மாரடைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் உணவு!

எனக்கு 63 வயதாகிறது. 2011-ல் எனக்கு மாரடைப்பு வந்தது. மூன்று அடைப்புகள் இருந்தன. இரண்டு ஸ்டென்டுகள் வைக்கப்பட்டன. பீட்டாலாக், நெக்சியம், டுனாக்ட் இஇசட் எனும் மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறேன். இதுவரை பிரச்சினை எதுவும் இல்லை. உணவு முறையில் மட்டும் அவ்வப்போது சில சந்தேகங்கள் எழுகின்றன. மாரடைப்புக்குப் பிறகான உணவு முறையைத் தெளிவுபடுத்தினால், என் போன்றவர்களுக்கு உதவியாக இருக்கும்.

– எஸ். பாலகிருஷ்ணன், பள்ளிக்கரணை, சென்னை.

மாரடைப்பைத் தடுப்பதற்கு உதவும் உணவு வகைகளைத்தான் பெரும்பாலும் மாரடைப்பு வந்தவருக்கும் பரிந்துரை செய்வது வழக்கம். என்ன, மாரடைப்பு வருமுன்னர் உணவில் அவ்வளவாக கவனம் செலுத்தியிருக்க மாட்டோம். ‘ஆயுளில் பாதியைக் கழித்துவிட்டோம். இனிமேல் ‘லைஃப் ஸ்டைலை’ மாத்தி என்ன செய்யப் போகிறோம்?’ என்று அலுத்துக்கொண்டே சாப்பிட்டிருப்போம். மாரடைப்பு வந்த பின்னர் உயிர் பயம் வந்திருக்கும். அப்போது கொஞ்சம் கூடுதல் அக்கறையோடு சாப்பிடுவோம். அவ்வளவுதான் வித்தியாசம்!

இதயம் காக்கும் உணவு வகைகள்

அரிசி, கோதுமை, கம்பு, கேழ்வரகு, முழுத்தானியங்கள். நார்ச்சத்து மிகுந்த பயறு, பட்டாணி வகைகள், ஓட்ஸ், துவரை, அவித்த கொண்டைக்கடலை. வெண்ணெய் நீக்கப்பட்ட பால், மோர். கீரைகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள். தக்காளி, அவரை, வெண்டைக்காய், வெள்ளைப்பூண்டு, முருங்கை, புடலங்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், முட்டைக்கோஸ், காளிஃபிளவர், புரோக்கோலி ஆகியவை இதயம் காக்கும் உணவு வகைகள்.

அசைவம் விரும்புபவர்கள் தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சியைச் சாப்பிடலாம். ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்குப் பாதுகாப்பு தரும் ஒரு சத்துப்பொருள். இது மீனில் உள்ளது. மீனையும் கோழி இறைச்சியையும் எண்ணெய்யில் பொரிக்காமல் வேகவைத்து குழம்பாக்கிச் சாப்பிடுவது நல்லது.

தினமும் 500 கிராம் பழம் அவசியம். பழங்களில் ஆரஞ்சு, திராட்சை, ஆப்பிள், கொய்யா, மாதுளை, அன்னாசி நல்லது. காபிக்குப் பதிலாக கிரீன் டீ குடிக்கலாம்.

எண்ணெய் விஷயத்தில் கவனம் தேவை. செக்கு எண்ணெய்தான் நல்லது. வாரம் ஒரு வகை எண்ணெய் என சுழற்சிமுறையில் பயன்படுத்துங்கள். நாளொன்றுக்கு 15 மி.லி. எண்ணெய் போதும்.

இவற்றுக்கு ‘நோ’ சொல்லுங்கள்!

பாமாயில், வனஸ்பதி, முட்டையின் மஞ்சள் கரு, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி. தயிர், வெண்ணெய், பாலாடை, பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், முந்திரிப் பருப்பு, பாதாம் பருப்பு, அப்பளம், வடை, பஜ்ஜி, போண்டா, பூரி, சிப்ஸ், சீவல், சமோசா, எண்ணெயில் ஊறிய, வறுத்த, பொரித்த உணவு வகைகளை ஓரங்கட்டுங்கள். செயற்கை இனிப்புகள், ‘ஜங்க் ஃபுட்’ எனப்படும் நொறுக்குத் தீனிகள் பக்கம் பார்வையைச் செலுத்தாதீர்கள்.

உப்பின் அளவு முக்கியம்!

உணவில் உப்பின் அளவு முக்கியம். நாளொன்றுக்கு 5 கிராம் உப்பு போதும். நாம் உண்ணும் உணவின் மூலம் நேரடியாக உப்பு நம் உடலுக்குள் சேர்வதைவிட, பல உணவு வகைகளில் மறைந்திருக்கும் உப்பு நமக்கே தெரியாமல் சேர்வதுதான் அதிகம். முக்கியமாக, துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுகள் போன்றவற்றில் நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவில் உப்பு உள்ளது. இவற்றைத் தவிர்க்க வேண்டும். தவிரவும் ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், அப்பளம், வடாம், சிப்ஸ் போன்ற உப்பு மிகுந்த உணவைக் குறைத்துக்கொள்வதும் நல்லது.

இவையும் முக்கியம்தான்!

புகைப் பழக்கம் இருந்தால் நிறுத்துங்கள். மது அருந்தும் பழக்கம் இருந்தால், அதை மறந்துவிடுங்கள். இரவில் சீக்கிரமாக உறங்கச் செல்லுங்கள். குறைந்தது 6 மணி நேரம் உறக்கம் அவசியம்.

மன அழுத்தம் எந்த வகையிலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருங்கள். எந்தக் காரணம் கொண்டும் பிறருடன் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள். தினமும் 5 நிமிடங்கள் தியானம் செய்தால் மனம் அமைதி பெறும்.

உடல் எடையை உங்கள் வயதுக்கு ஏற்ப சீராகப் பேணுங்கள். இதற்குத் தினமும் அரை மணி நேரம் நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். நடைப் பயிற்சிக்கு வழியில்லை என்றால், வீட்டிலேயே யோகா செய்யலாம். எந்தப் பயிற்சி ஆனாலும் குறைந்தது வாரத்தில் 5 நாட்கள் செய்ய வேண்டும்.

உங்கள் இதயத்தின் வேலைத்திறன் எவ்வளவு என அறிந்து, அதற்கேற்ப உடற்பயிற்சிகளை மேற்கொள்வது இன்னும் நல்லது. இதற்கு வழிகாட்டுவதற்கு என்றே தனிப் பயிற்சி மையங்கள் சென்னையில் இருக்கின்றன.

மருத்துவர் கூறும் கால அளவில் மறுபரிசோதனைக்குச் செல்லுங்கள். மாத்திரை, மருந்துகளை நீங்களாக நிறுத்தவோ, குறைத்துக்கொள்ளவோ, விட்டுவிட்டுச் சாப்பிடவோ வேண்டாம். மாற்று மருத்துவத்தில் நம்பிக்கை இருந்தால், உங்களுக்குச் சிகிச்சை கொடுத்த இதயநல வல்லுநரின் ஆலோசனையைக் கேட்டுக்கொள்ளுங்கள்.

ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை, ரத்தக் கொழுப்பு ஆகியவை சரியான அளவில் இருக்கட்டும். ஏற்கெனவே பெற்ற அனுபவத்தின் பேரில் மாரடைப்பின் எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்துகொண்டு, சிகிச்சையை மேற்கொள்ளுங்கள். உங்களுக்கு மீண்டும் மாரடைப்பு ஏற்பட வழியில்லாமல் போகும்.