‘பலாத்காரத்துக்கு அர்த்தமென்ன என்று என் மகள் கேட்டுவிடுவாளோ என பயமாக இருக்கிறது’: கௌதம் கம்பீர்

நாட்டில் குழந்தைகள் மீதான பலாத்காரம் அதிகரித்துள்ளதற்கு மிகவும் வேதனை தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர், நாட்டில் நடக்கும் சம்பவங்களைப் பார்த்து, பலாத்காரம் என்றால் என்னப்பா என்று என் மகள் என்னிடம் கேட்டுவிடுவாளோ என பயமாக இருக்கிறது என்று வேதனை தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் முன்னால் கேப்டனான கௌதம் கம்பீர் ஆங்கில நாளேடு ஒன்றில் கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

”பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுவது அதிகரித்து வருவதை நாளேடுகளில் அது குறித்த செய்திகள் பார்க்கும் போது அச்சமாக இருக்கிறது. இதையெல்லாம் பார்த்துவிட்டு என் மகள் என்னிடம் பலாத்காரம் என்றால் என்று கேட்டுவிடுவாளோ என அஞ்சுகிறேன். 2 பெண் குழந்தைகளுக்கு தந்தையான நான் மிகவும் வேதனைப்படுகிறேன்.

நானும், என் மனைவியும், எனது குழந்தைகளுக்கு எது சரியான தொடுதல் (good touch), தவறான தொடுதல் (bad touch) குறித்து அறிவுறுத்தவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்கிறோம். இதை நினைக்கும் போது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது. வண்ண மீன்களாக பறந்து கொண்டு, மரங்களில் சாக்லேட்டுகள் காய்க்கின்றன என்று பேசிக்கொண்டு, பார்பி கேர்ள் பொம்மைக்கு உடை அணிவித்து வெகுளியாக என் மகள் சுற்றி வருகிறாள்.

பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுவது உடல்ரீதியான தாக்குதல் மட்டுமல்ல, அந்தக் குழந்தைகள் நம் மீது வைத்திருக்கும் நம்பிக்கையைச் சிதைக்கும் செயலாகும். இந்தக் கட்டுரையை நான் எழுதும் முன் குழந்தைகள் பலாத்காரம் குறித்த சில தரவுகளைப் படிக்க நேர்ந்தபோது, எலும்பில் உள்ள ரத்தம் உறையும் அளவுக்கு எனக்கு நடுக்கம் கொடுத்தது. ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையான எவரும் இது குறித்து தெரிந்து கொள்ளாமல் இருக்கக்கூடாது.

தேசிய குற்றஆவணக் காப்பகத்தின்படி, கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுவது 336 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 2016-ல் 19,765 பலாத்காரங்களும், 2015-ல் 10,854 பலாத்காரங்களும் நடந்துள்ளன.

நிதாரி, கதுவா, உன்னாவ், இந்தூர் என கணக்கில் இல்லாமல் பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்பட்ட பட்டியல் நீள்கிறது. இது தேசத்துக்கே வெட்கக் கேடு. இந்தச் செயல்களில் ஈடுபடும் மனிதர்கள், தீவிரவாதிகளைக் காட்டிலும் மோசமானவர்கள்.

12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மட்டுமல்ல, 13 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்தாலும் அவர்களுக்குத் தூக்கு தண்டனை வழங்க வேண்டும். பலாத்காரத்தில் வயதில் என்ன பகுப்பு?. பலாத்காரம் செய்தால், பலாத்காரமாகவே பார்க்கவேண்டும். கடந்த 2013-ம் ஆண்டு நீதிபதி ஜே.எஸ்வர்மா பலாத்காரக் குற்றங்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் தேவை என்று கூறினார். இன்றுவரை விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டனவா?.

ஐபிஎல் போட்டிகளில் சீர் லீடர்ஸ் ( சியர்ஸ் கேர்ள்ஸ்) எனப்படும் பெண்கள் நடனமாடுவது தேவையில்லை. ஆண்கள், சிறுவர்கள் முன் சீர் லீடர்ஸ் அரைகுறை ஆடையுடன் ஆடுவது அவசியமா?.

உண்மையில் நீங்கள் உங்கள் மார்பில் கைவைத்துச் சொல்லுங்கள், நாம் உண்மையாகவே பெண்களை, சிறுமிகளை மதிக்கிறோமோ, அல்லது வார்த்தைகள் உதட்டளவுக்குத்தானா?

இன்று இன்டர்நெட் என்பது ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கிறது. அதில் தவறான வழிக்குச் செல்லும் ஏராளமான பாலியல் வீடியோக்கள் இருக்கின்றன. இவற்றில் இருந்து நம் இளைஞர்களைக் காக்க வேண்டும், விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். வளர்ந்து வரும் இளைய சமூகத்தினருக்கு எதிர் பாலினமான பெண்களும், சிறுமிகளும் நுகர்வுப்பொருள் இல்லை என்பதை கற்றுக்கொடுத்து அமைதியான, ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க வேண்டும்.”

இவ்வாறு கம்பீர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.