இவான் துர்கனேவ்
‘காதல் வயது தொடர்புடையதல்ல; ஆன்மாவுடன் தொடர்புடையது. காதலின் முன் வாழ்வின் வரையறைகள் அர்த்தமற்றவை. வேறெந்த உணர்ச்சிகளுக்கும் பொருளில்லை. காதல், வாழ்வின் ஓர் அங்கமல்ல; காதலே வாழ்வின் முழுமை. நிராகரிப்பின் உச்சத்திலும் அவமானத்தின் கீழ்மையிலும்கூட காதலின் புனிதத்தைக் காக்க முடியும்!’ இவான் துர்கனேவின் வாழ்க்கையில் இருந்து காதலை மேற்சொன்னவாறு புரிந்துகொள்ளலாம்.
உலக இலக்கியத்தின் எந்தப் பக்கத்திலும் துர்கனேவைப் போலொரு கதாபாத்திரத்தைப் பார்க்க முடியாது. எழுதப்பட்டிருந்தாலும் ஏற்கமுடியாத பாத்திரமாக துர்கனேவ் இருந்திருப்பார். காதல் தனக்கொரு பெயர் சூட்டிக்கொள்ள விரும்பினால் நிச்சயம் இவான் துர்கனேவ் பெயரையே தேர்வு செய்யும்.
உலகப் புகழ்பெற்ற ஸ்பானிஷ் பாடகி பவுலின் கார்சியா. தன்னைவிட 20 வயது மூத்த எழுத்தாளர் லூயிஸ் வியாடர்ட்டை மணந்தவர். ரஷ்யாவில் ஒபரா நிகழ்ச்சியில் பாட வந்தவரிடம் துர்கனேவ் காதல் வயப்படுகிறார். பவுலினுக்கு ஏராளமான ரசிகர்களும் காதலர்களும். துர்கனேவும் அப்படியொரு காதலனாகத்தான் இருப்பார் என கார்சியா நம்பினார். காதலர்களுக்கான எல்லா இலக்கணங்களையும் மீறப் போகிறோம் என்பதை துர்கனேவே உணர்ந்திருக்க மாட்டார். கார்சியாவுடனான காதல் அவரின் வாழ்க்கையை மாற்றிப்போட்டது.
மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் பேராசிரியராகச் செல்ல இருந்தவரைக் காதல், வாழ்நாள் முழுக்க நாடோடியைப் போல் அலைய விட்டுவிட்டது. 20 கிராமங்களைக் கொண்ட பண்ணையும், 5 ஆயிரம் அடிமைகளும் கொண்ட ரஷ்ய தேசத்தின் பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த துர்கனேவ், பாரீஸ் நகரில் ஒரு பாடகியின் வீட்டில் அழையா விருந்தாளியாக இருந்தார். ரஷ்ய மொழிக் கற்றால்கூட மேல்தட்டு வாழ்க்கையின் தரம் குறையும் என சிறுவயதிலேயே பிரெஞ்சும் ஜெர்மனும் கற்பிக்கப்பட்ட மேட்டுக்குடி துர்கனேவ், திருமணமானப் பெண்ணின் வீட்டில் வேலைக்கார காதலனைப் போல் குடியேறினார்.
ஈர்க்கும் அழகனாக இருந்த துர்கனேவை காதலிக்க எத்தனையோ பெண்கள் ரஷ்யாவில் காத்திருக்க, வேறொருவரின் மனைவியின் அன்புக்காக துர்கனேவ் காத்துக் கிடந்தார். அழகு, செல்வம், செல்வாக்கு எதிலும் தனக்கு நிகரற்ற பவுலினிடம் துர்கனேவ் கொண்ட காதல், கற்பனைக்கு எட்டாதது.பெர்லினில் கற்ற தத்துவம், வரலாறு, கணிதம் போன்றப் பாடங்களும், லத்தீன் கிரேக்க மொழிகளும், இசை, ஓவியம் உள்ளிட்ட கலைகளும் பொருந்தாக் காதலில் இருந்து துர்கனேவை மீட்டெடுக்கவில்லை.
கண்டடைந்த அமைதி என்ன?
25 வயதில் துர்கனேவைப் பிடித்த காதல்பித்து 65 வயதில் அவர் மரணிக்கும்வரை, 40 ஆண்டு காலம் விடாமல் வருத்தியது. பவுலினின் அன்பில் துர்கனேவ் கண்டடைந்த அமைதி யும் மகிழ்ச்சியும் என்ன என்பது அவர் மட்டுமே அறிந்த உண்மை. சாதாரண மனிதனொருவனால்கூட பொறுத்துக் கொள்ளமுடியாத அவமானங்களையும் புறக்கணிப்புகளை யும் துர்கனேவ் எப்படிப் பொறுத்துக்கொண்டார்? ஏன் பொறுத்துக்கொண்டார்? போன்ற கேள்விகளுக்குப் பதில் இல்லை. தான் நேசித்த ரஷ்யாவைவிட்டு பவுலின் குடியேறிய ஜெர்மனிக்கும், பாரீஸுக்கும் இங்கிலாந்துக்குமாக உடன் அலைந்தார். சமகாலத்து எழுத்தாளர்களின் பின்தொடர்ந்த கேலியும் கிண்டலும் துர்கனேவைப் பாதிக்கவே இல்லை.
தாயும் தந்தையும் நடத்திய புரிதலற்ற போலியான வாழ்க்கையினால் பெரும்பாலான நேரங்களில் தனிமையில் தவிக்க நேர்ந்த துர்கனேவ் நெருக்கமான தாயின் அன்பைத் தேடி அலைந்தாரோ? ஆனால், கணவனும் சில காதலர்களும் கொண்ட பவுலின் எல்லா நேரமும் அன்பைக் காட்டியதில்லை. பவுலினுடைய பிள்ளைகளைத் தன் பிள்ளைகளைப் போலவே வளர்த்தார் துர்கனேவ். அப்பிள்ளைகளோ துர்கனேவை ‘அம்மாவின் வேலையாள்’ என கேலி செய்தன. சின்ன வாய்ப்புக் கிடைத்தாலும் துர்கனேவை அவமானப் படுத்த அவர்கள் தயங்கியதில்லை. பவுலினும் தன் சுதந்திர மான வாழ்வில் துர்கனேவைப் பொறுத்துக்கொண்டாரே தவிர, முழுமையான அன்பைத் தந்ததில்லை.
மனதில் இல்லை மாற்றம்
ஜெர்மனியின் கோடை வாசஸ்தலமான பேடன்பேடனில் பவுலினுக்கு வீடொன்றை வாங்கிக் கொடுத்திருந்தார் துர்கனேவ். பவுலினுடைய ஆடம்பரச் செலவுகள், வீட்டுச் செலவுகளைத் துர்கனேவ் செய்திருக்கிறார். தன்னைத் திருமணம் செய்துகொள்ள முடியுமா என துர்கனேவ் ஒருமுறை கேட்டபோது, ‘‘நான் வியாடர்ட் மனைவியாக இருப்பதையே விரும்புகிறேன்” என்று மறுத்துவிட்டார். பவுலின் புதிய காதலர்களைத் தேர்ந்தெடுக்கும் போதெல்லாம் துர்கனேவ் மனதள வில் அதிகம் துயருறுவார். ஆனாலும் பவுலினியைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் என்ற எண்ணத்தில் துர்கனேவுக்கு ஒருபோதும் மாற்றம் வரவே இல்லை.
பெர்லினில் படித்த காலத்தில் அங்கிருந்த அறிவுஜீவிகளின் குழுவில் துர்கனேவும் இருந்தார். ரஷ்யாவில் இருந்து ஜெர்மனியில் படித்துக்கொண்டிருந்த கணிசமான இளைஞர்களின் குழுவொன்று அங்கிருந்தது. ரஷ்யாவில் நிலவிய பண்ணை அடிமைமுறை உள்ளிட்ட சமூக, அரசியல் மாற்றங்கள் வேண்டி தீவிர விவாதங்களில் ஈடுபட்டவர் துர்கனேவ். அங்கு தான் அவர் ரஷ்யாவின் கிளர்ச்சி இயக்கத்தைக் கட்டமைத்தவர்களில் ஒருவரான மைக்கேல் பகுனினைச் சந்தித்தார். பகுனினுடைய துடிப்பான செயல்பாடுகளால் கவரப்பட்ட துர்கனேவ், தன்னுடைய முதல் நாவலில், ருடின் என்ற கதாபாத்திரத்துக்கு பகுனினையே முன்மாதிரியாகக் கொண்டார்.
அடிமைகளை விடுவித்தார்
ரஷ்யாவில் பண்ணையடிமை முறையை ஒழிக்கவேண்டும் என பலர் பேசிக்கொண்டிருந்த காலத்தில் சத்தமின்றிச் செயல்படுத்தியவர் துர்கனேவ். தாய் இறந்தவுடன் சகோதரனுடன் சொத்துகளைப் பிரித்துக்கொண்டவர், தன் பங்குக்கு வந்த அடிமைகளை, பண்ணையில் இருந்து விடுவித்தார். அவர்களுக்குக் கணிசமான பணமும் கொடுத்தார். விரும்பியவர்கள் தன்னுடைய நிலத்தையே குறைந்த தொகையில் குத்தகை எடுத்து விவசாயம் செய்துகொள்ளவும் அனுமதித்தார்.
ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் கோகல் இறந்தபோது துர்கனேவ் அவருக்காக நினைவஞ்சலி ஒன்றை வெளியிட்டார். அரசியல் புரட்சிக்காரராக இருந்த கோகலுக்காக வெளியிட்ட குறிப்பில் அரசியல் விமர்சனங்கள் இல்லையென்றாலும், ஜார் அரசாங்கம் துர்கனேவை கைது செய்து, ஒரு மாதம் சிறை வைத்தது. சிறைவாசத்தின் முடிவில் 2 ஆண்டு காலம் வீட்டுச் சிறையில் வைக்க உத்தரவிட்டது. அரசியல் சீர்திருத்தங்களும், சமூக மாற்றங்களும் வேண்டிய துர்கனேவ் ரஷ்யாவிலேயே தொடர்ந்திருந்தால் ரஷ்ய மக்களின் அன்பைப் பெற்ற சீர்திருத்தவாதியாக இருந்திருப்பார்.
தனது தாயிடம் தையல் பணிசெய்த பெண்ணொருவருடன் உண்டான கல்லூரிக் கால காதலில், துர்கனேவுக்கு ஒரு மகள் பிறந்தாள். பகுனினுடைய தீவிர அரசியல் பேசிய காலங்களில் அவரின் தங்கையுடன் ஓர் அன்பு உண்டானது. அவரோ துர்கனேவ் மீது காதல் கொண்டிருந்தாலும் தன்னால் ஒரு சகோதரியாகவோ, தோழியாகவோ மட்டுமே இருக்க முடியும் என்று மாற்றி மாற்றிப் பேசினார். வெறும் பேச்சாகவே 2 ஆண்டுகள் தொடர்ந்த இந்த உறவு, ஒரு முடிவுக்கு வருவதற்குள் துர்கனேவ் முழுமையாக பவுலினின் வசம் வந்துவிட்டார். துர்கனேவுக்கும் சில காதல்கள் இருந்தாலும் அவரால் பவுலினை விட்டு விலகி இருக்க முடிந்ததே இல்லை.
வேட்டைக்காரனின் குறிப்புகள்
உலகளவில் புகழ்பெற்ற முதல் ரஷ்ய எழுத்தாளர் துர்கனேவ்தான். அவரின் கவித்துவமான மொழிநடையும் நுட்பமான விவரிப்புகளும் மனிதர்களின் அகத்தை எழுதிய நேர்த்தியும் தனித்துவமானவை. ‘வேட்டைக்காரனின் குறிப்புகள்’ என்ற நூலை, டால்ஸ்டாய் ‘‘ரஷ்ய இலக்கியத்துக்கு துர்கனேவின் கொடை’’ எனப் பாராட்டினார். ‘தந்தையும் தனயர்களும்’ நூல் அவருக்கு புகழ் சேர்த்தப் படைப்பு.
பவுலின் தனது கணவருடன் இசை நிகழ்ச்சிகளுக்காக நீண்ட காலம் வெளியில் செல்லும் காலங்களில் ரஷ்யா திரும்பும் துர்கனேவ், தனக்குக் கிடைத்த நேரங்களில் மட்டுமே எழுதி இவ்வளவு புகழ் சேர்த்தார். தன்னுடைய வாழ்க்கைப் பற்றியோ, எழுத்தாளராக தனக்கு இருக்கும் முக்கியத்துவம் பற்றியோ உணர்ந்துகொள்ள விரும்பாமலேயே காதலில் மூழ்கினார். அவருடைய கடைசி நாவலான, ‘வெர்ஜின் சாயில்’ வெளியானபோது ரஷ்யா வந்தவர், தனக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து நெகிழ்ந்துவிட்டார். தொடர்ந்து பேசுவதற்காக ஏற்பாடாகிக் கொண்டிருந்த கூட்டங்கள், கூட்டங்களில் எழுந்த கைத்தட்டல்களின் பேரொலிகள், சந்திப்பதற்காகக் காத்திருந்த ஆயிரக்கணக்கான வாசகர்கள் எல்லாம் துர்கனேவை நெகிழ வைத்தன. தான் தவறவிட்ட உலகத்தின் வரவேற்பில் வயது குறைந்து, தோற்றம் பொலிவாகி பெரும் உற்சாகம் கொண்டார். ஆனாலும் அவரின் காதல் நோய் அவரை ரஷ்யாவில் இருக்க விடாமல் பாரீஸுக்கு இழுத்துச் சென்றது.
நிம்மதியையே தராத அன்பைப் பின்தொடர்ந்து தன்னுடைய உடலையும் மனதையும் கெடுத்துக்கொண்டார். தீராத கவலைகளால் வரும் உளவியல் பாதிப்பினால் அவரின் உடல் பாதிக்கப்பட்டது.
தீவிர மன அழுத்தம் தாங்க முடியாமல் உடல் ஒத்துழைக்க மறுத்தது. தொண்டை வீக்கம், முதுகிலும் தோள்பட்டையிலும் நீடித்த வலி, நீண்ட நேரம் படுத்துக்கிடந்தால்தான் கொஞ்சமாவது வலியின்றி இருக்கலாம் என்ற நிலை, வயிற்றில் இருந்த கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை என உடலின் ஒவ்வொரு பாகத்திலும் எழுந்த வலிகளுக்கெல்லாம் காரணம் தண்டுவடத்தில் வளர்ந்திருந்த புற்றுநோய். மெலிந்து இளைத்திருந்த துர்கனேவ், பொறுக்கவே முடியாத வலியில் இருந்து மீளும் வழியின்றி நினைவுகளைத் தவறவிட்டார். நினைவிலி நிலையிலேயே துர்கனேவின் உயிர் பிரிந்தது. தன்னுடைய காதலியின் மண்ணில் உயிர் போவதை ஆழ்மனதில் அனுபவித்துக்கொண்டே துர்கனேவ் விடைபெற்றிருப்பார்.
யாருக்காகத் தன்னுடைய வாழ்க்கையையே அர்ப்பணம் செய்தாரோ அந்தக் காதலி பவுலின், துர்கனேவின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளவில்லை. பவுலினைப் பின்தொடர்ந்து சென்ற துர்கனேவின் உடல் மட்டும் தனியாக ரஷ்யா திரும்பியது.