நீட் தேர்வில் தோல்வியடைந்த பிரதீபா தற்கொலை குறித்து, ‘அடுத்த படுகொலைகள் நோக்கி நகர்வோம்…’ எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவு வெளியானது. இதில் 39 மதிப்பெண்களே எடுத்து தோல்வியடைந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். ஏழை விவசாயியின் மகளான இவர், கடந்த வருடமும் நீட் தேர்வு எழுதி 155 மதிப்பெண்கள் பெற்றார்.
ஆனால், இந்த மதிப்பெண்ணுக்கே பல லட்சங்கள் கட்டி தனியார் மருத்துவக் கல்லூரியில்தான் படிக்க முடியும் என்பதால், இந்த வருடமும் நீட் தேர்வு எழுதினார். இந்த வருடம் 39 மதிப்பெண்களே பெற்றதால், மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார் பிரதீபா. அனிதாவைத் தொடர்ந்து பிரதீபாவின் தற்கொலையும் தமிழகத்தை உலுக்கியுள்ளது.
இதுகுறித்து, “நீட், மற்றொரு படுகொலையை நிகழ்த்தி விட்டது. கல்வி உரிமை மறுப்பை, நம் ஒத்துழைப்புடனே நிகழ்த்துகிறார்கள். வழக்கம்போல், ‘படிக்கத் திறன் அற்றவர்கள் சாவதே மேல்’ என எழுதித் தள்ளுவார்கள். யாரிடம் நம் உரிமையைக் கேட்கிறோம் என்று உணராமலே, தலைமுறைக் கனவை அடக்கம் செய்து நகர்வோம். அடுத்த படுகொலைகள் நோக்கி” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.
Eelamurasu Australia Online News Portal