நான் யாரையும் காயப்படுத்தாததால் இரவில் நிம்மதியாக தூங்குகிறேன்! – சோனம் கபூர்

இந்தி திரை உலக வாரிசு நட்சத்திரங்களில் பிரபலமானவர், சோனம் கபூர். பிரபல நடிகர் அனில் கபூரின் புதல்வியான சோனம், வாரிசு என்பதாக அல்லாமல், தனது சொந்தத் திறமையால் நற்பெயர் பெற்றிருக்கிறார்.

இந்தித் திரையுலகம் உங்களை எப்படி கவர்ந்தது?

நான் கலகலப்பாக பேசக்கூடியவள் அல்ல. படிப்பில் கவனம் செலுத்தவும், பொதுமக்களின் பார்வையில் இருந்து விலகி இருக்கவுமே நான் விரும்பினேன். நூலகத்தில் இருக்கவும், வகுப்பறையில் இருக்கவுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆக, நான் வாழ்நாளெல்லாம் படித்துக்கொண்டே இருக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் எனக்குள்ளே இன்னொருபுறத்தில், ஏதாவது ஒரு கலை வடிவத்தில் என்னை வெளிப்படுத்திக்கொள்ளும் ஆசை இருந்தது. அதைத்தான் நான் நடிக்கும் படங்கள், அணியும் ஆடைகளில் செய்கிறேன். எனது கலை ஆர்வம், 18 வயதில் வெளிப்பட்டது. அதற்கு, ‘சாவரியா’ படத்தின் மூலம் சஞ்சய் லீலா பஞ்சாலி வாய்ப்பளித்தார். நான் அந்த படத்தில் நடித்தபோது எனக்கு வயது 21. இந்த 11 வருடங்களில் என் வாழ்க்கை நிறைய மாறியிருக்கிறது. நாம் வளர வளர நம் அறிவும் வளர்கிறது, தேர்வு செய்யும் விஷயங்கள் சிறப்பாகின்றன.

உங்கள் வாழ்க்கையை திரும்பிப் பார்த்தால், எந்த விஷயத்தை வேறு மாதிரி செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது?

இதுவரையிலான எனது வாழ்க்கை நன்றாகவே இருந்திருக்கிறது. என் வாழ்க்கையைச் சிறப்பாக்கும் விஷயங்களையே நான் செய்திருக்கிறேன். மற்றவர்களிடம் பொறுப்பாக இருப்பது, உண்மையாக நடந்துகொள்வது, நேர்மையாக செயல்படுவது, முற்போக்கு சிந்தனையுடன் இருப்பது போன்று எனக்கென்று சில கொள்கைகள் வைத்திருக்கிறேன். என் சினிமா வாழ்வில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களிலும் நான் அந்த கொள்கைகளை கைவிட்டதே இல்லை. யாரையும் காயப்படுத்தியதில்லை என்பதால் என்னால் தினமும் இரவில் நிம்மதியாகத் தூங்க முடிகிறது.

இதுவரையிலான திரைவாழ்வில் உங்களால் மறக்க முடியாத அனுபவம்?

என் நினைவில் என்றும் நிலைத்திருப்பது, ‘நீர்ஜா’ படப்பிடிப்புத் தளத்துக்கு எனது தந்தை வந்து படக்குழுவினருடன் பேசியது. எங்களை உற்சாகப்படுத்துவதற்காகவே இரண்டொரு நாட்களுக்கு ஒருமுறை அமீர்கானும், ராஜ்குமார் ஹிரானியும்கூட அங்கு வந்தார்கள். எல்லோருக்குமே அது ஒரு ஸ்பெஷல் படம் என்று தெரிந்திருந்தது. அந்த படத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி எங்களை உற்சாகப்படுத்துவார்கள். கிளைமாக்ஸ் படப்பிடிப்பு நடந்த நேரத்திலும், அப்பா அங்கு இருந்தது ரொம்பவே தெம்பாக உணரவைத்தது.

உங்களின் இயல்பான குணாதிசயம் என்ன?

நேர்மறையான செயல்பாடும், கடுமையாக உழைப்பதில் ஆர்வமும் கொண்ட சாதாரணப் பெண் நான். எல்லாவற்றிலும் உண்மையாக இருப்பது நல்லது. எல்லோரையும் போல் வலிகளை அனுபவித்தாக வேண்டும். தாழ்வான தருணங்களையும் மதிக்க வேண்டும், அவற்றை தோல்வி களாகக் கருதக்கூடாது.

உங்கள் தந்தையிடம் நீங்கள் பார்த்து பிரமிப்பது?

அவரிடம் எப்போதும் ஒரு தேடுதல் இருந்துகொண்டே இருக்கும். வளர்ச்சிக்கான வாய்ப்புகளை ஆராய்ந்துகொண்டே இருப்பார். அவர் தனது 61 வயதிலும் தனது பெரும்பாலான படங்களில் முன்னணி கதாபாத்திரங் களில்தான் நடிக்கிறார். வயதான நடிகர்களை மக்கள் பார்க்கும் விதத்தையே அவர் மாற்றியமைத்திருக்கிறார். அவர் சிறந்த தந்தை. என்னை முற்போக்கான எண்ணங்களுடன் வளர்த்த அவர், ஒரு பெண்ணியவாதியும்கூட. நேர்மைக்கு அவர் அளிக்கும் முக்கியத்துவம் ஆச்சரியம் அளிக்கும்.

உங்கள் சகோதரர் ஹர்ஷவர்தன், சகோதரி ரியாவுடன் உங்கள் உறவைப் பற்றிச் சொல்லுங்கள்?

நான் எனது சகோதரனை பொத்திப் பாதுகாக்க எண்ணுவேன். என் சகோதரி என்னுடைய சிறந்த தோழி. ரியாவுக்கும் எனக்கும் ஒன்றரை வயதுதான் வித்தியாசம். எனவே, படங்கள், பேஷன், பிசினஸ் என்று நான் செய்யும் எல்லாவற்றிலும் ரியா எனது பார்ட்னர். எங்களுக்குள் எந்தப் பேதமும் கிடையாது. சின்ன வயதில் நான் ஹர்ஷவர்தனுடன் டி.வி. ரிமோட்டுக்காக சண்டை போட்டிருக்கிறேன். ஒருமுறை அவன் அதை என் மீது தூக்கி எறிந்ததால் எனக்குக் காயம் ஏற்பட, அம்மா அவனை விளாசிவிட்டார். அதெல்லாம் பழைய கதை. இப்போது நாங்கள் மூவரும் ஒன்று கூடினால் ஒரே அரட்டைமயம்தான்.

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி புதிதாக திரையுலகப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார். அவருக்கு நீங்கள் என்ன மாதிரியான ஆலோசனைகளை வழங்குவீர்கள்?

நான் அவளுக்கு ஏற்கனவே நிறைய ஆலோசனை கூறிவிட்டேன். நான் திரையுலகில் பிரவேசித்தபோது என் ஒப்பனை உள்ளிட்டவற்றில் ஸ்ரீதேவி நிறைய உதவி செய்தார். நான் அவர்கள் வீட்டுக்கு அடிக்கடி போய் நிறையப் பேசியிருக்கிறேன். அவர் தனது மகளிடமும் அதுபோல பேசியிருப்பார். ஜான்வி ஒரு தொழில்முறை நடிகையாகத் திகழ வேண்டும். எதிர்மறையாய் கருத்துச் சொல்பவர்கள் நிறைய இருப்பார்கள். ஆனால் அவள் எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் சினிமாவில் கவனம் செலுத்த வேண்டும்.

சமூக வலைதளங்களில் உங்களைப் பற்றிய விமர் சனங்கள் குறித்து கவலைப்படுகிறீர்களா?

அவர்கள் அனைவரும் வாழ்வில் எதையும் உருப்படியாய் செய்ய முடியாத முகமற்ற மனிதர்கள். நான் அவர் களுக்காக பரிதாபப்படுகிறேன். நான் இதைக் கிண்ட லாகச் சொல்லவில்லை. நிஜமாகவே சொல்கிறேன். அவர்கள் பயமும், குற்றஉணர்வும் கொண்ட நிம்மதியற்ற வாழ்க்கைதான் வாழ்ந்து வருவார்கள்!