முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் நாயாற்றுப் பாலத்திலிருந்து, கோம்பா சந்தி வரையான சுமார் 4 கிலோ மீற்றர் நீளமான பிரதேசத்தை தொல்பொ ருள் திணைக்களம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர்.
தொல்பொருள் திணைக்களத்துக்கு என்று அடையாளப்படுத்தும் நடுகல் அங்கு நேற்று முன்தினம் நடப்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டு வாடி அமைத்து காணிகளை அபகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஒருபுறத்தில் மகாவலி எல் வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களின் காணிகள் சூறையாடப்பட்டு வருகின்றன.
வனவிலங்குத் திணைக்களத்தினரும், மக்களின் காணிகளைக் கூட தமக்குச் சொந்தமானவை என்று அடையாளப்படுத்திக் கையப்படுத்தி வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டம் எல்லா வழிகளிலும் பறிபோய்க் கொண்டிருக்கும் நிலையில், தற்போது புதிதாக தொல்பொருள் திணைக்களத்தினரும் தமது கைவரிசையைக் காட்டத் தொடங்கியிருக்கின்றனர் என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாயாற்றுப் பாலத்திலிருந்தான கோம்பா சந்தி வரையில் சுமார் 4 கிலோ மீற்றர் பிரதேசத்தில் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளும் அடங்கியுள்ளன. அவற்றையும் கையகப்படுத்தும் வகையில் தொல்பொருள் திணைக்களத்தின் நடுகல் அமைந்துள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நாயற்றில் உள்ள விகாராதிபதி தங்கியிருக்கும் வீட்டிலேயே, தொல்பொருள் திணைக்களம் இயங்குகின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. அங்கேயே தொல்பொருள் திணைக்களத்தின் பெயர்ப் பலகையும் காணப்படுகின்றது.