104 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை!

புரட்சி ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்க்க முயன்ற 104 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து துருக்கி  நீதிமன்றம் அளித்துள்ளது.

துருக்கி நாட்டில் தயீப் எர்டோகன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 15-ந் திகதி அவரது ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் சிலர் புரட்சியில் ஈடுபட்டனர். இதற்கு போலீசாரின் ஒரு பிரிவினரும், அரசு ஊழியர்களும் உதவி செய்தனர்.

ஆனால், இந்த புரட்சி சில மணி நேரங்களில் முறியடிக்கப்பட்டது. இதனால் ஆட்சி தப்பியது.

இந்த புரட்சியில் அதிபருக்கு எதிராக வெளிநாடுகளில் இருந்து செயல்படும் சில தலைவர்கள் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அவர்களது தூண்டுதலின் அடிப்படையில் ராணுவ வீரர்கள் புரட்சியில் ஈடுபட்டனர்.

அந்த புரட்சியின் போது நடந்த கலவரத்தில் 260 பேர் உயிர் இழந்தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

புரட்சியில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில், ராணுவ வீரர்கள், போலீசார், அரசு ஊழியர்கள், புரட்சிக்கு உதவிய பொதுமக்கள் என 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். 1 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

புரட்சிக்கு காரணமாக இருந்த நபர்கள் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இதில், புகார் கூறப்பட்ட 280 ராணுவ வீரர்கள் மீதான விசாரணை தனியாக நடந்தது. இதை விசாரித்த நீதிபதி 104 வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். 21 பேருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனையும், 31 பேருக்கு 7-ல் இருந்து 10 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதிக்கப்பட்டன. பலர் விடுவிக்கப்பட்டனர்.

புரட்சி தொடர்பான இன்னும் பல வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.