறிலங்கா பண்டமாற்றிக் கொள்ள முடியும் என்பதல்ல. அமெரிக்கா, யப்பான், அவுஸ்ரேலியா, சீனா மற்றும் இந்தியா போன்ற செல்வாக்கு மிக்க நாடுகளுடன் சமவலுவான உறவைப் பேணக்கூடிய அணுகுமுறையை சிறிலங்கா கடைப்பிடிக்க வேண்டும்.
கேள்வி: சட்ட ரீதியற்ற வகையில் அவுஸ்ரேலியாவிற்குள் நுழைந்த இலங்கையர்கள் உட்பட பலர் அவுஸ்ரேலியாவின் மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டமை மனித உரிமை மீறல் என்கின்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பான தங்களின் பதில் என்ன?
பதில்: சட்ட ரீதியற்ற குடிவரவாளர்கள் மற்றும் ஆட்கடத்தல்காரர்கள் தொடர்பான விடயமானது பல ஆண்டுகளாக அவுஸ்ரேலியாவில் அரசியல் விவகாரமாக காணப்படுகிறது. கடல் மூலம் சட்ட ரீதியற்ற வகையில் அவுஸ்ரேலியாவிற்குள் நுழையும் எவருக்கும் அவுஸ்ரேலியாவின் குடியுரிமை வழங்கப்படமாட்டாது என சில ஆண்டுகளுக்கு முன்னர் அவுஸ்ரேலிய அரசாங்கத்தால் கொள்கை ரீதியாக தீர்மானிக்கப்பட்டது.
பதிலாக, ஐ.நா மனிதாபிமான நிகழ்ச்சித் திட்டங்களின் ஊடாக சட்ட ரீதியான குடிவரவாளர்களை அதிகளவில் ஏற்றுக்கொள்வதென அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்தது. மனுஸ் தீவில் அமைக்கப்பட்ட தற்போது மூடப்பட்டுள்ள தடுப்பு முகாம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைக்குரிய அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
அவுஸ்ரேலியாவிற்கு கடல் மூலம் சட்டத்திற்கு முரணான வகையில் மக்கள் நுழையும் போது அவர்கள் கடலில் இறக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. ஆகவே இவ்வாறான உயிரிழப்புக்களுடன், மனுஸ் தீவில் அமைக்கப்பட்ட தடுப்பு முகாமை ஒப்பீடு செய்து கொள்ளும் போது இதன் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள முடியும்.
ஆங்கிலத்தில் : Kelum Bandara
தமிழில் : நித்தியபாரதி