பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்புகிறாள் அந்தச் சிறுமி. பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் அவளிடம் ஆசை வார்த்தைப் பேசிட, பசியாற்றிட வீட்டில் யாருமில்லை. சிறுமியின் அம்மாவுக்கும் அப்பாவுக்கு வீடு விட்டால் அலுவலகம், அலுவலகம் விட்டால் வீடு. நின்று பேசக்கூட நேரம் இல்லாத கார்ப்பரேட் அடிமைகள். வீட்டோடு தங்கியிருக்கும் பணிப்பெண் தன் ஸ்மார்ட் கைபேசிக்கு கரிசனம் காட்டுகிறாள்.
இரவில் வீடு திரும்பும் பெற்றோருக்காக மாலை வேளையிலிருந்து காத்திருக்கிறாள் அந்தப் பிஞ்சு சிறகு. இடைப்பட்ட வேளையில் ஓவியம் தீட்டுகிறாள். அந்த ஓவியத்தை தன் பெற்றோரிடம் காட்டுவதற்காக வழி மேல் விழி வைத்திருக்கிறாள். போனில் பேசியபடி டென்ஷனுடன் வீடு திரும்புகிறார் சிறுமியின் அப்பா. ஆசையாக ஓடி வரும் சிறுமி, தன் அப்பாவிடம் ஓவியத்தைக் காட்டுகிறாள். கையில் வாங்கிப் பார்க்கக்கூட நேரமில்லாத அப்பா, அவளை அலட்சியமாகப் பார்த்துவிட்டு போனில் மூழ்குகிறார்.
காத்திருந்து வெறுத்துப்போகும் சிறுமி, அங்கிருந்து விலகிச் சென்று தன்னுடைய அம்மாவின் வரவுக்காகக் காத்திருக்கிறாள். அம்மா வந்தவுடன் அவளது சிறகுகள் பாந்தமாய் வருடிக்கொடுக்கப்படும் என்று எண்ணினால் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறார் அந்தத் தாய். அம்மாவிடம் ஓவியத்தைக் காட்டுகிறாள். அப்பா செய்ததுபோலவே அம்மாவும் லேப்டாப்பில் மூழ்குகிறார். வீட்டிலும் அலுவலக வேலையின் நீட்சியே ஆட்சி செய்கிறது.
மனம் உடையும் அந்தச் சிறுமியிடம் அழுகைப் பீறிடுகிறது. கோபத்தில் அறைக்குள் செல்லும் அவள், தான் வரைந்த ஓவியத்தை பென்சிலால் குத்திக் கிழிக்கிறாள். ஆற்றாமையால் அழுதபடி தூங்குகிறாள். பொழுது விடிந்ததும் அப்பாவையும் அம்மாவையும் பார்க்கிறாள். அதே பரபரப்புடன் அலுவலகத்துக்குக் கிளம்புகிறார்கள். அன்பாகப் பேச, ஆசையாகச் சாப்பாடு ஊட்ட, படிப்புச் சொல்லித் தர என மனதில் சிறகடிக்கும் அவளின் எதிர்பார்ப்புகள் கூட்டிலிருந்து தவறிவிழுந்த குஞ்சுப் பறவையின் முனகலாய் இருள்வதும் விடிவதுமாய் கரைகிறது.
இந்த சமயத்தில் அவளுடைய வீட்டின் ஜன்னலோரம் இருக்கும் மரக் கிளையில் தாய்ப் பறவை தன் குஞ்சுப் பறவைக்காக உணவு தேடி வந்து வாயில் ஊட்டும் காட்சியைக் காண்கிறாள். மனிதம் உணர்த்தாத தாய்மையை அந்தப் பறவைத் தாயின் செயல் உணரவைக்கிறது. வருத்தம் உடுத்தியிருந்த அவள் உதட்டோரத்தில் புன்னகை படர அந்த சிறுமி தன் மனச்சிறகுகளை உதறி எழுந்து உற்சாகத்துடன் விளையாடச் செல்கிறாள்.
‘சிறகு’ என்ற குறும்படத்தில் விரியும் இந்தக் காட்சிகள் புதியவை அல்லதான். ஆனால், மூன்றரை நிமிடத்தில் சுருங்கச் சொல்லி வசனம் ஏதுமின்றி உணர்வுகளால் விளங்க வைப்பதில் ஈர்த்துவிடுகிறார் இதை இயக்கியிருக்கும் சரவணன் வடிவேல்.
அடுக்குமாடிகளில் குழந்தைகளின் வாழும் குழந்தைகளின் உலகம், பணம் மட்டுமே வாழ்க்கை என்றாகிவிட்ட வாழ்க்கையில் குழந்தைகளை எப்படி உதாசீனப்படுத்துகிறோம், அம்மா, அப்பா என இருவருமே வேலைக்குச் செல்லும் வீடுகளில் பெரும்பாலும் குழந்தையின் எதிர்பார்ப்புகள் எப்படியெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கப்படுகின்றன, ஒரு தாய்ப் பறவை தன் குஞ்சுக்காக செலவழிக்கும் நேரத்தைக்கூட ஒரு குழந்தையிடம் பெற்றோர் காட்ட தவறுவதை எல்லாம் சின்னச் சின்ன ஷாட்களின் வழியே விமர்சனம் இன்றி மவுனமாகச் சுட்டிச் செல்கிறது இந்த ‘சிறகு’.