வடமாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவர் தவராசா மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுதினத்திற்கு வழங்கிய பணத்தை திரும்பிக் கேட்டதற்கமைய வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களினால் ஒருவரிடம் ஒரு ரூபா வீதம் சேகரித்து சபைக்கு அனுப்பிவைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுவருகின்றனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவித்த வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியத்தலைவர் ச.டினேஸ்காந்த் மற்றும் மாணவர் ஒன்றிய உப தலைவர் சி.ஹயூரன் தெரிவிக்கையில்மே18 முள்ளிவாய்கால் நினைவு தினம் வடமாகாண சபை, யாழ் பல்கலைக்கழகம் மற்றும் பொது அமைப்புக்களினாலும் அவ் நினைவேந்தல் தினம் அனுஸ்டிக்கப்பட்டது.
அந்த வகையிலே வடமாகாண சபை உறுப்பினர்கள் ஏழு ஆயிரம் ரூபா வழங்கியுள்ளதாகவும் வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர்; தன்னுடைய பணத்தினை வடமாகாண சபையில் திருப்பி கேட்டதை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்.
இதனை உணர்வுள்ள தழிழர்கள் யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது இன அழிப்பினுடைய நாளாக அன்று அனுஸ்டிக்கப்பட்டது மக்களிடையே மாறாத வடுவாக காணப்பட்ட இந்த அனுஸ்டிப்பு நாளிலே இதில் பங்கேற்றவர்கள் உண்மையிலேயே புண்ணியம் செய்தவர்கள். அந்தப்பணத்தை திரும்பி கேட்பது என்பது சிறுபிள்ளைத்தனமான அதாவது பென்சிலை சிறுபிள்ளை உடைத்தபின் அதை மீண்டும் தறுமாறு கேட்பது போல் அடம்பிடிப்பது போன்ற செயலாகும் ஆகவேதான் நாம் கிழக்குபல்கலைக்கழக மாணவர்கள் நாங்கள் அந்த பாவப்பட்ட பணத்தினை திரும்பக்கொடுக்கும் நோக்குடன் ஒருவரிடம் 01 ரூபா வீதம் 7000 பேரிடம் இப் பணத்தை சேகரித்த வருகின்றோம்.
அந்த வகையிலே எமது பல்கலைக்கழக மாணவர்களினால் பல்கலைக்கழக வளாகத்தின் வெளியே 5679.00 ரூபாய் சேகரித்துள்ளோம் அத்தோடு இன்று புதன்கிழமை பல்கலைக்கழகத்தினும் சேகரித்து வடமாகாண சபையிடம் ஒப்படைக்கவிருக்கின்றோம்.
நாம் இந்த இடத்தில் கேட்டுக்கொள்வது என்னவென்றால் வடமாகாண சபையின் அவைத்தலைவர் இப் பணத்தினை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்டவருக்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகளையும் செய்யவேண்டும் என்பதையேயாகும். தமிழ் மக்களுக்காக அரசியலுக்கு வருகின்றவர்கள் மக்களின் மனம் புண்படாமல் செயற்பட வேண்டும் . உணர்வுகள் எப்படிப்பட்டது என்பதை கிழக்கு மக்களிடம் இருந்து அறியவேண்டும் என்றே நாம் இந்த பணத்தை சேகரித்தோம் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.