உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்காவும், சீனாவும் சமீப காலமாக வர்த்தக மோதலில் ஈடுபட்டு உள்ளன. இரு நாடுகளும் பரஸ்பரம் இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 150 பில்லியன் டாலர் அளவுக்கு வரி விதிக்கப்போவதாக மிரட்டியதால் இந்த மோதல் உச்சக்கட்டத்தை அடைந்தது. இதனால் இருநாடுகளும் பரஸ்பர இறக்குமதியை குறைத்தன.இந்த வர்த்தக போரை முடிவுக்கு கொண்டு வர இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன. இதில் கடைசியாக சீன வர்த்தகக்குழு ஒன்று கடந்த மாதம் வாஷிங்டன் பயணம் மேற்கொண்டு, டிரம்பின் பொருளாதார ஆலோசனைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இதில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க வர்த்தக மந்திரி வில்பர் ராஸ் நேற்று முன்தினம் பீஜிங் வந்தார். அவர் சீன துணை பிரதமர் லியு ஹியுடன் நேற்று வர்த்தக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதில் குறிப்பிடத்தக்க வகையிலான புதிய ஒப்பந்தம் எதுவும் கையெழுத்தானதா? என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
எனினும் அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்ந்தால் அனைத்து ஒப்பந்தங்களும் செல்லுபடியாகாது என சீனா எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இது குறித்து சீன அரசின் செய்தி நிறுவனம் கூறியிருப்பதாவது:-
விவசாயம், எரிசக்தி, நேர்மறையான முடிவை எட்டுதல் மற்றும் உறுதியான வளர்ச்சி போன்ற துறைகள் தொடர்பாக வாஷிங்டனில் எட்டப்பட்ட உடன்பாட்டை செயல்படுத்துவது குறித்து இரு தரப்பும் நல்ல தொடர்பில் ஈடுபட்டு இருக்கின்றன. அமெரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்வது என்ற சீனாவின் நடைமுறையில் மாற்றம் இல்லை.
அமெரிக்கா மற்றும் சீனா தற்போது ஏற்படுத்தி இருக்கும் உடன்பாட்டை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்வது குறித்து இருதரப்பும் சந்தித்து பேச வேண்டும். மாறாக வர்த்தக போரில் ஈடுபடக்கூடாது.
சீன பொருட்களுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட பொருளாதார தடைகளை அமெரிக்கா அறிமுகம் செய்தால், வர்த்தக பலன்கள் எதையும் பெற முடியாது. இது தொடர்பாக ஏற்படுத்தப்பட்டு இருக்கும் ஒப்பந்தங்கள் அனைத்தும் செயலற்றதாகி விடும். இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் கூறியிருந்தது.
முன்னதாக பீஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்த வில்பர் ராஸ் கூறுகையில், ‘எங்கள் சந்திப்புகள் இதுவரை நட்பு ரீதியாகவும், வெளிப்படையாகவும் அமைந்து இருக்கிறது. மேலும் குறிப்பிட்ட ஏற்றுமதி பொருட்கள் தொடர்பாக சில பயனுள்ள தலைப்புகளும் இதில் இடம்பெற்று இருந்தன’ என்று தெரிவித்தார்.