ஆஸ்திரேலியாவில் இருந்து நிபா வைரஸ் சிகிச்சைக்கான மருத்து!

கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் தொற்றுநோய் ஏற்பட்ட வவ்வால்கள் மூலம் பிற விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவுவதாக தெரிய வந்துள்ளது. தமிழக-கேரள எல்லையில் கோவை மாவட்டம் இருப்பதால், நிபா வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மூச்சுவிட முடியாமை, குறைந்த இரத்த அழுத்தம், காய்ச்சல், தலைவலி, மயக்கம், குழப்பமான மனநிலை, கோமா போன்றவை வைரஸ் தாக்கத்திற்கான அறிகுறிகளாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழ்ந்து உள்ளனர். பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே மத்திய குழு கேரளாவில் சிகிச்சையில் ஈடுபட்டு உள்ளது. வைரஸ் பாதிப்புக்கு தேவையான உதவியை செய்யுமாறு ஆஸ்திரேலியாவிடம் இந்திய அரசு உதவியை கோரியது.
நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக பாதிக்கப்படும் மனிதர்கள் மற்றும் விலங்குகளை காப்பாற்ற எந்தஒரு மருந்தும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்றே தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவில் குதிரைகள் மூலம் பரவிய ஹென்றா வைரஸ் பாதிப்புக்கான தடுப்பு மருந்துக்களை பிரயோகிக்க வாய்ப்பிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் குதிரைகள் மூலம் பரவிய ஹென்றா வைரஸ் மூலம் அதிகமான உயிரிழப்பு நேரிட்டது, அங்கு 1994-ம் ஆண்டு இது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இதனை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியாவில் எம் 102.4 மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் அறிவுரையின்படி இந்த மருந்தை நிபாவிற்கு எதிராக பயன்படுத்தவும் உதவியை இந்திய அரசு நாடியது.
இப்போது நிபா வைரஸ் சிகிச்சைக்கான மருந்து கேரளா வந்து உள்ளது என தகவல் வெளியாகியது. ஆஸ்திரேலியாவின் தடுப்பு மருந்தால் நிபா மற்றும் ஹென்றா வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கமுடியும் என்று பார்க்கப்படுகிறது.