முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலளர் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் மக்கள் பயன்படுத்திய காணிகளை வேலி அடைக்கும் செயற்பாடு தொடர்பில் நேற்று பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராஜா நேரில் சென்று பார்வையிட்டார்.
குறித்த பகுதியில் இடப்பெயர்வுக்கு முன்னர் மக்கள் வசித்து வந்த நிலையில் இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் பின்னர் பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கமைய குறித்த காணி விடுவிக்கப்பட்டிருந்ததாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் ஏக்கர் பரப்பளவு காணியை அங்கு அமைந்துள்ள இந்து ஆலயம் ஒன்றுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த காணியை படையினர் வேலி அமைத்து அடைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்காந்தராஜா குறித்த பகுதிக்கு சென்றிருந்தார். இதன்போது பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகளும் அங்கு சென்று நிலைமையை விளங்கப்படுத்தினர்.
தொடர்ந்து குறித்த குழுவினர் இராணுவ முகாமின் அதிகாரியை சந்திப்பதற்காக அங்கு சென்றனர். இதன்போது குறித்த முகாமின் பொறுப்பதிகாரி இல்லாமையால் அங்கு பதில் அதிகாரியாக இருந்தவருடன் உரையாடினார்கள். இருப்பினும் எவ்வித முடிவுகளும் எட்டப்படவில்லை.
தொடர்ந்து ஊடங்களிறகு கருத்து தெரிவித்த பிரதேச மக்கள்
குறித்த பகுதியில் இடப்பெயர்வுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்து வந்ததாகவும் பின்னர் இராணுவத்தினர் குறித்த பகுதியை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிலையில் பிரதேச செயலாளரின் கோரிக்கைக்கமைய காணி விடுவிக்கப்பட்டதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில்
சாந்தி சிறிஸ்காந்தராஜா குறிப்பிடுகையில்
சம்பவம் தொடர்பில் தான் நேரடியாக இன்று பார்வையிட்டதாகவும் மக்கள் வாழ்ந்த பகுதியில் இராணுவம் இவ்வாறு வேலி அடைப்பது தொடர்பில் தாம் இராணுவத்தினரிடம் கலந்துரையாட சென்ற போதிலும் பொறுப்பான அதிகாரி அங்கு இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டார். பதில் அதிகாரியிடம் கலந்துரையாடியபோது
குறித்த பகுதியில் காணப்படும் தமது தோட்டத்தினை கால்நடைகள் வந்து உண்பதால் தாம் வேலி அடைக்க நேரிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இராணுவத்தினரால் விவசாயம் செய்வது தொடர்பி்ல் தொடர்ச்சியான விமர்சனங்கள் காணப்புடுகின்றமை தொடர்பில் அவரிடம் வினவியபோது இராணுவத்தினர் தாம் இருக்கும் இடங்களில் மாத்திரமல்ல பல விவசாய பண்ணைகள் உள்ளிட்ட பகுதிகளை ஆக்கிரமித்து விவசாய செய்கைகளில் ஈடுபடுவது ஏற்புடையதல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.