“பெரியார் இப்போ இருந்திருந்தா அவருடைய எண்ணங்கள் எப்படி வெளிப்பட்டிருக்கும் அப்படீங்கிறதை சுவாரஸ்யமான வழியில சொல்லணும்னு நினைச்சோம். ரமேஷ் தமிழ்மணிதான் இதை ஆரம்பிச்சு வெச்சார். இந்த ஆல்பத்துக்கு மியூசிக் டைரக்டரும் அவர்தான். அவர் என்கிட்ட, `நிறைய மெலோடி பாடல்கள் பண்ணியிருக்கீங்க. ஃபாஸ்ட் பீட்ல ஒரு பாடல் பண்ணலாமா?’னு கேட்டார். அப்போ கிடைச்ச ஐடியாதான், `பெரியார் குத்து’ ஆல்பம்!” – உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார் பாடலாசிரியர் மதன் கார்க்கி.
“உங்களுக்கும் ரமேஷ் தமிழ்மணிக்குமான நட்பு எங்கேயிருந்து தொடங்கியது?”
“நானும் அவரும் சேர்ந்து ஷாரூக் கானை மெயின் கேரக்டரா வெச்சு, ஒரு கிராஃபிக் நாவலை வொர்க் பண்ணிக்கிட்டு இருக்கோம். கடந்த ஒரு வருடமா இந்த வேலைகள் போய்க்கிட்டு இருக்கு. தமிழ், இந்தி, ஆங்கிலம்னு மூணு மொழிகள்ல வெளியிட பிளான் பண்ணியிருக்கோம். அதுக்குப் பிறகு வேற மொழிகள்ல வெளியிடவும் திட்டம் இருக்கு. தவிர, இந்த நாவலைப் படமா எடுக்கலாம்னும் முடிவெடுத்து வெச்சிருக்கோம். இந்த ஃபேன்டஸி கதை ரமேஷோடது. எழுத்து என்னுடையது! இப்படித்தான் நானும் அவரும் நண்பர்கள் ஆனோம்!”
“இந்தக் கூட்டணியில் சிம்பு எப்படி என்ட்ரி ஆனார்?”
“இந்தப் பாட்டு யார் பாடினா நல்லா இருக்கும்னு யோசிக்கும்போது, ரமேஷ்தான் சிம்புகிட்ட கேட்கலாம்னு சொன்னார். சிம்புவுக்கும் இந்தப் பாட்டு ரொம்பப் பிடிச்சிருந்தது. `நான் பாடுறேன், நானே டான்ஸ் பண்ணி வீடியோவாவும் பண்றேன்!’னு ரொம்ப ஆர்வமா வந்தார். அதுக்கான முழு முயற்சிகளையும் சிம்பு எடுத்துப் பண்ணிக்கிட்டு இருக்கார்.”
“எந்தெந்த விஷயங்களை மையப்படுத்தி இந்தப் பாட்டை உருவாக்கியிருக்கீங்க?”
“மக்களுக்குப் பிரச்னைகள் தர்ற ஆலைகள் தொடங்குவதிலிருந்து, பெரியார் சிலை உடைக்கப்படுவது வரை… எல்லாமே பாட்டுல வெச்சிருக்கோம். உதாரணத்துக்கு, யாராவது ஏதாவது ஒரு துறையில சாதிச்சுட்டா, உடனே அவர் எந்தச் சாதினு கூகுள்ல தேடுற பழக்கம் இருக்குல்ல.. அதை வெச்சுத்தான் பாட்டையே தொடங்குறோம். `உலகம் வேகமா முன்னோக்கிப் போய்கிட்டிருக்கும்போது, ஏன் எல்லோரையும் பின்னோக்கி இழுக்குறீங்க?’ இதுதான் பெரியாரோட கேள்வி. அதைத்தான் பாட்டுல மையப்படுத்தியிருக்கோம். எந்தச் சாதியையும் குறிப்பிட்டோ, யாரையும் ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ இருக்காது, இந்தப் பாடல்!.”
“பெரியார் குத்து… டைட்டில் நல்லா இருக்கே! டைட்டிலுக்கான காரணம்?”
“இந்தப் பாடலோட இசை ரொம்ப வேகமா இருக்கும்ங்கிறது, முதல் காரணம். ரெண்டாவது காரணம், பெரியாரின் நச் பன்ச்களைப் பாடல் முழுக்கச் சொல்லியிருக்கோம்!”
‘ராக்கெட் ஏறி வாழ்க்கை போகுறப்போ, சாக்கடைக்குள்ள முங்காதவே!
சாதிச்சவன் சாதி என்னனு கூகுள்ல போய் தேடாதவே!’
இப்படித்தான் பாடல் தொடங்கும். பெரியார் அடிக்கடி `வெங்காயம்’ங்கிற வார்த்தையைப் பயன்படுத்துவார். அதைக் குறிக்க அடிக்கடி பாட்டுக்கு நடுவுல `வெங்காயம்… வெங்காயம்’னு வெச்சிருக்கோம். சிம்பிளா சொன்னா, இது பெரியாரோட எண்ணங்களைக் கொண்டாடுற பாட்டு!”
சினிமாத்துறையில் பாடலாசிரியராக 10 வருஷம்… இதை எப்படி உணர்றீங்க ?
“ரொம்ப மகிழ்ச்சியான பயணமா பார்க்குறேன். நிறைய கத்துக்கிட்டேன். பாடல் எழுத வர வரைக்கும் தமிழுக்கும் எனக்கும் நிறைய இடைவெளி இருந்தது. இலக்கியங்கள் இலக்கணங்கள்ல பெரிய பயிற்சி இல்லை. ஆர்வம் மட்டும்தான் இருந்தது. அதை வெச்சு எழுத வந்துட்டேன். ஆரம்பத்துல தமிழை இன்னும் நிறைய கத்திருந்திருக்கலாமோனு யோசிச்சிருக்கேன். இப்போ எனக்கும் தமிழுக்குமான நெருக்கம் ரொம்பவே அதிகமாகி இருக்குனுதான் சொல்லணும். இலக்கியங்கள் இலக்கணங்கள் எல்லாம் படிச்சுக் கத்துட்டு இருக்கேன். இதுல மத்தவங்களோட எண்ணங்களை உள்வாங்கி பிரதிபலிக்குற வாய்ப்பு கிடைக்குது. அது என்னைச் செதுக்கிட்டு இருக்கு. ஒவ்வொரு பாடல் எழுதும்போது நிறைய கத்துக்க முடியுது. புதுசா ஒரு நம்பிக்கை ஏற்படுது. மனசுக்கு அமைதி தர ஒரு பயணமா பார்க்கிறேன்”
“பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளர்களுக்கும் நல்ல பிணைப்பு இருக்கும். உங்களுக்கு எந்த இசையமைப்பாளர்கூட வேலை செய்யும்போது கெமிஸ்ட்ரி அதிகமா இருக்கும்?”
“கெமிஸ்ட்ரினு சொல்ல முடியலை. நான் இமானுக்கு நிறைய பாடல்கள் எழுதியிருக்கேன். அவர்கூட வொர்க் பண்ணும்போது கம்ஃபோர்ட் லெவல் அதிகமா இருக்கும். என்னை எழுதவிட்டுட்டு, அதுக்குப் பிறகு கம்போஸ் பண்ணுவார். ஏ.ஆ.ரஹ்மான் சார்கூட வேலை பார்க்க ரொம்பப் பிடிக்கும். அவர்கூட ஒருமுறை வொர்க் பண்ணிட்டு வந்தா, நாம புதுசா மாறிட்ட மாதிரி ஒரு ஃபீல் கிடைக்கும்!”
“‘DooPaaDoo’ வேலைகள் எப்படிப் போகுது?”
“ரொம்ப நல்லா போயிட்டு இருக்கு. முதல் ஒரு வருடம் இண்டிபெண்டன்ட் இசைக் கலைஞர்களை ஒருங்கிணைச்சு நிறைய பாடல்களைச் சேகரிச்சோம். ரெண்டாவது வருடம் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பிச்சிருக்கோம். `காஞ்சனா 3′ படத்துக்கு டூபாடூ இசைக் கலைஞர்கள்தாம் மியூசிக் பண்ணியிருக்காங்க. `doo paa doo’ ஆடியோ நிறுவனமும் வரப்போகுது. லாரன்ஸ் அவரோட அடுத்த நாலு படங்களுக்கும் எங்களைக் கமிட் பண்ணிருக்கார்.”