நாங்கள் கொழும்பில் மருதானைலொட்சில் தங்கியிருந்தநாட்களில் எமக்கான உணவுச்செலவு மற்றும் லொட்ச்வாடவை என்பவற்றை பிரதானமுகவரான சுலக்சனின் ஏற்பாட்டில் கொழும்புஅன்ரி கவனித்துக்கொண்டிருந்தார். அத்துடன் சுலக்சனும் அவ்வவ்போது வந்து எம்மைச்சந்தித்ததால் எமது அவுஸ்திரேலியக்கடற்பயணம் நாட்கள் தாமதித்தாலும் எப்படியும் சாத்தியப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. இவ்வாறு சுலக்சன் உத்தரவாதமளித்த ஒருவாரகாலமும் உருண்டோடியது.
மேலும் பயணத்திற்கு நான்கு ஐந்து நாட்கள் தாமதமாகியது. பிரதானமுகவர் சுலக்சனும் தனது ஏற்பாட்டாளர்களுக்கு அழுத்தங்களைக்கொடுத்து எம்மை எப்படியாவது அவுஸ்திரேலியப்பயணத்திற்கு படகேற்றுவதற்கு கடும்பிரயத்தனம் மேற்கொண்டார். இதன்விளைவாக எமது பயணம் 2012-ம்ஆண்டு செப்ரெம்பர்மாதம் 24-ம்நாளன்று சாத்தியமாகுமென்று சுலக்சன் கூறினார். அவுஸ்திரேலியப்பயணகாரர்கள் நாங்கள் மருதானைலொட்சிலும் முன்னர் மடுவிலும் வவுனியாவில் தங்கியிருந்தவர்கள் இப்போது கொழும்பில் இருவேறு இடங்களிலும் தங்கவைக்கப்பட்டிருந்தனர். குறித்தநாளன்று இரவு7.00மணியளவில் எல்லோரையும் புறப்படுவதற்கு தயாராகுமாறு சுலக்சன் கூறியதற்கமைவாக நாம் எமது உடமைபாக்குகளையும் தயார்செய்து புறப்படுவதற்கு ஆயத்தமானோம். சுலக்சனும் மற்றுமொரு ஏற்பாட்டாளரான நீர்கொழும்பைச்சேர்ந்த சூட்டிமாத்தயாவும் எம்முடனிருந்தனர். எல்லாம்சரி ஆனால் இந்தப்பயணத்தின் ஒட்டுமொத்த ஏற்பாட்டாளரான றாஜாவின் அழைப்பிற்காக காத்திருந்தோம். நீண்டநேரத்திற்குப்பின்னர் றாஜாவிடமிருந்து அழைப்புவந்தது. றாஜா கூறியசெய்தி பெரும்எதிர்பார்ப்போடிருந்த எமக்கு அது ஏமாற்றத்தையேதந்தது. அதாவது குறித்தபயணத்திற்கு வரவேண்டிய சிலர் வருவதற்கு தாமதம் ஏற்பட்டதால் இன்று பயணம் சாத்தியப்படாது நாளைக்குத்தான் சாத்தியப்படும் என்பதுவே அந்தச்செய்தி. பெரும் ஏமாற்றத்துடன் அன்றையஇரவுப்பொழுது கழிந்தது.
மறுநாளும் அதாவது 25-09-2012அன்றும் எனக்கு பெரியளவில் நம்பிக்ககை இருக்கவில்லை. மறுநாள் இரவு8.00மணியளவில் பயணத்திற்கு ஆயத்தமாகும்படி சுலக்சனால் பணிக்கப்பட்டது. எங்களது கைத்தொலைபேசிகள் சுலக்சனால் கையகப்படுத்தப்பட்டன. அதைத்தொடர்ந்து இருவர் மூவராகச்சென்று வீதியில் நிற்கும் கயஸ்வாகனத்தில் ஏறும்படி பணிக்கப்பட்டது. அவ்வாறே நாம் சென்று வாகனத்தில் ஏறிக்கொண்டோம். நாம் புறப்பட்டுச்செல்லும்வழியில் சிலவேளைகளில் பொலிசார் வழிமறித்து எங்கு செல்கின்றீர்கள் என்று கேட்டால் கதிர்காமத்திற்குச்செல்கின்றோம் என்று கூறுமாறு சுலக்சனால் எமக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது. சிறிதுநேரத்தில் வாகனம் புறப்பட்டது. மற்றைய இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களும் கயஸ்வாகனங்களில் எம்மைத்தொடர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். வாகனம் கொழும்பையும் காலியையும் இணைக்கும் அதிவேகநெடுஞ்சாலையில் பயணித்து காலிக்குச்சென்று வேறு எங்கெல்லாமோ சுற்றித்திரிந்து இரவு11.00மணியையும் கடந்தபின்னர் இரவுச்சாப்பாடு சாப்பிடுவதற்காக சாப்பாட்டுக்கடைகளைத்தேடி எல்லாக்கடைகளும் அடைக்கப்பட்டுவிட நீண்டநேரத்தேடுதலுக்குப்பின்னர் திறந்திருந்த ஒரு சாப்பாட்டுக்கடையைக்கண்டு அதன் முனபாக வாகனத்தை நிறுத்தினோம். சுடச்சுட கொத்துரொட்டிக்கு ஓடர்கொத்து அன்றைய இராப்போசனத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து கதிர்காமத்துக்கு புறப்பட்டுச்சென்றோம். கதிர்காமத்தை அண்மித்ததும் ஓரிடத்தில் எம்மைத்தொடர்ந்துவந்த மற்றைய வாகனங்களும் நின்றிருந்தன. அங்கு பிரதானமுகவரான சுலக்சனும் நின்றார்.
நாங்கள் எல்லோரும் கதிர்காமத்தில் இருவேறு லொட்ச்சுகளில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். அன்றையதினமும் எமது அவுஸ்திரேலியப்பயணம் தடைப்பட்டது. எம்மவர்களில் பலருக்கு சுலக்சன்மீது கோபமேற்பட்டது. ஆனாலும் அதை எவரும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அவரின் ஏற்பாட்டுக்கமைவாக இருவேறு லொட்ச்களில் நாம் தங்கிநின்றோம். மறுநாள்க்காலையில் அதாவது 26-09-2012அன்று நித்திரைஅசதியில் படுத்திருந்த எம்மை பிரதானமுகவரான சுலக்சன் வந்து அவசரஅவசரமாக எழுப்பி நான் உட்பட சுமார் பதின்மூன்றுபேர்வரையில் புறப்படுவதற்கு ஆயத்தமாகுமாறு அவசரப்படுத்தினார். காலைக்கடனும் முடிக்காமல் உடமைபாக்குகளையும் எடுத்துக்கொண்டு கயஸ்வாகனத்தில் ஏறிக்கொண்டோம். எம்முடன் சூட்டிமாத்தயாவும் கூடவந்தார். வாகனம் புறப்பட்டு மாத்தறைவரையும் வந்து சுட்டிமாத்தயா எமது கடற்பயணம் தொடர்பாக வேறுசில காரியங்களையும் முடித்துக்கொண்டு அங்கு குறித்த ஒரு கடற்கரையோரத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டு நேரத்தை கடத்திக்கொண்டிருந்தோம். மதியம்2.00மணியளவில் சாப்பாட்டுக்கடைக்குச்சென்று அனைவரும் மதியஉணவு உட்கொண்டோம். அதன்பின்னர் வாகனத்தில் சிறிய திருத்தவேலை இருப்பதாகக்கூறிய வாகனச்சாரதியான ராகுலன் குறித்த சாப்பாட்டுக்கடையை அண்மித்திருந்த வாகனத்திருத்தகத்திற்கு முன்பாக வாகனத்தை நிறுத்தினார். திருத்தவேலை பலமணிரேம் நீடித்தது. திருத்தவேலைகள் முடியும்வரை நாமும் பொறுமையுடன் காத்திருந்தோம். நன்றாக இருட்டியபின்னரே வாகனத்திருத்தவேலை நிறைவுக்குவந்தது.
அதன்பின்னர் நாம் வாகனத்தில் புறப்பட்டு அன்றைய மதியப்பொழுதில் ஓய்வெடுத்த குறிப்பிட்ட கடற்கரைப்பகுதிக்குச்சென்று எமது சகஅவுஸ்திரேலியப்பயணகாரர்கள் மற்றும் பிரதானமுகவர் சுலக்சன் மற்றைய ஏற்பாட்டாளர்கள் ஆகியோர்களின் வருகைக்காக காத்திருந்தோம். இரவு11.00மணியளவில் மற்றைய அவுஸ்திரேலியப்பயணகாரர்களும் சுலக்சனும் மற்றைய ஏற்பாட்டாளர்களும் நான்கு கயஸ்வாகனங்களில் குறித்த கடற்கரைப்பகுதிக்கு வந்துசேர்ந்தனர். சிறிதுநேரத்தின்பின்னர் சுலக்சன் மற்றும் சூட்டிமாத்தயா ஆகியோர்களின் வழிகாட்டலில் எங்களை ஏற்றிய நான்கு கயஸ்வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக பயணத்தைத்தொடர்ந்தன. சுமார் அரைமணிநேரமாகப்பயணித்த எமது கயஸ்வாகனம் குறித்த ஓரிடத்தில் நின்றது. அது மாத்தறைமாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. வாகனம் நின்றதுதான் தாமதம் எல்லோரும் எமது உடமைபாக்குகளையும் எடுத்துக்கொண்டு எமக்கு முன்னால் ஒருவர் வழிகாட்டிச்செல்ல அவருக்குப்பின்னால் நாங்கள் வேகநடைபோட்டோம். வழியில் தண்ணீர்வாய்க்கால் எதிர்ப்படவே காரிருட்டில் முழங்காலளவு தண்ணீருக்குள்ளால் ஒருவர்கையை ஒருவர்பிடித்துநடந்து வாய்க்காலைக்கடந்து கடற்கரையை சென்றடைந்தோம். பத்து கடல்மைல்தூரத்தில் எமது அவுஸ்திரேலியக்கடற்பயணத்திற்கான ஆறு சிலிண்டர்கொண்ட பெரியபடகு தரித்துநின்றது. எம்மை பெரியபடகிற்கு ஏற்றிச்செல்வதற்கான குல்லாவகைப்படகு இன்னமும் வந்துசேரவில்லை. எனவே கடற்கரையோரத்தில் உள்ள சிறியமரங்களின் மறைவில் அனைவரும் அமைதியாக குல்லாவகைப்படகின் வருகைக்காக காத்திருந்தோம்.
காத்திருந்த சிறிதுநேரமும் எமக்கு பெரியயுகமாக கழிந்துகொண்டிருந்தது. அதாவது குறித்த இந்தக்கடற்பயணம் சட்டரீதியற்றது. பொலிஸ் மற்றும் கடற்படையினருக்குத்தெரியாமலேயே இந்தப்பயண நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியிருந்தது. நாம் படகேறக்காத்திருந்த குறித்த மாத்தறைக்கடற்கரையோரத்திற்கு அண்மையில் கடற்படையினரின் முகாம் ஒன்று அமைந்திருந்ததுவும் குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்டநேரத்தின்பின்னர் எம்முடனிருந்த ஏற்பாட்டாளர் ஒருவரின் கைத்தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. கரையிலிருந்து பத்து கடல்மைல் தொலைவில் எமது அவுஸ்திரேலியப்பயணத்திற்காக காத்துநிற்கின்ற பெரியபடகிற்கு எம்மை ஏற்றிச்செல்வதற்கான குல்லாவகைப்படகு வந்துகொண்டிருப்பதாகவும் எமது அவுஸ்திரேலியப்பயணகாரர்களை இரண்டு தொகுதியாகவே பெரியபடகிற்கு ஏற்றிச்செல்லமுடியுமென்றும் முதலாவது தொகுதியினரை உடமைபாக்குகளையும் கைகளில் எடுத்துக்கொண்டு தயார்நிiயில் இருக்குமாறும் அந்த ஏற்பாட்டாளரால் அறிவுறுத்தப்பட்டது. சிலநிமிடங்கள் கடந்திருக்குமென நினைக்கின்றேன் அதுவரைநிலவிய அமைதியான நிசப்தத்தைக்கலைத்ததுபோல குல்லாப்படகின் இயந்திரத்தின் ஒலி காற்றில் மிதந்துவர கடலின் வெண்ணுரைகளைக்கிழித்தபடி குல்லாப்படகு வந்து கரைதட்டியது. நாங்கள் ஆள்நடமாட்டங்களை இனங்காட்டாதவாறு தலைகளைக்குனிந்தபடி உடமைபாக்குகளையும் தூக்கிக்கொண்டு வேகமாகஓடிச்சென்று படகில் ஏறிக்கொண்டோம். அந்தச்சிறியபடகில் முதலாவது தொகுதியில் நாற்பதுபேர்வரையில் இருந்தோம். அளவுக்கதிகமான ஆட்களை ஏற்றிக்கொண்டதால் மிகவும் நெரிபட்டுக்கொண்டிருந்தோம். ஆட்கள் ஏறிக்கொண்டதும் தாமதிக்காமல் படகு புறப்பட்டது. குல்லாவகைப்படகில் பயணித்துக்கொண்டிருக்கும்போதே எனக்கு வயிற்றைக்குமட்டியதால் படகின் வெளியே எட்டி கடலுக்குள் வாந்தியெடுத்தேன். இன்னும்சிலர் வாந்தியெடுத்தார்கள். கடலில் வந்துகொண்டிருந்தபோதுதான் இன்னுமொரு சிக்கல் எமக்கு தெரியவந்தது. அதாவது பத்துக்கடல்மைல் தொலைவில் எமக்காக காத்துநிற்கின்ற ஆறுசிலிண்டர்கொண்ட பெரியபடகு தரித்துநிற்கின்ற குறித்தஇடம்(பிக்ஸ்) குல்லாப்படகோட்டிகளுக்குத்தெரியாது. அத்துடன் குல்லாப்படகோட்டிகளிடம் ஜிபிஸ் கருவியும் இருக்கவில்லை. எங்களில் ஒருவர் கைத்தொலைபேசி வைத்திருந்ததால் சுலக்சனைத் தொடர்புகொண்டபோதும் தொடர்புகிடைக்கவில்லை. மற்றொரு ஏற்பாட்டாளரான வாழைச்சேனை சூட்டிஐயாவை nhடர்புகொண்டபோதும் தனக்கு சுலக்சனின் தொடர்பு இல்லையென்றும் தனக்கு இதுபற்றி எதுவும் தெரியது என்றும் கூறினார். “இறiவா இது என்ன சோதனை” என்று எல்லோரும் தலையில் கைவைத்துக்கொண்டு ஏதாவது வெளிச்சம் தெரிகிறதா என்று உற்றுநோக்கிக்கொண்டிருந்தோம். படகு ஓடக்கொண்டிருந்தது. அதிஸ்டதேவதை எமதுபக்கமே இருந்தாள். தூரத்தில் வெளிச்சம் ஒன்று தென்படவே எம்மவர்களில் ஒருவர் அந்த வெளிச்சத்தை சுட்டிக்காட்டி அது எமக்கான பெரியபடகின் வெச்சமாகத்தானிருக்கும் ஆதலால் அதைநோக்கி படகை செலுத்துமாறு படகோட்டிக்கு ஆலோசனை கூறினார். படகோட்டியும் குறித்த வெளிச்சத்தைநோக்கி படகைச்செலுத்திக்கொண்டிருந்தார். குல்லாப்படகு குறித்த வெளிச்சத்தை அண்மித்ததும் அதுதான் எமது அவுஸ்திNலியப்பயணத்திற்கான பெரியபடகு என்பதை உறுதிப்படுத்திக்கொண்டோம். சொற்பநேரத்தில் குல்லாப்படகு பெரியபடகு நிற்கும் இடத்தைச்சென்றடைந்தது. முதலில் அனைவரதும் உடமைபாக்குகளையும் தூக்கித்தூக்கி பெரியபடகிற்குள் எறிந்தார்கள். குல்லாப்படகைவிட பெரியபடகின் உயரம் கூடியதாகவிருந்ததலும்; கடலின் உவட்டிற்கு படகு தள்ளாடிக்கொண்டிருந்ததாலும் நாங்கள் பெரியபடகில் ஏறுவதில் சிரமங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து பெரியபடகிலிருந்து குல்லாப்படகிற்கு கயிறு எறிந்து இழுத்துக்கட்டியதால் இரண்டு படகுகளுக்குமிடையில் சிறிய இடைவெளிகளேயிருந்தது. அனுபவமுள்ளவர்கள் கயிற்றின் உதவியுடன் பெரியபடகிற்குத்தாவினார்கள். அவர்கள் பெரியபடகில் ஏறியதும் மற்றவர்களும் பெரியபடகில் ஏறுவதற்கு உதவினார்கள். நான் பெரியபடகில் ஏறுவதற்கு முற்படுகையில் கடலின் உவட்டிற்கு படகுகள் விலகிக்கொண்டதால் ஏறுவதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் பெரியபடகில் நின்றவர்கள் எனது கையைப்பிடித்து என்னையும் பெரியபடகில் ஏற்றினார்கள். அனைவரும் பெரியபடகில் ஏறிக்கொண்டதும் இரண்டாவது தொகுதியினரை ஏற்றிவருவதற்காக குல்லாப்படகு கரையைநோக்கி விரைந்துசென்றது. இரண்டாவது தொகுதியினரும் வந்தபிற்பாடுதான் பயணத்தைத்தொடரலாம். அதுவரை அவர்களுக்காக காத்திருக்கவேண்டியிருந்தது. பெரியபடகின் கீழத்தளத்தில் ஐஸ்கட்டித்துண்டுகள் நிறைந்துகிடந்தன. இரண்டாவது தொகுதியினர் வருவதற்கிடையில் கீழ்த்தளத்தில் நிறைந்திருக்கின்ற ஐஸ்கட்டித்துண்டுகளை கடலில்க்கொட்டி கீழ்த்தளத்தை காலிசெய்யவேண்டியிருந்தது. எனவே எம்மவர்கள் படகிலிருந்த உரப்பைகளில் ஐஸ்கட்டிகளை நிறைத்து கடலில் கொட்டினார்கள். ஏம்மவர்கள் துரிதகதியில் இந்தச்செயலைச்செய்ததன் நிமிர்த்தமாக குல்லாப்படகு இரண்டாவது தொகுதியினரை ஏற்றிக்கொண்டு பெரியபடகு தரித்துநிற்குமிடத்தை வந்துசேரவும் ஐஸ்கட்டிகள் அகற்றப்பட்டு படகின் கீழ்த்தளம் காலியாகியிருந்தது.
இரண்டாவது தொகுதியினரையும் பெரியபடகில் ஏற்றிவிட்டு குல்லாப்படகு கரைக்குத்திரும்பியது. எமது அவுஸ்திரேலியப்பயணத்தில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளடங்கிய சுமார் எழுபதுபேர்வரையில் இந்தப்படகுப்பயணத்தில் அடங்கியிருந்தோம். இதில் படகோட்டிமார் அவர்களின் உதவியாளர்கள் ஆகியோரும் அடக்கம். படகோட்டிமாரும் அவர்களின் உதவியாளர்களும் சிங்களச்சமூகத்தைச்சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2012-ம்ஆண்டு செப்ரெம்பர்மாதம் 27-ம்நாள் அதிகாலை2.00மணியளவில் தென்னிலங்கையின் மாத்தறைக்கடற்பரப்பிலிருந்து அவுஸ்திரேலியாவை நோக்கிய எமது கடற்பயணம் தொடங்கியது. இந்துமாகடலன்னையின்மடியில் வெண்ணுரைகளைக்கிழித்தவாறு அலைகளில் தாவியெழுந்து எமதுபடகு வேகமெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. இலங்கைக்கடல் எல்லையைத்தாண்டும்வரையிலும் இலங்கைக்கடற்படையினரின் அச்சுறுத்தலைக்கவனத்திற்கொண்டு அனைவரும் மிகவும் அவதானமாகவும் விழிப்பாகவும் இருந்தோம். மறுநாள் பொழுதுபுலரும்வேளையில் கடற்படையினர் அவதானித்தாலும் சந்தேகம் கொள்ளாதவகையில் அனைவரையும் படகின்கீழ்த்தளத்தில் இறங்குமாறு பிரதானபடகோட்டி சுதுமாத்தயா பணித்தார். அவரின் கட்டளைக்கு கட்டுப்பட்டு அனைவரும் கீழ்த்தளத்தில் இறங்கினோம். படகோட்டிமாரும் அவர்களின் உதவியாளர்களுமென ஐந்துபேர் படகின் மேல்த்தளத்தில் நின்றார்கள்.
மீன்பிடிக்குப்பயன்படுத்தப்படும் இரண்டு தூண்டில்பெட்டிகளும் படகில் இருந்தன. வெளிப்பார்வைக்கு மீனபிடிப்படகுபோலவே எமது கடற்பயணம் தொடர்ந்துகொண்டிருந்தது. ஆனால் கீழ்த்தளத்தில் இருந்தவர்களின் நிலையோ அதோகதிதான். காற்றோட்டமில்லாமல் வியர்த்துக்கொட்டி அவஸ்தைப்பட்டது ஒருபுறம் வாந்தி எடுத்து எடுத்து சொப்பின்பைகளில் நிறைத்து மேல்த்தளத்தில் நின்றவர்களிடம் கொடுக்க அவர்கள் அதை கடலில் வீசிக்கொண்டிருந்தார்கள். புதியசொப்பின்பைகளை தந்துகொண்டிருந்தார்கள். சொற்பநேரத்திலேயே அவையும் வாந்தி நிறைந்து கடலில் வீசப்பட்டுக்கொண்டிருந்தன. நானும் இன்னும்பலரும் எக்கியெக்கி வாந்தி எடுத்ததால் எனக்கும் என்னைப்போன்று தொடர்ச்சியாக வாந்தியெடுத்தவர்களுக்கும் உடல்நிலை மிகவும் சோர்வடைந்திருந்தது. குளுக்கோஸ்பைக்கற்றுக்கள் கைவசமிருந்ததால் அவ்வவ்போது எமது கைகளில் சிறிதளவு தந்தார்கள். அதை வாயில்ப்போட்டுக்கொண்டோம். குளுக்கோஸ் உட்கொண்டுகொண்டிருந்ததால் உடல்நிலை மோசமாகச்சோர்வடையாது ஓரளவிற்கு தெம்புடன் இருந்தோம். அன்றையபகல்முழுவதும் வாந்தியெடுத்து கீழ்த்தளத்திலேயே கிடந்தோம். அன்றயஇரவுப்பொழுதில் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட அனேகமானோர் படகின் கீழ்த்தளத்தில் காற்றோட்டமானசுவாத்தியம் இல்லாததால் ஏற்பட்ட அவஸ்தைகளை சமாளிக்கமுடியாமல் படகின் மேல்த்தளத்திற்கு வந்துவிட்டார்கள். நானும் மேல்த்தளத்திற்கு வந்துவிட்டேன். இரண்டாம்நாள் பகல்ப்பொழுதில் வானம் இருண்டு மழைபெய்தது. முதல்நாள்முழுவதும் வாந்தியெடுத்து வியர்த்தொழுகியதால் எமது உடலிலும் நாம் அணிந்திருந்த உடைகளிலும் ஒருவிதமான துர்நாற்றம் வீசியது. இதனால் அனைவரும் கடல்த்தண்ணீரில் குளித்து பின்னர் வானத்திலிருந்து பெய்துகொண்டிருந்த மழைத்தண்ணீரில் குளித்து துவாயால் ஈரம்துடைத்து உடைகளைக்களைந்து கொண்டுவந்திருந்த மாற்றுஉடைகளை அணிந்துகொண்டோம். இதனால் சோர்ந்திருந்த எமது உடல்நிலை புத்துணர்ச்சிபெற்றது.
எமது படகை பின்தொடர்ந்து மற்றுமொரு நான்குசிலிண்டர்கொண்ட படகு வந்துகொண்டிருந்தது. அந்தப்படகில் ஒரு தந்தையும் மகளும் உட்பட இருபத்தைந்துபேர்வரையில் இருந்தார்கள். மற்றயவர்கள் அனைவரும் ஆண்கள் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. இந்தப்படகைச்செலுத்திவரும் படகோட்டிகளும் சிங்களச்சமூகத்தைச் சேர்ந்தவர்களாவர். குறித்த இந்தப்படகின் பிரதானபடகோட்டியான விந்துவும் நாம் பயணித்துக்கொண்டிருந்த படகின் பிரதானபடகோட்டியான சுதுமாத்தயாவும் ஏறகனவே அறிமுகமானவர்கள் என்பதால் உயரலைவரிசைத்தொலைத்தொடர்புசாதனத்தில் தொடர்புகளைப்பேணியவாறு வந்துகொண்டிருந்தார்கள். சமையல் எரிவாயுசிலிண்டரின் உதவியுடன் சமையல் இடம்பெற்று மதியபோசனமும் இரவுபோசனமும் கிடைத்தது. அத்துடன் காலையும் மாலையும் தேனீரும் கிடைத்தது. மதியமும் இரவும் சோற்றுடன் ரின்மீன்கறி கருவாட்டுக்னறி சோயாமீற்கறி என்பனவும் கிடைத்தது. ஒருநாள் தூண்டிலில் மீன்பிடிக்கப்பட்டு சுவையானமீன்கறியும் கிடைத்தது. ஆனால் அவற்றை சுவைத்துச்சாப்பிடக்கூடியநிலையில் எம்மில்பலரின் உடல்நிலைகள் ஒத்துழைக்கவில்லை. சாப்பிட்டதும் உடனேயே வயிற்றைக்குமட்டி வாந்தியெடுக்கும்நிலையிலேயே எங்களில் சிலபேரின் உடல்நிலை இருந்தது. வெயில்வெப்பத்திலிருந்து எம்மைப்பாதுகாத்துக்கொள்வதற்காக அணியப்பகுதியில் படகிலிருந்த உயரமானமரக்கட்டையைநட்டு அதிலிருந்து இயந்திரப்பகுதிவரையும் தரப்பாள்களினால் இழுத்துக்கட்டி கூடாரம்போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. படகோட்டிகள் சுழற்சிமுறையில் மாறிமாறி இரவுபகலாக படகைச் செலுத்திக்கொண்டிருந்தார்கள்.
வெண்ணுரைகளைத்தள்ளியவாறு ஆழ்கடல்மீதிலே எமது அவுஸ்திரேலியப்பயணம் தொடர்ந்தது. ஏழுநாட்களாக எமதுகடற்பயணம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஏழாம்நாள் மதியNளையில் எமதுபடகின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு சைலஞ்சர்ப்பகுதி புகைந்து இயந்திரம் நின்றுவிட்டது. பின்னர் எம்மைப்பின்தொடர்ந்துவந்துகொண்டிருந்த படகில் கைவசமிருந்த சைலஞ்சரைமாற்றி இயந்திரத்தையும் நீண்டநேரமுயற்சியின்பின்னர் சீர்செய்துகொண்டு பொழுதுசாயும் வேளையில் மீண்டும் பயணம் தொடர்ந்தது. மறுநாள் அதாவது எட்டாவதுநாள் காலையில் இயந்திரத்தில் மீண்டும் கோளாறு ஏற்பட்டு இயந்திரம் நின்றுவிட்டது. இயந்திரத்தை திருத்தும் முயற்சியில் எமது படகின் படகோட்டிகளான சுதுவும் மற்றயவர்களும் தீவிரமாக ஈடுபட்டார்கள். மேலதிகஉதவிக்கு பின்தொடர்ந்துவந்த நான்குசிலிண்டர்கொண்ட படகின் படகோட்டிகள் சிலரும் எமதுபடகிற்கு வந்து இயந்திரத்திருத்தும்பணியில் ஈடுபட்டார்கள். உயரலைவரிசைத் தொலைத்தொடர்புசாதனத்திற்கூடாக இவர்களுக்குத்தெரிந்த வேறு மீன்பிடிப்படகுகளுடன் தொடர்புகொண்டு மேலதிகமான ஆலோசனைகளைப்பெற்று இயந்திரம் திருத்தும் பணியைத்தொடர்ந்தார்கள். இயந்திரம் திருத்தும் முயற்சி மறுநாள் அதாவது ஒன்பதாம்நாள் மாலைவரையிலும் தொடர்ந்தது. ஆனாலும் முயற்சியின் பலாபலன் பூச்சியமே. இதையடுத்து இயந்திரம் திருத்தும் முயற்சியில் எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து முயற்சி அத்துடன் கைவிடப்பட்டது.
அடுத்தகட்டமாக எமதுபடகின் பிரதாகபடகோட்டி சுதுவும் எம்மைப்பின்தொடர்ந்துவந்த படகின் பிரதானபடகோட்டியான விந்துவும் கதைத்து ஒரு உடன்பாட்டிற்கு வந்தார்கள். அதாவது எமதுபடகிலுள்ள தண்ணீர் உணவுப்பொருட்கள் எரிபொருளான டீசல் உள்ளிட்ட அவசியமான அனைத்துப்பொருட்களையும் விந்துவின் படகிற்கு மாற்றுவதோடு எமது படகிலிருக்கும் எழுபதுNரையும் விந்துவின் படகில்மாற்றிஏற்றிக்கொண்டு எமதுபடகை துவாரமிட்டு கடலில் மூழ்கவிட்டுவிட்டு விந்துவின் நான்குசிலிண்டர்கொண்டபடகில் தொடர்ந்து அவுஸ்திரேலியாவிற்கான பயணத்தை மேற்கொள்வது. இதுதான் அவர்கள் இருவரும் கதைத்த உடன்பாடாகும். இருவரும் கதைத்து உடன்பட்டதையடுத்து உணவுப்பொருட்க் தண்ணீர் மற்றும் டீசல் உள்ளிட்ட அவசியமான பொருட்கள் அனைத்தும் விந்துவின் படகிற்கு துரிதகதியில் மாற்றப்பட்டன. தூண்டில்ப்பெட்டிகள் உள்ளிட்ட அவசியமற்றபொருட்கள் என கருதப்பட்ட பொருட்கள் சிலதும் கடலில் வீசப்பட்டன. அனைத்துப்பொருட்களும் ஏற்றப்பட்டபின்னர் ஆட்களை ஏற்றினார்கள்.
நாங்கள் அனைவரும் விந்துவின் படகில் ஏறிக்கொண்டதையடுத்து இறுதியாக பிரதானபடகோட்டியான சுதுமாத்தயாவும் அவரின் உதவியாளர்களும் விந்துவின் படகில் ஏறிக்கொண்டார்கள். படகில் இடவசதியைக்கருத்திற்கொண்டு பெரியபடகிலிருந்து ஏறிக்கொண்ட அனேகமான ஆண்களை படகின் கீழ்த்தளத்தில் இறக்கிவிட்டார்கள். நானும் கீழ்த்தளத்தில் இறக்கப்பட்டேன். இப்போது படகு புறப்பட்டு அவுஸ்திரேலியாவின் கொக்கோஸ்தீவை இலக்காகக்கொண்டு இந்துசமுத்திரத்தை உழுதவாறு படகு ஓடிக்கொண்டிருந்தது. படகின்கீழ்த்தளத்தில் இருந்தநாம் அனுபவித்த அவஸ்தைகள் சொல்லிமாளாது. காற்றோட்டமில்லாது ஆடகளுடன்நெரிபட்டு வயிற்றைக்குமட்டி வாந்தியெடுத்து அந்தக்கீழ்த்தளத்தில் குறிப்பிட்டநேரத்திற்குள் நான்பட்ட அவஸ்தையை இதில் வார்த்தைகளால் விபரித்துவிடமுடியாது. நான் வாந்தியெடுத்து அவஸ்தைப்பட்டதை அவதானித்து என்னில் கருணைகாட்டி என்னை படகின் மேல்த்தளத்தில் ஏற்றிவிட்டார்கள். நான் மேல்த்தளத்தில் ஏறியதைத்தொடர்ந்து இன்னும்சிலர் படகின் மேல்த்தளத்தில் ஏறினார்கள். மேல்த்தளத்தில் குளிர்ந்த உப்புக்காற்று உடலைத்தழுவ ஒருவிதமான உற்சாகம்பிறந்தது. மேல்த்தளத்தில் ஆண்கள் பென்கள் குழந்தைகள் என எல்லோரும் இருந்தார்கள். ஆதலால் இந்தப்படகிலும் மேலே தரப்பாள்களை இழுத்துக்கட்டி கூடாரம்போல் வடிவமைத்திருந்தார்கள். இருப்பதற்கே போதுமான இடவசதி இல்லாமலிருக்க எவ்வாறு நீட்டிநிமிர்ந்து படுக்கமுடீயம். அவ்வாறுபடுப்பதென்றால் கால்கள் இரண்டையும் ஒடுக்கிக்கொண்டு குறாவிக்கொண்டுதான் படுக்கவேண்டும். அவ்வாறுபடுத்தாலும் நீண்டநேரம் படுத்திருக்கமுடியாது.
அதாவது இந்தப்படகின் உயரம் மிகக்குறைவாகவேயிருந்தது. ஆதலால் படகு வேகமாகச்சென்றுகொண்டிருக்கும்போது படகு ஆழ்கடலில் உருவாகும் பாரியஅலைகளில் தாவியெழுகின்றபோது கடல்த்தண்ணீர் படகிற்குள் மூடிவார்த்து நாங்களும் கடல்த்தண்ணீரால் குளித்துவிடுவோம். எமது உடைகளும் ஈரமாகிவிடும். அத்துடன் படகின்விழிம்புப்பகுதியில் சிலசிறிய துவாரங்கள் காணப்பட்டன. இந்தத்துவாரங்களாலும் சிலசமயங்களில் கடல்த்தண்ணீர் படகில் உட்புகுந்தது. இந்தநிலையில் எவ்வாறு கண்ணயர்ந்து ஆசுவாசமாகத்தூங்கமுடியும். பதினேழுநாடகள் கடற்பயணத்தில் நிம்மதியான தூக்கத்தை அனைவருமே தொலைத்திருந்தோம். சாபபாட்டைப்பொறுத்தமட்டில்; ஒருநாளைக்கு ஒருவேளையும் சிலசமயங்களில் இரண்டுவேளையுமென நிறைவாகக்கிடைத்தது. எமது பயணத்தின் இறுதிமூன்றுநாட்களும் சமையலுக்காக சேமித்துவைத்திருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டதால் உணவுசமைக்கமுடியாமல் பட்டிணிகிடந்ததைத்தவிர மற்றும்படி சாப்பாடு தேனீர் விடயங்களில் எந்தவிதமானகுறையும் கூறமுடியாது. இரண்டுநாடகளுக்கு ஒருதடவை இயந்திரத்தின் வெப்பத்தை தணிப்பதற்காக அரைமணித்தியாலம் மாத்திரம் படகு நிறுத்தப்படும். மற்றயநேரங்களிலெல்லாம் பகல் இரவாக சுழற்சிமுறையில் படகோட்டிகள் படகைச்செலுத்த படகும் எம்மையெல்லாம் சுமந்தவாறு இந்துமாகடலை உழுதவாறு பயணத்தைத்தொடர்ந்துகொண்டிருந்தது. பயணத்தின்போது இந்தோநேசியாக்கடற்பரப்பில் எம்மைப்போன்ற தமிழ் அகதிகளை ஏற்றிக்கொண்டு அவுஸ்திரேலியாவைநோக்கிப்பயணித்த படகு ஒன்று இயந்திரக்கோளாறு ஏற்பட்டு சிலநாட்களாக குறித்தகடற்பரப்பில் அந்தரித்துக்கொண்டிருப்பதாகவும் அவர்கள் கைவசம் கொண்டுவந்திருந்த உணவுப்பொருட்களும் தண்ணீரும் முடிந்துவிட்டதாகவும் எனவே செல்லும் வழியில் அந்தப்படகையும் சந்தித்துவிட்டுத்தான் செல்லவேண்டும் என்று படகோட்டிமார் கூறினார்கள். ஆகவே குறித்த அந்தப்படகையும் நாம் சந்தித்து எம்மாலான உதவிகளையும் அவர்களுக்குச்செய்யவேண்டுமென்ற ஆதங்கத்துடன் எமது படகு அலைகளில் தாவியெழுந்து விரைந்துகொண்டிருந்தது. இவ்வாறு பயணித்த நாம் சிலநாட்கள்கழிந்து இந்தோநேசியாக்கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்தோம்.
இந்தோநேசியாக்கடற்பரப்பில் ஒரு மாலைப்பொழுதில் முதலில் நாம் எதேச்சையாகச்சந்தித்தது இந்தோநேசியாநாட்டைச்சேர்ந்த மீனவர்களின் ஒரு மீன்பிடிப்படகு ஆகும். அந்த மீனவர்கள் எமது படகோட்டிகளிடம் மீன் கருவாடு மற்றும் சிகரட் என்பவற்றைக்கொடுத்து தமது மனிதாபிமானநட்புறவை வெளிப்படுத்தினார்கள். அவர்களிடமிருந்தும் விடைபெற்றுக்கொண்டு எமது கடற்பயணம் தொடர்ந்தது. அதிலிருந்து இரண்டுநாட்கள் கழிந்தநிலையில் நாம் சந்திக்கவேண்டிய இயந்திரக்கோளாறு ஏற்பட்டு அந்தரித்துக்கொண்டிருந்த குறித்தபடகை சந்தித்தோம். முதலில் எமது படகில் எம்முடன்கூடவந்துகொண்டிருந்தவரும் டீசல்இயந்திரப் பொறியியலாளருமான வள்ளுவன் அந்தப்படகில் ஏறிக்கொண்டு அந்தப்படகின் இயந்திரத்தை திருத்தும் முயற்சியில் ஈடுபட்டார். அவரது முயற்சி ஓரளவிற்கு வெற்றியைத்தந்தது. அந்தப்படகின் இயந்திரம் குறைந்தவேகத்தில் ஓடத்தொடங்கியது. அதைத்தொடர்ந்து எமது படகிலிருந்து பத்துப்பேர்வரையில் மற்றைய படகிற்கு மாற்றிஏற்றினார்கள். தொடர்ந்து எமதுபடகு முன்னே சென்றுகொண்டிருக்க மற்றயபடகும் குறிப்பிட்டதூரஇடைவெளியில் வந்துகொண்டிருந்தது. ஆனாலும் மறுநாட்காலையில் திருத்தப்பட்ட மற்றயபடகின் இயந்திரம் மீண்டும்கோளாறு ஏற்பட்டு மீண்டும் படகு நின்றுவிட்டது. இனி அந்த இயந்திரத்தை திருத்தமுடியாது என்ற முடிவிற்கு வந்துவிட்டார்கள். தொடர்ந்து முதல்நாள் எமதுபடகிலிருந்து அந்தப்படகிற்கு மாறிஏறிக்கொண்ட பத்துப்பேரையும் மேலும் அந்தப்படகிலிருந்த பெண்களையும் அவர்களின் கணவர்மாரையும் எமதுபடகில ஏற்றுவதெனமுடிவாயிற்று.
அந்தப்படகில் வந்த குடும்பங்கள் புதுத்தம்பதிகளென்றபடியால் குழந்தைகள் இல்லை. இவர்களை ஏற்றுவதற்கு கடலின் நீரோட்டம் ஓரளவிற்கு கூடுதலாகவிருந்ததால் இரண்டுபடகுகளையும் ஒன்றுடனொன்று அணைக்கமுடியாததாயிற்று. எனவே இரண்டுபடகுகளும் சுமார்25மீற்றர்தூர இடைவெளியிருக்க இரண்டுபடகுகளும் கயிற்றால் இணைத்துக்கட்டப்பட்டது. நீந்தக்கூடியவர்கள் கடலில்குதித்து நீந்திவந்து எமதுபடகில் ஏறிக்கொண்டார்கள். பெண்களையும் மற்றயவர்களையும் கடலில் குதிக்கச்சொல்லிவிட்டு கடலில் பலன்சில் நின்ற படகோட்டிகளான சிங்களச்சகோதரர்கள் அவர்களைப்பக்குவமாகவும் பாதுகாப்பாகவும்பிடித்து நீந்திக்கொண்டுவந்து எமதுபடகில் ஏற்றினார்கள். முதலில் கடலில்குதிக்கச்சொன்னபோது பெண்கள் பயத்தில் அழுதார்கள். இந்தநிலையில் படகோட்டிகள் “நீங்கள் கடலில்குதியுங்கள். உங்களை ஒருபோதும் கடலில்மூழ்கவிடமாட்டோம்.”என்றுகூறி உற்சாகத்தையும் மனத்தைரியத்தையும் கொடுத்தார்கள். பெண்கள் அழுதுகொண்டே கடலில்குதித்தார்கள். அவர்களுக்கு எந்தவிதமான ஆபத்துக்களும் நேராதவாறு படகோட்டிகள் எமதுபடகில் ஏற்றிவிட்டார்கள். இப்போது எமதுபடகில் மொத்தமாக 114பேர் இருந்தார்கள். மேற்கொண்டு எமதுபடகில் ஆட்களை ஏற்றமுடியாது. அவ்வாறு ஏற்றும்பட்சத்தில் எமதுபடகு கடலில்மூழ்கும் அபாயநிலையிருந்தது. எனவேதான் எங்களால் இயன்ற உதவிகளை அவர்களுக்குச்செய்துவிட்டு நாம் தொடர்ந்து பயணத்தை மேற்கொள்வதென முடிவானது. இரண்டுபடகிலும் இணைத்திருந்த கயிற்றை இழுத்து இரண்டுபடகுகளினதும் இடைவெளியை மேலும் குறுகியதாக்கிவிட்டு எமது கைவசமிருந்த உணவுப்பொருட்களில் ஒருதொகுதியையும் குடிதண்ணீர்ப்போத்தல்களில் ஒருதொகுதியையும் அவர்களின் படகிற்குள் தூக்கிவீசப்பட்டன. உயரலைவரிசைத்தொலைத்தொடர்புசாதனத்தை இயக்குவதற்காக எமது கைவசமிருந்த மின்கலங்கள் இரண்டும் அவர்களின் படகிற்கு கொடுக்கப்பட்டது.
“நீங்கள் உயரலைவரிசை தொலைத்தொடர்புசாதனத்தினூடாக சிறிலங்காவிலுள்ள உங்களின் பயணஏற்பாட்டாளருடன் தொடர்புகொண்டு நிலைமையை அறிவியுங்கள். அவர்கள் ஐஓஎம் நிறுவனத்தைத்தொடர்புகொண்டு ஏதாவது மாற்றுவழி மேற்கொள்வார்கள். நாங்களும் கொக்கோஸ்தீவின் கரையை அடைந்ததும் அவுஸ்திரேலியக்கடற்படையினரிடம் உங்களின் நிலைமையைக்கூறுகின்றோம்.”என்று அவர்களிடம் கூறிவிட்டு அவர்களுக்கு எம்மால் இயன்ற உதவிகளைச்செய்த திருப்தியுடன் அவர்களிடமிருந்து விடைபெற்றுக்கொண்டு எங்களின் கடற்பயணத்தைத்தொடர்ந்தோம். ஆனாலும் எங்களின் படகு கொக்கோஸ்தீவை சென்றடைவதற்கு சிலமணித்தியாலங்கள் முன்னரே அந்தப்படகு கொக்கோஸ்தீவை சென்றடைந்துவிட்டது வேறுகதை. அது எவ்வாறென இந்தத்தொடரின்முடிவில் குறிப்பிடுகின்றேன். நாங்கள் அவுஸ்திரேலியக்கடல்எல்லையை அண்மிக்கவும் கடலின் நீரோட்டம் அதிகமாகத்தானிருந்தது. சமையலுக்கும் குடிப்பதற்குமென சேமித்துவைத்திருந்த தண்ணீர் தீர்ந்துகொண்டுபோகும்தறுவாயிலிருந்தது.
இந்தநிலையில் அவுஸ்திரேலியக்கடற்படைப்படகுவந்து எம்மை மீட்டுச்செல்லாதா என்றஏக்கம் எல்லோர்மனதையும் ஆட்கொண்டது. அவுஸ்திரேலியக்கடற்படைப்படகுகள் எங்காவது கண்களில் தென்படுகின்றதா என்று ஒருசாரரும் கரை தென்படுகின்றதா என்று இன்னொருசாரரும் வழிமேல்விழிவைத்துப்பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஆனாலும் ஒன்றுமேதென்படவில்லை. இப்போது படகோட்டிமாரும் இயந்திரத்திற்குக்கூட ஓய்வுகொடுக்காமல் படகை செலுத்திக்கொண்டேயிருந்தார்கள். இந்தநிலையில் குடிதண்ணீர் முற்காக தீர்ந்துபோக சமையலும் தடைப்பட்டது. எல்லோருக்கும் பசியும் தண்ணீர்த்தாகமும் வெகுவாகவாட்டியது. வெயில்வெப்பத்திற்காக படகின்மேலேகட்டப்பட்டிருந்த தரப்பாள்களினால் வீசும்காற்றை எதிர்த்து படகைச்செலுத்துவது சிரமமாகவிருந்தது. தண்ணீர் முடிந்துவிட்டதால் குழந்தைகள் பசியால் வாடியது படகோட்டிகளான சிங்களச்சகோதரர்களின் மனதையும் பாதித்திருக்கவேண்டும். எனவே படகோட்டிமாரும் எப்படியாவது துரிதமாக கரையைச் சென்றடைந்துவிடவேண்டும் என்றநோக்குடன் மேலே கட்டப்பட்டிருந்த தரப்பாள்களையும் அகற்றிவிட்டு இயன்றவரை படகை லாவகமாகவும் வேகமாகவும் செலுத்திக்கொண்டிருந்தனர். தரப்பாள்கள் அகற்றப்பட்டதையடுத்து கடலின்நீரோட்டமும் அதிகமாகவிருந்ததால் கடல்அலைகளில் படகு தாவித்தாவி பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தது. இந்நேரங்களில் கடல்த்தண்ணீர் படகைமூடிவார்த்துக்கொண்டிருந்தது. மேல்த்தளத்திலிருந்த நாங்களும் கடல்த்தண்ணீரால் குளித்துக்கொண்டிருந்தோம்.
இதனை அவதானித்த படகோட்டிமார் மாற்றுஏற்பாடாக பெண்களையும் குழந்தைகளையும் இயந்திரஅறைக்குள்விட்டார்கள். ஆண்களில் சிலர்மட்டும் மேல்த்தளத்தில்நிற்க மற்றையஅனைவரையும் படகின் கீழ்த்தளத்தில் இறக்கிவிட்டார்கள். கீழ்த்தளத்தில் இடநெருக்கடியால் நெரிபட்டுக்கொண்டும் குறாவிக்கொண்டும் படுத்திருந்தோம். இவ்வாறாக படகின் தகுதிக்கும்மிஞ்சியதொகையான ஆட்களையும் சுமந்துகொண்டு இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டவாறு எமதுபடகு கடல்த்தாயின்மடியில் பயணித்துக்கொண்டிருந்தது.
எமது அவுஸ்திரேலியாநோக்கிய கடற்பயணத்தின் பதினேழாவதுநாள் அதாவது 2012-ம்ஆண்டு ஒக்டோபர்மாதம் 13-ம்நாளன்று மதியத்திற்குப்பிற்பாடு படகோட்டிமாருக்கும் படகின்மேல்த்தளத்தில் நின்றவர்களுக்கும் கொக்கோஸ்தீவின் கரை தென்பட்டது. ஜிபிஎஸ்சின் உதவியுடன் கொக்கோஸ்தீவின் குறித்தபிக்சைநோக்கி படகு சென்றுகொண்டிருந்தது. கரைக்கு இன்னமும் ஐந்துகிலோமீற்றர்தூரம்மாத்திரம் இருக்கும்நிலையில் அவுஸ்திரேலியக்கடற்படைப்படகு ஒன்று எமதுபடகைநோக்கிவந்து எம்மை இலங்கை அகதிகள்படகு என அடையாளம்கண்டுகொண்டார்கள். நாங்கள் இரண்டுநாட்களாக குடிதண்ணீர் இல்லாமல் தவித்துக்கொண்டிருப்பதை அவர்களுக்குத்தெரிவித்தோம். உடனே தமது படகில் களஞ்சியப்படுத்திவைக்கப்பட்டிருந்த தண்ணீர்ப்போத்தல்களை எடுத்து எங்கள் எல்லோருக்கும் தந்தார்கள். இரண்டு கடற்படையினர் எமதுபடகில் ஏறிக்கொண்டு எமதுபடகை கரைக்கு மிகவும் அண்மித்ததாகக்கொண்டுசென்று நிறுத்தினர். சிறிதுநேரத்தின்பின்னர் அவுஸ்திரேலியக்கப்பல் ஒன்றுவந்து எமதுபடகை அணைத்துக்கொண்டது. நாம்வந்த படகை அவுஸ்திரேலியக்கரையோரக்கண்காணிப்புப்படையினர் கையகப்படுத்திக்கொண்டு எம்மை மூன்றுதொகுதிகளாக அந்தக்கப்பலில் ஏற்றி கொக்கோஸ்தீவின் கரைக்குகொண்டுசென்றனர். கரையில் எங்களை ஆள்அடையாளப்படுத்துவதற்காக தொடர்இலக்கங்கள் எழுதப்பட்ட பட்டிகள் எங்கள் ஒவ்வொருவரினது கைகளிலும் கட்டப்பட்டன. அதைத்தொடர்ந்து ஒவ்வொருவருக்கும் மீண்டும் தண்ணீர்ப்போத்தல்கள் தரப்பட்டு ஒருசிறியபேருந்தில் ஏற்றி ஐந்துநிமிடபயணத்தின்பின்னர் ஒரு வளாகத்தில் இறக்கிவிட்டார்கள். அங்கும் எங்களைப்போன்று இலங்கையிலிருந்து அகதிகளாகவந்த பலபேர் நின்றிருந்தார்கள். அப்போதுதான் இந்தோநேசியக்கடற்பரப்பில் நாங்கள் சந்தித்து உதவிபுரிந்துவிட்டுவந்த படகில் வந்தவர்களும் அங்குநிற்பதைக்கண்டோம். அவர்களுடன் கதை;தபோதுதான் தாங்கள் உயரலைவரிசைத்தொலைத்தொடர்புசாதனத்தின் ஊடாக இலங்கையில் தங்களது பயணஏற்பாட்டாளருடன் தொடர்புகொண்டு தங்களின் நிலைமையைக்கூறியதையடுத்து அவர் ஐஓஎம நிறுவனத்துடன் தொடர்புகொண்டு ஐஓஎம்நிறுவனம் கொழும்பிலுள்ள அவுஸ்திரேலியத்தூதரகத்துடன் தொடர்புகொண்டு குறித்த தூதரகம் அவுஸ்திரேலியஅரசாங்கத்திற்கு அறிவித்து அவுஸ்திரேலியஅரசாங்கம் விமானம்மூலமாக தாங்கள் குறித்த கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருப்பதை உறுதிசெய்து பின்னர் அவுஸ்திரேலியக்கடற்படையினர்வந்து தம்மை மீட்டுவந்ததாகக் கூறினார்கள். அங்கும் போதிய இடவசதிகளின்மையால் தரப்பாள்கூடாரங்கள் அமைத்து எங்களை தங்கவிட்டார்கள். மூன்றுநேரஉணவு மற்றும் புதியஉடைகளும் தந்து சிறந்தமுறையில் கவனித்தார்கள். இவ்வாறு இரண்டுநாள்ப்பொழுதுகள் கொக்கோஸ்தீவிலேயே கழிந்தது.
2012-ம்ஆண்டு ஒக்டோபர்மாதம் 15-ம்நாளன்று மதியஉணவின்பின்னர் எமதுபடகில் வந்தவர்களை இரண்டு தொகுதியினராகப்பிரித்தார்கள். ஒருதொகுதியினரை கிறிஸ்மஸ்தீவிற்கும் மற்றயதொகுதியினரை டார்வின்மாநிலத்திற்கும் அனுப்பிவைப்பதாக கூறினார்கள். கிறிஸ்மஸ்தீவிற்கு அனுப்பிவைக்கப்படும் தொகுதியிலேயே பெண்கள் குழந்தைகள் சிறுவர்கள் உள்ளிட்ட குடும்பத்தவர்களும் உள்ளடக்கம். டார்வின்மாநிலத்திற்கு அனுப்பிவைக்கப்படும் தொகுதியிலேயே நான் உள்ளடக்கப்பட்டிருந்தேன். அன்றையதினம் மாலை3.00மணியளவில் எம்மை பேருந்தில் அழைத்துச்சென்று நாம் தங்கிநின்ற வளாகத்திற்கு அண்மையில் அமைந்திருந்த விமானஓடுபாதையில் தயார்நிலையில் தரித்துநின்ற விமானத்தில் ஏற்றப்பட்டோம். சிறிதுநேரத்தில் எம்மை ஏற்றிய விமானம் மேலெழுந்து வான்வெளியில் பறக்கத்தொடங்கியது. சுமார் நான்கு மணித்தியாலத்திற்கும் அதிகமாகப்பறந்த விமானம் இரவு8.00மணியளவில் டார்வின்மாநிலத்தில் அமையப்பெற்றிருந்த விமானத்தளத்தில் தரையிறங்கியது. அங்கு எமது பதிவுகளை முடித்துக்கொண்டு இரண்டு பேருந்துகளில் அனைவரும் ஏற்றப்பட்டோம். நாம் அனைவரும் ஏறிக்கொண்டதும் பேருந்துகள் புறப்பட்டன. அந்தப்பேருந்துப்பயணமும் குறுகியநேரப்பயணமாகத்தான் அமைந்தது.
குறிப்பிட்டநேரப்பயணத்தின்பின்னர் பேருந்துகள் இரண்டும் குறித்த ஓரிடத்தில் தரித்துநின்றன. நாம் அனைவரும் பேருந்திலிருந்து இறக்கப்பட்டோம். அதுதான் வேற்றுநாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வருவோரை தங்கவைக்கின்ற முகாம் என்பதை அறிந்துகொண்டோம். நுழைவாயிலில் அமைந்திருந்த அலுவலகத்தில் கடமையிலிருந்த சேர்க்கோநிறுவனத்தின் அதிகாரிகள் எம்மைப்பதிவுசெய்துவிட்டு புதியஉடுப்புப்பொதிகளும் ஒவ்வொருவருக்கும் தந்து முகாமில் ஒவ்வொரு அறைகளிலும் இரண்டுபேர்வீதம் தங்கவைக்கப்பட்டோம். குளிரூட்டிவசதிகொண்ட அந்தஅறையில் இரண்டு படுக்கைக்கட்டில்கள் மற்றும் படுக்கைவிரிப்புக்கள் போர்வைகள் துவாய் சவர்க்காரம் பற்தூரிகை முதலான அத்தியாவசியப்பொருட்கள் அனைத்தும் எமக்காக புதிதாக வைக்கப்பட்டிருந்தன. சுவையானஉணவுகளும் மூன்றுவேளையும் சேர்க்கோஅதிகாரிகளால் எமக்கு வழங்கப்பட்டன. ஆழ்கடல்கடந்து அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாகவந்தநாம் அவுஸ்திரேலியஅரசாங்கத்தின் கனிவானகவனிப்பும் அனுதாபமான அரவணைப்பும் எம்மை புதியதோர் வாழ்க்கைக்கு இட்டுச்சென்றது.
முற்றும்.
~கொற்றவன்~