1970களில் நடக்கின்ற கதை. கல்லூரி இளம் மாணவி அலியா பட், கவலை என்பதையே அறியாத ஒரு சந்தோஷப் பறவை. திடீரென்று ஒருநாள் அவருடை
1970களில் நடக்கின்ற கதை. கல்லூரி இளம் மாணவி அலியா பட், கவலை என்பதையே அறியாத ஒரு சந்தோஷப் பறவை. திடீரென்று ஒருநாள் அவருடைய வாழ்க்கையே திசை மாறுகிறது. இந்தியப் புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் அவரது அப்பா ரஜித் கபூர், பாகிஸ்தானைச் சேர்ந்த ராணுவ வீரர் விக்கி கவுஷலுக்கு அலியாவை திருமணம் செய்து வைக்கிறார். விக்கியின் அப்பாவும், ரஜித் கபூரும் பிரிவினைக்கு முன்பு இருந்தே நண்பர்கள். திருமணம் ஆகிச் செல்கின்றபோதுதான் அலியாவுக்குத் தெரிகிறது. தான் ஒரு உளவாளியாக விக்கியின் வீட்டுக்குச் செல்வது. அதன்பிறகு ஒவ்வொரு கணமும் மரணத்தை நெருங்கியபடி, நாட்டுக்காக ரிஸ்க் எடுக்கிறார்.
இந்நிலையில் அலியாமீது அதீத காதலும், நம்பிக்கையும் வைத்திருக்கும் விக்கியின் அன்பு, அலியாவைத் தவிக்க வைக்கிறது. இறுதியில் நடப்பது, இதயங்களை நொறுக்கும் கிளைமாக்ஸ். கவிஞர், எழுத்தாளர், இயக்கு னர் என பன்முகம் கொண்டவர், ஆஸ்கர் வென்ற குல்சார். அவரது மகள் மேக்னா குல்சார் இயக்கி இருக்கிறார். இதற்குமுன் அவர் சில படங்களை இயக்கி இருந்தாலும், இந்த ஒரே படத்தால் அப்பாவின் உயரத்தை தொட முயன்றுள்ளார்.
சீட்டின் நுனியில் ரசிகர்களைக் கொண்டு அமர்த்தும் காட்சிகளும், திரையில் இருந்து பார்வையை ஒரு கணமும் அகலவிடாத திரைக்கதையும் மேக்னாவின் மாயாஜாலம். தியேட்டரிலிருந்து வெளிவரும்போது, ஒருவித வலியுடன் ரசிகனைத் திரும்ப வைப்பதில்தான் அவர் ஜெயிக்கிறார். அலியா பட், மாடர்ன் துறுதுறு கேரக்டர்களுக்கு மட்டுமே லாயக்கு என்று, மசாலா டைரக்டர்கள் சிலர் முடிவு கட்டியிருந்தனர். உட்தா பஞ்சாப் என்ற படத்திலேயே அதை மாற்றிக் காட்டியவர், இதில் மிரட்டிக் காட்டியிருக்கிறார், தன் நடிப்பை.
படத்தின் ஆரம்பத்தில் வரும் அந்த அப்பாவி கல்லூரிப் பெண்ணுக்கும், திருமணத்துக்குப் பிறகு வரும் அலியாவுக்குமே எத்தனை வித்தியாசங்கள் தெரிகின்றன. ரஜித் கபூர், விக்கி கவுஷல் என எல்லோருமே கொடுத்த கேரக்டர்களில் கில்லி ஆடியிருக்கிறார்கள். முதல் பகுதியின் ஆரம்பத்தில் சில காட்சிகள் மெதுவாக நகர்வது மட்டும்தான் திருஷ்டிப் பொட்டு. ஆனால், சீக்கிரமே திரைக்கதை தனது சரியான டிராக்கைப் பிடித்து விட, அதிவேகம் எடுக்கிறது படம். எடிட்டர் நிதின் பைத், படத்தின் இன்னொரு ஹீரோ என்று கூட சொல்லலாம். சங்கர் எஹசான் லாய், பாடல்களை விட பின்னணி இசையில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள்.