முள்ளிவாய்கால் நிகழ்வு சில சிங்களவர் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது!

என்மேல் கரிசனையுடைய ஒருவர் பின்வரும் கேள்வியை அனுப்பியுள்ளார்.

கேள்வி – ஐயா! உங்களைப் பற்றி தெற்கில் மிகக் கேவலமாகக் கதைக்கப்படுகிறது. பிரபாகரன் தலையில் கோடாலியால் வெட்டியது போல் உங்கள் தலையிலும் வெட்ட வேண்டும் என்று கூறி உங்கள் வெட்டப்பட்ட தலையை வலைத்தளங்களில் படங்களாக அனுப்புகின்றார்கள். உங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என்று பயப்படுகின்றோம். மேலதிக பாதுகாப்பைக் கோரிப் பெற முடியாதா?

பதில்- உங்கள் அன்புக்கும் கரிசனைக்கும் என் மனமார்ந்த நன்றிகள்! எமது முள்ளிவாய்கால் நிகழ்வு இவ்வாறான ஆத்திரத்தை சில சிங்களவர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதன் அர்த்தம் என்னவென்றால் உங்களின் அரசியல் பிரச்சனைகளை வெளிப்படுத்தாதீர்கள்! வெளிப்படுத்தினால் அடிப்போம், கொல்லுவோம், நாட்டை விட்டுத் துரத்துவோம். என்பதே. சிங்கள மக்களின் இவ்வாறான எதிர்மறைக் கருத்துக்களும் வன் நடவடிக்கைகளும் முன்னரும் வெளிவந்துள்ளன .சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவந்த போது எம்மைப் பயப்படுத்திப் பேசாது வைக்கப் பார்த்தார்கள். காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் இருந்த என் நண்பர் மௌசூர் மௌலானாவையும் வேறு சிலரையும் பேரை ஏரிக்குள் (Beira Lake) அப்படியே தூக்கி வீசினார்கள். 58ம் ஆண்டுக் கலவரம், 77ம் ஆண்டுக் கலவரம், 83ம் ஆண்டுக் கலவரம் என்று தமிழ் மக்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன. பிள்ளையைக் கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போல் எமது முக்கிய தேசிய அரசியல் கட்சிகள் தமது ஆதரவாளர்கள் மூலமாக எங்களுக்குச் செய்வதெல்லாம் செய்து விட்டு துக்கம் விசாரிக்க வந்தார்கள். இது இலங்கை அரசியலில் சர்வ சாதாரணம்.

இவற்றினால் சிங்கள அரசியல் தலைமைத்துவம் எதைக் கூறுகின்றது?  தமிழர்களை நாம் கட்டி ஆண்டு கொண்டிருகின்றோம், அவர்களை அதிகம் பேச விடக்கூடாது. விட்டால் எமது உண்மை சொரூபம் உலகத்திற்குத் தெரிந்துவிடும். ஆகவே அதிகம் பேசுபவனுக்கு உயிர்ப் பயத்தை ஏற்படுத்துவோம், வெள்ளைவானில் கொண்டு சென்று உரிய தண்டனை வழங்குவோம். சர்வதேசம் கேள்வி கேட்டால் நாங்கள் உதாரண புருஷர்கள் பிழையே செய்யமாட்டோம் என்போம். சென்ற முள்ளிவாய்க்கால் போரில்க்கூட ஒருகையில் மனித உரிமை சாசனம் மறுகையில் துப்பாக்கி வைத்துக்கொண்டே போராடினோம். அப்பாவி ஒருவர்தானும் கொல்லப்படவில்லை. “Zero Casualties” (பூஜ்ய அப்பாவி மரணங்கள்) என்று கூறுவோம். இந்தத் தமிழர்கள் அனைவரும் தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள்;, வன்முறைவாதிகள் என்றெல்லாம் உலகிற்கு எடுத்துக் காட்டுவோம் என்றவாறுதான் கூறிவந்துள்ளனர்.

நாங்களும் அவற்றைக் கண்டு கேட்டுப் பயந்து விட்டோம். எனவே ஒன்றில் இலங்கையை விட்டு வெளியேறி எமது மன உளைச்சல்களை வெளியிலிருந்து வெளிப்படுத்திக்கொண்டு வருகின்றோம். அங்கிருந்து உள்ளூர்வாசிகளுக்குப் பணம் தந்து உதவுகின்றோம். அல்லது உள்ளூரில் இருக்கும் எம்மவரோ மக்களிடம் ஒரு முகம் அரசாங்கத்திற்கு இன்னொரு முகம் காட்டுகின்றார்கள். எமது அடிப்படை அரசியல் கோரிக்கைகளை தேர்தல் விஞ்ஞாபனங்களில் உள்ளடக்குகின்றோம். ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அரசாங்கத்திற்கு வேறொரு முகம் காட்டுகின்றோம். ;நீங்கள் எதைத் தந்தாலும் நாம் பெற்றுக் கொள்வோம் ; என்ற தொனிப்பட அவர்களுடன் பேசுகின்றோம். ;நாங்கள் என்று கேட்போம். ஆனால் நீங்கள் தருவதைத் தாருங்கள் ; என்கின்றோம். அதற்குப் பிரதி உபகாரமாக அரசாங்கமும் தனது உதவிக் கரங்களை நீட்டுகின்றது. தனிப்பட்ட உதவிகளைப் பெற்றுவிட்டு உண்மையான, எமக்குத் தேவையான அரசியல் பேசாது வந்து விடுகின்றோம்.

இதைப் பார்த்ததும் சிங்கள மக்கள் என்ன நினைக்கின்றார்கள்? பாருங்கள்! இவர்கள் எவ்வளவு நல்லவர்கள்? நாம் சொல்வது போல் கேட்டு நடக்கின்றார்கள் என்று கூறுகின்றார்கள். எங்களைக் கொழும்பில் தற்போதைக்கு இருக்க விடுகின்றார்கள். ஆனால் தப்பித் தவறி எமது அபிலாஷகளை எமது அரசியல் எதிர்பார்ப்புக்களை வெளியிட்டோமானால் நாங்கள் அவர்களுக்குக் கொடூரமானவர்கள், தீவிரவாதிகள், பிரிவினைவாதிகள், தீயவர் ஆகிவிடுவோம். இவ்வாறான மிரட்டுதலைத்தான் நீங்கள் குறிப்பிட்டிருக்கின்றீர்கள். உண்மை நிலை அறியாமல் அவர்கள் பிதற்றுகின்றார்கள். அதைப்பார்த்து நீங்கள் பதறுகின்றீர்கள்.

இதிலிருந்து ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எமது கோரிக்கைகளை, மனக்கிடக்கைகளை வெளிப்படையாக சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூறாமல் எமக்குள் ஒன்று கூறி அவர்களுக்கு இன்னொன்று கூறி வந்ததால்த்தான் நியாயமான உரிமைகள் கோரும் ஒருவர் கூட அவர்களுக்கு நாட்டின் துரோகி ஆகின்றார். தீவிரவாதி ஆகின்றார். நாங்கள் முதலில் இருந்தே எமது கொள்கைகளுக்கு விஸ்வாசமாக நடந்து கொண்டிருந்தோமானால் உண்மையாக உரிமைகள் கோருபவரை சிங்கள மக்கள் இந்தளவுக்கு வெறுத்திருக்க மாட்டார்கள். சிங்கள மக்கள் சீற்றமடைய நாங்கள்தான்; காரணம். எங்கள் பயமே காரணம். இனி உங்கள் கேள்விக்கு வருவோம்.

உயிருக்கு ஆபத்து வரும் என்று பயப்படுகின்றீர்கள். உயிருக்கு ஆபத்து எப்பொழுதும் யாருக்கும் இருந்து கொண்டே இருக்கின்றது. வெள்ளத்தில் பாதிப்புற்றவர்கள் எத்தனை பேர்? விபத்துக்களினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? இடி மின்னலினால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? துரையப்பா விளையாட்டரங்கில் அண்மைய இடி மின்னலால் பாரிய கண்ணாடி ஒன்று வெடித்து விழுந்தது என்று எனக்கு நேற்றுக் காட்டினார்கள். ஆகவே உரிய நேரம் வரும்போது பலதும்   பெறுவன. உயிர் கூட தானாகவே பிரிந்து செல்லும். அதற்காக சொல்ல வேண்டியதை விடுத்து சிங்களவருக்கு ஏற்ற சொகுசான கருத்துக்களைக் கூறிக்கொண்டு இருந்தோமானால் நாம் தப்புவோம் என்று நினைப்பது தவறு. கட்டாயம் அவன் கொல்ல இருப்பவன் கொல்லத்தான் போகின்றான். சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டு சாவது மேலா அல்லது சொகுசு வார்த்தைகளைக் கூறிவிட்டு வெள்ளம் தலைக்கேறும் போது அதை மாற்றி உண்மையை உரைக்கும்போது நாம் உயிர்ப்பலியாவது மேலா? எமக்கென்று கடமைகள் உண்டு. அவற்றை நாம் சரியாகச் செய்வோம். உயிரைக் காலன் வந்து எடுக்கும் நேரம் எடுத்துச் செல்லட்டும். எந்த ஒரு அஹிம்சா மூர்த்திகூட கொல்லப்பட வேண்டும் என்று நியதியிருந்தால் அவரின் மரணம் அவ்வாறே நடக்கும். மகாத்மாகாந்தி இதற்கொரு உதாரணம்.

பாதுகாப்பைக் கோரிப் பெறுமாறு கேட்டுள்ளீர்கள். தற்போதும் எனக்குச் சட்டப்படி பாதுகாப்பு தரப்பட்டே வருகின்றது. தேவையெனில் உங்கள் கோரிக்கையைப் பரிசீலிக்கலாம். ஆனால் உங்கள் கேள்வியை மையமாக வைத்து இன்னுஞ் சில கருத்துக்களை வெளியிட விரும்புகின்றேன். முள்ளிவாய்க்காலில் நான் கூறியவற்றினாலும் அவ்வாறான ஒரு நிகழ்ச்சி நடந்ததாலும் ஏன் சில சிங்கள மக்கள் வெகுண்டெழுந்துள்ளார்கள்? பலகாரணங்களை நான் கூறுவேன்.

1. முன்னைய இராஜபக்ச அரசாங்கம் வெளிப்படையாக எம்மைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. வாய் திறந்தால் வன்முறை அல்லது சிறைவாசம் என்றிருந்தது. ஜனநாயக நாடுகளின் ஒத்துழைப்பால் உருவாகிய இந்த அரசாங்கம் எம்மை முன்போல் கட்டி வைக்க முடியாத நிலையில் இருக்கின்றது. எனக்கெதிராக முகப்பதிவில் எழுதிய ஒருவரைப்பற்றி எமது அலுவலர்கள் ஆராய்ந்து பார்த்தார்கள். காலியில் வசிக்கும் அவர் மகிந்த இராஜபக்சவின் நெருங்கிய ஆதரவாளர் என்பது தெரியவந்தது. அப்படியாயின் என்னைப் பற்றிக் கோபம் கொள்வோர் யாரெனில் முன்னர் எம்மை வாய்பேசா மடந்தையர் ஆக்கி வைத்திருந்தோரே அவர்கள் என்று அடையாளம் காணலாம். போரை முடிவுக்குக் கொண்டு வந்தவர்கள் தான்; அவர்கள். முள்ளிவாய்க்காலில் நடந்தவற்றை உலகம் அறியக்கூடாது என்று கூத்தாடுபவர்கள். உலகம் உண்மையை எந்தவிதப்பட்டும் அறிந்து விடக்கூடாது. ஆகவே கொலை மிரட்டலாலாவது எம்மைக் கட்டுப்படுத்த வேண்டும், வாயடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாய் உள்ளனர்.

2. இன்றைய நிலை வேறு முன்னர் இருந்த நிலை வேறு. உலகம் உண்மையை உணராது முன்னர் இருந்தது. அப்பாவிகள் கொல்லப்பட்டமை, இனப்படுகொலை போன்ற உண்மைகள் தற்போது சிங்கள மக்களால் உணரப்பட்டுள்ளன. சர்வதேசத்தாலும் உணரப்பட்டுள்ளன. புநநெஎய இதுவரையில் கொடுத்த காலக்கேடு விரைவில் முடிவுக்கு வரப்போகின்றது. அமெரிக்க ஸ்தானிகர் அதுல் கேசப் அவர்கள் தாம் செய்வதாக ஜெனிவாவில் வாக்குறுதி அளித்தனவற்றை இலங்கை கண்டிப்பாகச் செய்து முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இலங்கை அரசாங்கம் செய்வதறியாது தடுமாறுகின்றது. இந்த நேரத்தில் இவ்வாறான ஒரு நிகழ்வு தம்மைப் பாதிக்கும் என்று நினைத்து எம்மை அடக்க முயன்றிருக்கக்கூடும்.

3. இராணுவம் ஒரு புறம், அரசாங்கம் மறுபுறம் தமிழர்களுக்கு நன்மைகள் பெற்றுத் தரப்போகின்றோம் என்று கூறி வருகின்றன. தமிழர்களின் அடிப்படை உரிமைகளைக் கொடுப்போம் என்று எவரும் கூறவில்லை. சிங்களவர் கூறுவது போல் ;போணிக்கா ; (பொம்மைகள்) வேண்டித் தருவதாக வாக்களிக்கின்றார்களே ஒளிய 70 வருட பிரச்சனையைத் தீர்ப்பதாகக் கூறவில்லை. அந்தப் பிரச்சனைகளை நினைவு படுத்தினால்த்தான் கொலை மிரட்டல்கள் வருகின்றன. ஆகவேதான் எந்த ஒரு சிங்கள அரசாங்கமும் பாரிய நெருக்கடி இருந்தால் ஒளிய எமது அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்க முன்வராது என்று கூறி வருகின்றேன்.

4. நான் அடிப்படை என்று கூறும் போது எமது தனித்துவத்தைப் பாதுகாப்பதையே கூறி வருகின்றேன். வடகிழக்கு இணைப்பு வேண்டும் என்று கூறும் போது அங்கு தமிழ் மொழியே இதுகாறும் கோலொச்சி வந்தது. அது தொடர இணைப்பு அவசியம். எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக இதுவரை நடத்தி வந்த அரசாங்கம் எமது தனித்துவத்தை மதித்து சுயாட்சி வழங்க வேண்டும் என்பது இரண்டாவது அடிப்படைக் கோரிக்கை. தாயகம் என்பது அதனுள் அடங்கும். மூன்றாவதாக ஒற்றையாட்சிக்குக் கீழ் சிங்கள மேலாதிக்கம் தொடரும் என்பதால் சமஷ;டி அடிப்படையிலான அரசியல் யாப்பு கோரப்படுகின்றது.

5. சிங்கள மக்கள் மத்தியில் பல பிழையான செய்திகள் சென்ற 70 வருடங்களாக பரப்பப்பட்டு வந்துள்ளன. இந்த நாடு தொன்று தொட்டு சிங்களவர் வாழ்ந்து வந்த நாடு. தமிழர் சோழர் காலத்தில் கி.பி பத்தாம் நூற்றாண்டில்த்தான் வந்தார்கள். அவர்கள் கள்ளத் தோணிகள். அவர்களை இந்தியாவிற்கு அடித்துத் துரத்த வேண்டும். அண்மையில் வந்தவர்கள் தமக்கென ஒரு நாட்டைக் கேட்பது எவ்வளவு அயோக்கியத்தனம். இந்த உலகத்தில் எமக்கென இருப்பது இந்த ஒரு நாடே. அதையும் தமிழர் பங்கு போடப் பார்க்கின்றார்கள். விடமாட்டோம் என்கின்றார்கள் அப்பாவிச் சிங்களவர்கள்.

உண்மையை அவர்களுக்கு எடுத்துரைக்க யாரும் இல்லை. இலங்கையின் மூத்த குடிகள் தமிழரே. சிங்கள மொழி கி.பி 6ம் 7ம் நூற்றாண்டுகளிலே தான் வழக்கத்திற்கு வந்தது. அதற்கு முன்னர் வாழ்ந்தவர்களைச் சிங்களவர் என்று அழைக்க முடியாது. துட்டகைமுனு கூட சிங்களவனாக இருந்திருக்க முடியாது. DNA பரிசீலனைகள் இன்றைய சிங்களவர் ஆதித் திராவிடரே என்று கூறுகின்றன. தமிழர் பற்றிய உண்மையை அறிந்து கொண்டால் சிங்கள மக்களின் ஆர்ப்பாட்டங்கள் குறையக் கூடும். அல்லது ஏமாற்றத்தில் இன்னமும் உக்கிரமடையக்கூடும். எம்மைக் கொல்ல எத்தனிப்பவர்கள் காட்டு மிராண்டிகள் போல் நடந்து கொள்ளாமல் தமது தலைவர்களை எம்முடன் பேச அனுப்ப வேண்டும். நாம் எமது அடிப்படைகளை அவர்களுக்கு விளங்க வைப்போம். புரிந்துணர்வு அற்ற இன்றைய நிலையே இவ்வாறான பதட்டங்களுக்கு இடமளித்துள்ளது.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்