லிபியாவை போல வடகொரியாவின் முடிவு இருக்கும் என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் குறிப்பிட்டிருந்த நிலையில், அவரை முட்டாள் என வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது.
இரு துருவங்களாக இருக்கும் வடகொரியா – அமெரிக்கா இடையே உள்ள பகை குறைந்த நிலையில், டிரம்ப் – கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் அடுத்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச திட்டமிட்டிருந்தனர். வடகொரியா கைவசம் உள்ள அனைத்து அணு ஆயுதங்களையும் அழிக்க வேண்டும் என அமெரிக்க நிபந்தனை விதித்தது.
இதனை அடுத்து, நிபந்தனைகளை தளர்த்தாவிட்டால் சிங்கப்பூர் பேச்சுவார்த்தையில் இருந்து பின்வாங்கப்போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்தது. இதனால், சிங்கப்பூர் பேச்சுவார்த்தை நடப்பது உறுதியான ஒன்றாக இல்லை. இது தொடர்பாக அடுத்தவாரம் முடிவெடுக்கப்படும் என டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த சர்ச்சை ஒய்வதற்குளாக லிபியாவை போல வடகொரியா முடிவை தேடிக்கொள்ளும் என அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறியிருந்தார்.
இதற்கு வடகொரியா கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. ‘அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா ஒன்றும் கெஞ்சவில்லை. லிபியாவையும் வடகொரியாவையும் ஒப்பிடுவதன் மூலம் அவர் முட்டாள்தனமான டம்மி அரசியல்வாதி என்பதை காட்டுகிறார். லிபியாவில் எந்த அணு ஆயுதங்களும் இல்லை. ஆனால், வடகொரியா அப்படி இல்லை. நாங்கள் அணு ஆயுதம் வைத்துள்ள நாடு’ என வடகொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.