முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைப் பற்றி பலரும் பலவாறாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்றுடன் விமர்சனங்களை விட்டுவிடுங்கள். சேறுபூசல்களை தவிர்த்திடுங்கள். முள்ளிவாய்க்கால் எனும் சொல்லை கேவலப்படுத்தாதீர்கள். இருந்துகொண்டு யாரும் எழுதலாம், இறங்கிப் பாருங்கள்அருமை புரியும்.
“முள்ளிவாய்க்கால்” ஈடுகொடுக்கமுடியாத இழப்புக்களையும், சொல்லொணாத் துயரங்களையும், ஆறாத வலிகளையும் எஞ்சிய எம்மவர்களிடம் விட்டுச் சென்றிருக்கின்றது. இந்நிகழ்வினை விமர்சித்து இழிவுபடுத்தாதீர்கள்.
சரியாயின் தட்டிக்கொடுங்கள், தவறென்றால் அதற்கான முறையில் எடுத்துக்கூறி சரிசெய்ய வழிவகை செய்யுங்கள்.
கடந்தகால நினைவேந்தல்களைப்போல அல்லாது, அனைவரையும் ஒன்றினைத்து இம்முறை ஒரே இடத்தில் நினைவேந்தலை நடாத்தியமை தமிழராகிய நாமனைவரும் பெருமைப்படவேண்டிய விடயம்!
மாணவர்களுக்கும் விடுதலைப் போராட்டத்திற்கும் நெருங்கியதொடர்புண்டு என்பதை யாவரும் கருத்தில் கொள்ளவேண்டும்.
முதலாவதாக ஒரு விடயத்தை அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும். பலதரப்பு முரண்பாடுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது அனைத்து அமைப்புக்களையும் ஓர் சந்திப்பிற்காக அழைத்திருந்தனர்.
அந்தச்சந்திப்பில் கலந்துகொன்ட அமைப்புக்களின் சார்பில் ஒவ்வொருவரை தெரிவு செய்து, முதலமைச்சரை சந்திக்கச் சென்றிருந்தனர். அங்கேதான் இறுதி முடிவு எட்டப்பட்டது
இங்கே முகப்புத்தகத்தில் போராடிக் கொண்டிருக்கும் அக்கறையுள்ளவர்களாக காட்டிக்கொண்டு விடயமறியா சிலர், முகப்புத்தகத்தில் எழுத முன்னர் அந்த சந்திப்பில் கலந்துகொண்டு தமது ஆலோசனைகள், கருத்துக்களை கூறியிருக்கலாம்.
அடுத்தவிடயம் நிகழ்வு ஒழுங்கமைப்பு
நிகழ்வின் ஒழுங்கமைப்பானது சில தரப்புக்களிடம் பகிர்ந்தளிக்கப்பட்டது. அதாவது நிகழ்வுப்பகுதிகளில் பந்தல் அமைப்பு மற்றும் ஒலி அமைப்பினை வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் பொறுப்பேற்றிருந்தார்.
முதலமைச்சர் பிரகடண உரை நிகழ்த்துவது என முதலே தெரிந்திருந்தும், பொதுச்சுடர் ஏற்றும் பகுதிக்கு ஒலிவாங்கி ஒழுங்கமைக்கப்படவில்லை. இறுதியில் மாணவர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட வாகனத்தில் கட்டப்பட்ட ஒலிபெருக்கியூடாகவே முதலமைச்சர் உரை நிகழ்த்தப்பட்டது.
ஆனால் பழிசுமத்தப்பட்டது மாணவர்களால் ஒலி அமைப்பு ஒழுங்காக அமைக்கப்படவில்லை என்று!
நினைவேந்தல் பகுதியில் சிவப்பு மஞ்சள் கொடி அலங்கரிப்பினை ஜனநாயகப் போராளிகள் கட்சியினர் பொறுப்பேற்றனர்.
சுடர்ப்பந்தங்களின் பொறுப்பினை ஜனநாயகப்போராளிகளும், தேராவில் துயிலுமில்லக்குழுவினரும், பொறுப்பேற்றிருந்தனர். எனினும் தேராவில் துயிலுமில்லக்குழுவினர் பந்தங்களை கொண்டுவந்து வைத்தது மட்டும்தான் அடுத்தநாள் காலை மாணவர்கள்தான் எண்ணை தோய்த்து பந்தங்களை நாட்டியிருந்தனர்
நிகழ்ச்சித்தொகுப்பினை தாம் ஒழுங்குபடுத்துவதாக ஐனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் துளசி அண்ணா முதல்நாள் கூறியிருந்தார்.
ஆனாலும் நிகழ்வன்று அவரால் ஒழுங்கமைக்கப்பட்ட அறிவிப்பாளர் எந்தவித ஆயத்தமுமின்றி நிகழ்ச்சி நிரலுமின்றி வந்திருந்தார்.
எனினும் மாணவர்களிடம் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் கையிலிருந்தது. ஆனால் முதலமைச்சர் நிகழ்ச்சித்தொகுப்பிற்கு தனது செயலாளர் ஒருவரை நியமித்திருந்தார். அவரிடம் சென்று மாணவர்கள் தயாரித்த நிகழ்ச்சி நிரலை வழங்கியபோது, அவர் ஏற்கனவே முதலமச்சரால் நிகழ்ச்சிநிரல் தரப்பட்டிருக்கிறது என கூறினார்.
தொடர்ந்து அவரே நிகழ்ச்சித் தொகுப்பினை வழங்கினார். அதன்பின்னரும் ஜனநாயப்போராளிகள் கட்சியால் ஒழுங்கமைக்கப்பட்ட தொகுப்பாளர் தொகுப்பினை மேற்கொள்ள அடம்பிடித்தார். அப்போது மாணவர் ஒன்றிய தலைவர் அவரிடம் ஒலிவாங்கியை வாங்கி முதலமைச்சரின் செயலாளரிடம் கொடுத்தார்.
மோட்டார் வாகனப்பேரணியானது அனைத்து இளைஞர்களையும் ஒன்றிணைக்கும் முகமாகவும், சர்வதேசத்திற்கும், தென்னிலங்கைக்கும் ஒரு செய்தியை அறிவிப்பதாய் அமையவேண்டும் என ஒழுங்கமைக்கபட்டது.
நேரத்தினை கருததிற்கொண்டு, சில இடங்களில் வேகமாக சென்றிருந்தனர். அதனை சரியென நான் நியாயப்படுத்தவில்லை எனினும் நாம் எதிர்பார்த்தை போல இன்று சிங்கள, ஆங்கில ஊடகங்களில் பேரணிபற்றி செய்திகள் வந்திருந்ததை காணக்கூடியதாக இருந்தது.
கறுத்த உடையை பலரும் விமர்சித்திருந்தனர்.
நிகழ்வின் முதல்நாள் துளசிஅண்ணா, காக்கா அண்ணா, முன்னாள் போராளிகள்சிலர் மற்றும் மாணவர் ஒன்றிய செயலாளர் ஆகியோர் நிகழ்வு ஒழுங்கமைப்புபற்றி கலந்துரையாடியபோது துளசிஅண்ணா கூறினார் பொதுச்சுடருக்கு அண்மையில் ஒரு சிலர் நிறுத்தப்படவேண்டும் என கூறினார்.
அங்கே நிறுத்தப்பட காரணம் என்னவென்றால் கடந்தமுறை சிலஅரசியல்வாதிகளுக்கு செருப்பால் எறிந்தும், மண்அள்ளி வீசியும் பொதுமக்கள் நச்சரித்திருந்தனர் எனவே இம்முறையும் முதலமைச்சருக்கோ வேறு யாரும் அங்கே பிரவேசிக்கும்போதோ அசம்பாவிதங்கள் நடைபெறமாலிருப்பதற்காகவே!
பொதுச்சுடரைச்சுற்றி நிறுத்துவதாக கருத்தினை துளசி அண்ணா அவர்களே கொண்டுவந்திருந்தார் எனினும் இங்கே விமர்சிக்கப்படுவது மாணவர்களை!
சுடரினை தாங்கிய வாகனம் ஒழுங்கமைப்பாளர்களிடம் அனுமதி கேட்காமல் உள்ளே நுழைந்து தான் அகவணக்கம் குழப்பமடைந்தது அகவணக்கத்திற்கு என ஒரு இசையும் உருவாக்கி இருந்தோம் இவர்களால் குழப்பமடைந்த்து.
அத்துடன் எம்மை அவர்களால் கட்டுப்படுத்த முடியாத ஒரு சந்தர்ப்பத்தில் விழா ஒழுங்கமைப்பாளர்கள் என சொல்லி கொண்டு இராணுவ புலனாய்வு நால்வரை உள்ளே விட்டனர். நிகழ்வு குழம்புமோ என நாம் சரியாக பயந்து போனோம் முள்ளிவாய்கக்கால் மாணவன் ஒருவர்தான் புலனாய்வாளர்களை அடையாளம் கண்டார்!
அடுத்ததாக மாணவர்கள் மதுஅருந்தினர், தங்கிய வீட்டில் மதுபானப்போத்தல்கள் காணப்பட்டது என சில இணைய ஊடகங்களில் செய்தி வந்தது. அந்த வீட்டில் நானும் நின்றிருந்தேன் மாணவர்கள் மற்றும் தூரத்திலிருந்து வந்திருந்த முன்னாள் இருமாவட்டபொறுப்பாளராக இருந்த ஒருவரும் தங்கியிருந்தார்.
சில மதுபான போத்தல்கள் வீட்டின்பின்புறம் காணப்பட்டது அதனை வெளியிலுருந்து வந்த ஒருநபர் புகைப்படம் எடுத்தார் அதனை முன்னாள் பொறுப்பாளர் அவர்களும் பார்த்திருந்தார்.
வீட்டு உரிமையாளரை வினாவியபோது
அவ்வீட்டில் கட்டுமானவேலைகள் அண்மையில் நடைபெற்றபோது வேலையாட்களால் அருந்தப்பட்ட போத்தல்கள் என அவர் கூறினார்.
இவ்வாறு ஒவ்வொரு வகையிலும் மாணவர்களை குற்றம்சாட்டிக் கொண்டிருப்பவர்கள் சற்றுச்சிந்தியுங்கள்.
எவ்வளவோ முயற்சிகளாலும் அயராத உழைப்பினாலும் கடந்தகாலங்களை விட சிறப்பாக அனைத்துத்தரப்பினரையும் ஒன்றினைத்து நடாத்தி முடித்தமையை பலரும் வியந்து பேசிக்கொள்கிறார்கள்.
மாகாண சபை உறுப்பினர்.ரவிகரன் மற்றும் ஐனநாயகப்போராளிகள் கட்சியினர் மாணவர்களுக்கு தமது பங்களிப்பினை வழங்கினார்கள் என்பது சொல்லப்படவேண்டியதே!
ஆனாலும் ஒருசிலர் தவறுகளை சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கிறார்கள் தயவு செய்து சிறு தவறுகளை அவர்களுக்கு எடுத்துக்கூறி திருத்திக்கொள்ளலாம். அதைவிடுத்து பொதுவெளியில் விமர்சித்து எம்மவர்களுக்குள்ளேயே பிரிவினையை ஏற்படுத்தாதீர்கள்.ஒற்றுமையாக நடாத்தி முடித்தமை பாராட்டப்படவேண்டியவிடயம். மாணவர்களுக்கு பக்கபலமாக இருந்து வழிகாட்டவேண்டிய கடப்பாடு உங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு என்பதை கருத்தில்கொள்ளுங்கள்.
ஒற்றுமையே பலம்!!
மணிவண்னன் தனுசன்
உலகத்தமிழ்மாணவர் ஒன்றியம்.