அன்றையதினமான 29-08-2012புதன்கிழமை பகல்முழுவதும் என்னை தங்கவிட்டிருந்த குறித்த வாழைச்சேனை முஸ்லீம்லொட்சில் தங்கியிருந்தபோது நான் பெரிதும் மனஉழைச்சலுக்கு உள்ளாகியிருந்தேன். கடலில் தரித்துநிற்கும் படகு அன்றையஇரவுப்பொழுது அவுஸ்திரேலியாவுக்குப்புறப்படுமா அவ்வாறு புறப்படும்பட்சத்தில் நான் லொட்சில் தனித்துநிற்கின்றபடியால் பிரதானமுகவரான சுலக்சன் என்னை காய்வெட்டிவிட்டு படகை அனுப்பிவிடுவாரா என்ற பல்வேறு சந்தேகங்கள் என்னுள் எழுந்தன.
இதனால் சுலக்சனுடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புகொண்டபோது “இரவு படகு புறப்படுமானால் உங்களையும் கண்டிப்பாக அவர்களுடன் இணைத்துவிடுவேன்” என்று சுலக்சன் வாக்குறுதி தந்திருந்தார். அன்றையதினம் இரவு9.00மணியிருக்கும் எனது தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. அதுவேறுயாருமல்ல சுலக்சன்தான் எடுத்தார். “உடமைபாக்கை எடுத்துக்கொண்டு லொடசின் வெளிவாசலுக்கு வாங்கோ” என்று கூறினார். அவுஸ்திரேலியப்பயணத்திற்கு மீண்டும் படகேறுவதற்காகத்தான் என்னை கூட்டிச்செல்லவருகின்றார் என்ற நப்பாசையில் ஒருமுறை எனது உள்ளம் பூரித்தது. ஆனால் வெளிவாசலுக்குவந்த எனக்கு சுலக்சன் கூறிய செய்தி எனது தலையில் இடிவிழுந்ததுபோல பேரதிர்ச்சியைத்தந்தது.
அதாவது “கடலில் தரித்துநின்ற படகை படகோட்டி சமிந்த உட்பட பதினொருபேருடன் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பிவிட்டேன். உங்களை அடுத்தபடகு புறப்படுகின்றபோது அதில் இணைத்துவிடுகின்றேன்.” இதுதான் அந்தச்செய்தி. இத்தனைக்கும் சுலக்சனுக்கு மூன்று இலட்சம்ரூபா பணம் முற்பணமாக கொடுத்தாயிற்று. குறித்த மூன்று லட்சம்ரூபாபணம் ஒழுங்குசெய்வதற்குப்பட்ட கஸ்ரம் எனக்குத்தான் தெரியும். அந்தக்கஸ்ரம் பிரதானமுகவர் சுலக்சனுக்கோ அன்றி இதுசார்ந்த முகவர்களுக்கோ தெரியாதுதானே. நம்பிக்கைத்துரோகம் செய்துவிட்டானே என என்மனதிற்குள் சுலக்சனை திட்டித்தீர்த்தேன். சுலக்சனுடன் வாக்குவாதப்பட்டேன். ஆனாலும் நான் தனியொருவனாக நின்றதினால் எனது கருத்துக்கள் அவ்விடத்தில் பெரிதாக எடுபடவில்லை. போன பஸ்ஸிற்கு கைகாட்டியும் பயனில்லைத்தானே. அப்போது கடல்வழியாக அவுஸ்திரேலியாவுக்குச்செல்வதற்கு பலவழிகள் இருந்தும் மூன்றுலட்சம்ரூபா பணம் சுலக்சனுக்கு முற்பணமாகக்கொடுத்ததினால் மீண்டும் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு சுலக்சனின் உதவியை நாடவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு ஏற்பட்டது. ஏனெனில் அவுஸ்திரேலியப்பயணத்திற்கு நான் வேறுமுகவர்களின் உதவியை நாடும்பட்சத்தில் சுலக்சன் என்னிடம் வாங்கிய மூன்றுலட்சம்ரூபா பணத்தை மீளத்தந்திருப்பார் என்பது கனவிலும் நடந்திருக்காத விடயமே.
மட்டக்களப்பு-வாழைச்சேனையில் அமையப்பெற்றிருந்த குறித்த முஸ்லீம்லொட்சிலிருந்து சுலக்சன் என்னை கயஸ்வாகனத்தில் கூட்டிச்சென்று ஏ-9வீதியில் இயக்கச்சிசந்தியையும்தாண்டி புதுக்காட்டுச்சந்தியில் இறக்கிவிட்டார். பின்னர் எனது முயற்சியால் ஒருவாறு வீடுபோய்ச்சேர்ந்தேன். தொடர்ந்து ஐந்துநாட்களாக சுலக்சனுக்கு கொடுத்த அழுத்தங்களையடுத்து மறுநாள் அதாவது04-09-2014அன்று காலையில் சுலக்சனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அன்றையதினமே புறப்பட்டு வவுனியாவுக்குவந்து லொட்சில் தங்கிநின்றுகொண்டு தன்னைத்தொடர்புகொள்ளுமாறு கூறினார். நானும் அன்றையதினமே வவுனியாவுக்கு புறப்பட்டுவந்து மதியம்1.00மணியளவில் ஈஸ்வரன்லொட்சில் தங்கிநின்றுகொண்டு பிரதானமுகவரான சுலக்சனை தொலைபேசியில் தொடர்புகொண்டு நான் ஈஸ்வரன்லொட்சில் வந்துநிற்கின்ற விடயத்தை தெரியப்படுத்தினேன். அதற்கு சுலக்சன் அன்றய இரவுதான் என்னை பொறுப்பேற்கமுடியும் என்று கூறினார். அன்றையஇரவுப்பொழுதாகியதும் சுலக்சனிடத்திலிருந்து தொலைபேசிஅழைப்புவந்தது. குறித்த ஒரு தொலைபேசி இலக்கத்தை குறிப்பிட்டு அந்த இலக்கத்திலிருந்து அழைப்பு வரும் அவர் உங்களை கூட்டிச்செல்வார் என்று சுலக்சன் கூறினார். சுமார் பத்துநிமிடங்கள் கழித்து சுலக்சன் கூறிய இலக்கத்திலிருந்து எனது தொலைபேசிக்கு அழைப்புவந்தது. தொலைபேசியில் என்னுடன் தொடபுர்கொண்டநபரான றமேசின் பணிப்பிற்கமைவாக வவுனியா நகர்ப்பகுதியில் அமைந்திருந்த இலங்கை போக்குவரத்துச்சபையின் பேரூந்துதரிப்பிடத்திற்கு வந்து றமேசைசந்திந்து அவருடன் இணைந்துகொண்டேன். றமேஸ் தயா அனரனி ஆகியோருடன் நானும்சேர்ந்துகொண்டு ஆட்டோவில் பயணித்து வவுனியாவில் றமேசின் ஏற்பாட்டில் அவருக்கு அறிமுகமான ஒரு குடும்பத்தினரின் வீட்டில் தங்கினோம். ஏம்மை அந்த குடும்பத்தினர் நன்றாக கவனித்தார்கள். சாப்பாடு படுக்கைவசதிகள் எல்லாமே அந்தமாதிரித்தான். மறுநாள் மதியஉணவை முடித்துக்கொண்டு கயஸ்வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி நான் றமேஸ் தயா அன்ரனியுடன் கஜனும் குமரனும் இணைந்துகொண்டு பிரதானமுகவர் சுலக்சனின் பணிப்பிற்கமைவாக மட்டக்களப்பை நோக்கி எமது பயணத்தைத்தொடர்ந்தோம்.
வழியில் இரண்டுதடவைகள் சிறிதுநேரம் ஓய்வெடுத்துக்கொண்டு இரவு8.00மணியளவில் மட்டக்களப்பில் சுலக்சன் குறிப்பிட்ட சந்தியை சென்றடைந்தோம். சுமார் அரைமணிநேரம்கழித்து சுலக்சன் வந்ததும் நாம் வாடகைக்கு அமர்த்திவந்த வாகனத்தை அனுப்பிவிட்டு சுலக்சன் தான்வந்த கயஸ்வாகனத்தில் எங்களையும் ஏற்றிக்கொண்டு தம்புள்ள எனுமிடத்திலுள்ள தனியார்விடுதி ஒன்றிற்கு கூட்டிச்சென்று தங்கவைத்தார். மறுநாள் சுலக்சன் தனது வேலையாக வெளியில் சென்றுவிட சுலக்சனின் ஏற்பாட்டில் கொழும்புஅன்ரி ஒருவர் அந்த விடுதியில் தங்கிநின்ற எம்மைப்போன்ற அவுஸ்திரேலியப்பயணகாரர்களுக்கு பொறுப்பாகச்செயற்பட்டார். இரண்டுநாட்கள் கழித்து அன்ரியின் ஏற்பாட்டில் அனைவரும் கொழும்புக்கு பயணமானோம். கொழும்பில் மருதானைப்பகுதியில் அமைந்திருந்த தனியார்லொடச் ஒன்றில் தங்கினோம். அங்கு தங்கிநின்றநாட்களில் சுலக்சன் கொழும்புஅன்ரிக்கு ஊடாக குறித்த தனியார்லொட்சில் தங்கிநின்ற பதினைந்துபேருக்கும் மூன்றுநேரச்சாப்பாட்டிற்கும் பொதுவாக காசு தந்துகொண்டிருந்தார். சாப்பாட்டால் எந்தவிதமான குறையுமில்லை. லொடசில் மற்றயவர்கள் தங்குவதைப்போலவே நாமும் தங்கினோம். அந்த லொட்சில் வேறு அவுஸ்திரேலியப்பயணமுகவர்களின் ஆட்களும் தங்கிநின்றார்கள். எமது பிரதானமுகவர் சுலக்சன் எம்மை அடிக்கடிவந்து சந்தித்துவிட்டுச்சென்றார்.
இவ்வாறு ஒருவாரம் கழிந்தநிலையில் 2012-ம்ஆண்டு செப்ரெம்பர்மாதம் இரண்டாம்வாரமெனநினைக்கின்றேன். எமக்கான அவுஸ்திரேலிக்கடற்பயண ஏற்பாடுகள் மட்டக்களப்பு-வாழைச்சேனையில் சுலக்சன் மற்றும் சூட்டிஐயா ஆகியோரால் ஏற்பாடுசெய்யப்பட்டன. அன்றயதினம் காலை10.00மணியளவில் கயஸ்வாகனத்தில் கொழும்பிலிருந்து மட்டக்களப்புநோக்கிய எமது பயணத்தைத்தொடர்ந்தோம். எமக்குப்பொறுப்பாக பிரதானமுகவர் சுலக்சன் வந்தார். நீர்கொழும்பில் ஏற்பாட்டாளர்களில் மற்றொருவரான சூட்டிமாத்தையாவும் எம்முடன் இணைந்துகொண்டார். முழுமையாக இருட்டியபின்னரே வாழைச்சேனைக்கடற்கரைக்கு நாம் செல்வது உசிதமானது. ஆகவே நாம் மதியஉணவு உள்ளிட்ட இன்னும்பல தேவைகளுக்காக அவ்வவ்போது தரித்துநின்று ஆறுதலாகவே இந்தப்பயணத்தைத்தொடர்ந்தோம். வேறு இடத்திலிருந்தும் அவுஸ்திரேலியப்பயணகாரர்களை ஏற்றிய இரு கயஸ்வாகனங்கள் மட்டக்களப்பை நோக்கி வந்துகொண்டிருந்தன.
இந்தப்பயணத்தின் ஏற்பாடு எப்படியென்றால் வாழைச்சேனைக்கடற்கரையிலிருந்து சிறிய புளுஸ்ரார் வகையிலான மீன்பிடிப்படகுகளில் முப்பது கடல்மைல்தூரம்வரையிலும் சென்று குறித்த முப்பது கடல்மைல்தூரத்தில் எமக்காக காத்திநிற்கின்ற பெரியபடகு எம்மை ஏற்றிக்கொண்டு மூன்றுநாட்கள் பயணித்து சர்வதேசக்கடல்வரையிலும் கொண்டுசென்று நீர்கொழும்பிலிருந்து எமக்காக சர்வதேசக்கடலைநோக்கி வந்துகொண்டிருக்கும் மற்றுமோர் பெரியபடகில் எங்களை ஏற்றிவிட அந்தப்பெரியபடகில் நாங்கள் மேற்கொண்டு அவுஸ்திரேலியா நோக்கிய பயணத்தைத்தொடரவேண்டும். இதுதான் அந்தப்பயணத்தின் திட்டமாகும். நாங்கள் இரவு11.00மணிக்குப்பிற்பாடு வாழைச்சேனைக்கடற்கரையில் சூட்டிஐயாவின் வாடிக்குச்சென்றபோதும் ஒழுங்குபடுத்தல்களில் ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக அன்றையதினம் படகு ஏறவில்லை. மீண்டும் திரும்பி வீதிக்குவந்தபோது வீதியில் பொலிஸ்வாகனத்தைக்கண்டதும் அனைவரும் மதிற்சுவர்களுக்குப்பின்னால் மறைந்துகொண்டோம். பொலிஸ்வாகனம் எம்மைக்கடந்துசென்றதும் வேகமாக எமது கயஸ்வாகனம் நின்ற இடத்திற்குச்சென்று வாகனத்தில் ஏறிக்கொண்டதும் வாகனம் புறப்பட்டது. குறிப்பிட்டதூரம்வரையிலும் சென்று மட்டக்களப்பில் புறநகர்ப்பகுதியில் அமைந்திருந்த தனியார்லொட்சில் தங்கினோம். மறுநாள் இரவு பயணம் சாத்தியமாகும் என சுலக்சன் உறுதியளித்தார். மறுநாள் பொழுதுசாயும்நேரத்தில் நாம் தங்கிநின்ற குறித்த தனியார்லொட்சிலிருந்து வாழைச்சேனைக்கடற்கரை நோக்கிய எமது பயணம் மீண்டும் தொடர்ந்தது.
நான் பயணித்த கயஸ்வாகனம் உட்பட அவுஸ்திரேலியப்பயணகாரர்களை ஏற்றிய நான்கு கயஸ்வாகனங்கள் இந்த சேவையில் ஈடுபட்டது. வழியில் இரண்டு மூன்று தடவைகள் தரித்துநின்று நேரத்தைக்கடத்திக்கொண்டு ஒருவாறு இரவு11.00மணிக்குப்பிற்பாடுதான் வாழைச்சேனையில் குறித்த இடத்தை வாகனம் சென்றடைந்தது. வாகனத்திலிருந்து இறங்கியதும் எமது உடமைபாக்குகளையும் தூக்கிக்கொண்டு கடற்கரையை நோக்கி ஓட்டமும் நடையுமாகச்சென்றோம். கடற்கரைக்குச்சென்று நாம் தண்ணிக்கரையில் தயார்நிலையில் நின்ற சிறியவகை புளுஸ்ரார் படகுகளில் ஏறிக்கொண்டோம். இவ்வாறு அவுஸ்திரேலியப்பயணகாரர்களை ஏற்றிய சுமார்ஏழுபடகுகள் நீரைக்கழித்துக்கொண்டு ஆழ்ழகடலை நோக்கி விரைந்துசென்றன. ஏழுபடகுகளுக்கும் ஒன்றுடன்ஒன்று எந்தத்தொடர்புகளுமில்லை. நான் பயணித்தபடகு சுமார் மூன்றுமணிநேரமாகப்பயணித்து ஜிபிஎஸ்சின் உதவியுடன் முப்பதுகடல்மைல்தூரத்தில் பெரியபடகு நிற்பதாக குறிப்பிட்ட குறித்த இடத்தைச்சென்றடைந்தபோது எமக்கு ஏமாற்றமே காத்திருந்தது. எமக்கான பெரியபடகு கண்ணுக்கெட்டியதூரம்வரையிலும் இல்லை.
“மேலும் மூன்றுகடல்மைல்தூரம்வரையிலும் சென்றுபார்ப்போம்” என்று படகோட்டி கூறினார். நாமும் சம்மதித்தோம். படகு மூன்றுகடல்மைல்தூரத்திற்கு ஓடியது. ஆனால் அங்கும் எமக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கண்ணுக்கெட்டியதூரம்வரையிலும் மீன்பிடிப்படகுகள் வெளிச்சம்பாய்சி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால் எமக்குரிய பெரியபடகு கண்ணிலும்படவில்லை. என்னிடமும் இன்னும் மூவரிடமும் கைத்தொலைபேசிகள் இருந்தன. ஆனால் குறிப்பிட்டதூரக்கடல் எல்லையை தாண்டியதும் தொலைபேசிக்கான கவரேச் அறவே இல்லாதுபோயிற்று. ஆதலால் கரையில் யாருடனும் தொடர்புகொள்ளமுடியாதுபோனது. என்னசெய்வதென்று முடிவெடுக்கமுடியாதநிலையில் குழம்பிக்கொண்டிருந்தோம். “இன்னும் குறிப்பிட்டநேரத்திற்குள் பொழுதுபுலருகின்றபோது கடற்படையினரது ரோந்துநடவடிக்கைகளுக்கான வாய்ப்புக்கள் உள்ளது இவ்வாறு கடலில் அலைமோதிக்கொண்டிருந்தால் கடற்படையினரிடம் அகப்படவேண்டிய ஆபத்து வரலாம். ஆகவே படகை கரைக்குத்திருப்புவதுதான் உகந்தது” என படகோட்டி எச்சரித்தார்.
நாமும் என்னமுடிவெடுப்பது? படகோட்டியின் யோசனைக்கு தலையசைத்தோம். அதைத்தொடர்ந்து படகு கரையைநோக்கி விரைந்தது. பதினேழு கடல்மைல்தூரம்வரையிலும் படகு திரும்பிச்சென்றுகொண்டிருக்கையில் எரிபொருள் மண்ணெண்ணெய் தீர்ந்தநிலையில் படகின் இயந்திரம் அடங்கிநின்றது. தொடர்ந்து இயந்திரம் ஸ்ராட்பண்ணுவதற்கு வைத்திருந்து மிகக்குறைந்தளவிலான பெற்றோலைப்பயன்படுத்தி இயந்திரத்தை ஸ்ராட்பண்ணி படகை ஓடவிட்டார் படகோட்டி. மிகக்குறுகியதூரம் சென்றநிலையில் அதுவும் தீர்ந்துபோக இயந்திரம் செயலிழந்தது. என்னசெயவதென்றநிலையில் தவித்துக்கொண்டிருந்தோம். ரோந்துசெல்கின்ற கடற்படையினரின் கண்களில் அகப்பட்டால் அவுஸ்திரேலியப்பயணம் தடைப்படுவதோடு சிறைச்சாலை நீதிமன்றம்வரையிலும் செல்லவேண்டிய பாரதூரமான விளைவுகள் ஏற்படும்.
ஆகவே எமது நம்பிக்கைக்குரிய கடவுளை மன்றாடுவதைத்தவிர எமக்கு வேறுவழி எதுவும் அப்போதைக்கு இருக்கவில்லை. படகு அலைமோதிக்கொண்டிருந்தது. கைவசமிருந்த கைத்தொலைபேசிகளில் கரைக்கு தொடர்பையேற்படுத்த தொடர்ச்சியாக முயற்சிசெய்துகொண்டிருந்தோம். எமது முயற்சி வீண்போகவில்லை. அதிஸ்ட்டதேவதை எமக்கு கைகொடுத்தாள். தொடர்புக்கு முயன்றுகொண்டிருந்த தொலைபேசிகளில் ஒருதொலைபேசிக்கு மட்டும் கவரேச் வந்தது. உடனே படகோட்டி தொலைபேசியைவாங்கி கரையில் தனது உறவினரான சூட்டிஐயாவுடன் தொடர்புகொண்டு நிலைமையை அறிவித்தார். சூட்டிஐயாவும் எரிபொருள் எடுத்துக்கொண்டு குறிப்பிட்டநேரத்திற்குள் நாம் நின்ற இடத்திற்கு ஜிபிஸ்சின் உதவியுடன் வந்துசேர்வதாகக்கூறினார். நாமும் சூட்டிஐயாவின் வருகைக்காக காத்திருந்தோம். குறிப்பிட்டநேரம் கடந்தநிலையில் சூட்டிஐயாவின் படகு எம்மைநோக்கி விரைந்துவந்தது. எம்மிடம் வந்த சூட்டிஐயா எரிபொருளை படகோட்டியிடம் கொடுத்துவிட்டு எம்மை தான் வந்த படகில் மாற்றி ஏற்றியதும் சூட்டிஐயாவின் படகு கரையைநோக்கி விரைந்தது. அப்போதுதான் மற்றையபடகுகளும் பெரியபடகை சந்திக்காமல் அவதிப்பட்டு கடற்படையினர் துரத்தி அல்லோலகல்லோலப்பட்டு கரைக்கு வந்துவிட்டதாக சூட்டிஐயா கூறினார்.
எமது படகு கரைதட்டியபோது நன்றாக பொழுது விடிந்துவிட்டது. உடமைபாக்குகளை அப்படியே படகில்விட்டுவிட்டு சாதாரணமக்களைப்போலவே படகிலிருந்து இறங்கி சுட்டிஐயாவின் குடிசைக்குள் இருந்தோம். சிறிதுநேரத்தின்பின்னர் சுலக்சனின் ஏற்பாட்டில் கயஸ்வாகனம் வீதிக்குவர அவசரமாக நாம் வீதிக்குச்சென்று அந்த வாகனத்தில் ஏறிக்கொண்டோம். அதில் இன்னும் சிலரும் இருந்தார்கள். வாகனம் குறிப்பிட்டதூரம் பயணித்து ஒருதனியார் லொட்சுக்கு முன்பாக நின்றது. நாம் அந்த லொட்சில் தங்கினோம். அன்றையதினம் மதியவேளையில் பிரதானமுகவர்சுலக்சன் வந்து எம்மை வாகனத்தில் அழைத்துக்கொண்டு நாம் முதல்நாள் தங்கிநின்ற லொடசிற்கு எம்மை கூட்டிச்சென்றார். அங்கும் மற்றைய எமது அவுஸ்திரேலியப்பயண சகாக்களுடன் சேர்ந்துகொண்டோம். சுலக்சன் எல்லோருக்கும் சமாதானம்கூறி ஆவுஸ்திரேலியக்கடற்பயணத்திற்கு மறுஏற்பாடு செய்வதற்கு ஒருவாரகாலம் தாமதமாகும். அத்துடன் அந்தப்பயணம் பாதுகாப்பானதும் உத்தரவாதமானதுமாக அமையுமென உறுதியளித்தார். எனவே எம்மை மூன்று பிரிவினராகப்பிரித்து ஒருபிரிவினரை மடுவுக்குச்சென்று தங்குமாறும் மற்றையபிரிவினரை வவுனியாவில் தங்குமாறும் மூன்றாவது பிரிவினரை கொழும்பில் தங்குமாறும் ஆலோசனை கூறினார்.
நான் கொழும்பில் தங்குகின்ற அணியிலேயே இடம்பெற்றிருந்தேன். வவுனியாவுக்கும் மடுவுக்கும்செல்லவேண்டியவர்களுக்கு சுலக்சன் செலவுக்கு காசும் கொடுத்து அன்று மதியமே அனுப்பிவிட்டார். எங்களை அந்த லொட்சில் தங்கிநிறகும்படியும் தான் இரவுக்கு வந்து நாம் கொழும்புக்கு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்வதாகவும்கூறி வெளியில் சென்றார். அவர் செல்லும்போது நாம் எமது உடமைபாக்குகள் சூட்டிஐயாவின் படகில் கைவிடப்பட்டதை சுலக்சனுக்கு நினைவூட்டிவிட்டோம்.
அன்றிரவு 8.00மணியளவில் எம்மிடம் வந்த சுலக்சன் நாம் சூட்டிஐயாவின் படகில் கைவிட்டுவந்த எமது உடமைபாக்குகள் அனைத்தையும் எம்மிடம் கொண்டுவந்து சேர்ப்பித்திருந்தார். அத்துடன் சுலக்சன் கயஸ்வாகனம் ஒன்றை ஏற்பாடுசெய்து எம்மை அந்த வாகனத்தில் கொழும்புக்குச்சென்று மருதானையில் நாம் முதலில் தங்கிநின்ற தனியர்லொட்சில் தங்கிநிற்குமாறும் எமக்கான தேவைகளை கொழும்புஅன்ரி கவனித்துக்கொள்வார் என்றும் இரண்டுமூன்றுநாட்கள் கழித்து தான் மருதானைலொட்சில் வந்து எம்மை சந்திப்பதாகவும்கூறி எம்மை கொழும்புக்கு அனுப்பிவைத்தார். நாம் அந்த கயஸ்வாகனத்தில் இரவோடிரவாக கொழும்புக்குப்பயணித்து மருதானையில் நாம் முதலில் தங்கிநின்ற தனியார் லொட்சில் தங்கிநின்றோம். குறித்த தனியார்லொட்ச்உரிமையாளருக்கு கொழும்புஅன்ரி அறிமுகமானவரென்பதால் எமக்கு அங்கு தங்கிநின்றநாட்களில் எந்தவிதமான பிரச்சினைகளும் ஏற்படவில்லை.