‘ஹலோ.. சொல்லுங்க’ !-கூகுள்

கூகுள் அசிஸ்டெண்ட் செயலி கடந்த 2016ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் வகையிலும் வெளியிடப்பட்டது. ஆனால் கூகுள் நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு இந்த செயலி பிரபல அடையவில்லை.

ஏனெனில் இந்த செயலியை பயன்படுத்தும் போதெல்லாம் ஒகே கூகுள் மற்றும் ஹே கூகுள் என்ற வார்த்தைகளை கூற வேண்டும்.

இதுபோன்ற சில காரணங்களால் கூகுள் அசிஸ்டெண்ட் செயலிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பு இல்லாமல் போனது. அதன் பயன்பாட்டாளர்களும் குறைந்து கொண்டே வந்தனர்.

இந்நிலையில் கூகுள் அசிஸ்டெண்ட் செயலியை பிரபலமடையச் செய்யும் வகையிலும், வாடிக்கையாளர்களை கவரும் வகையிலும் அதில் சில அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த அப்டேட்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்த கணினி மென்பொருள் மாநாட்டில் நடைபெற்றது. இந்த அப்டேட்களை விளக்கும் வீடியோ ஒன்றை அப்போது கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வெளியிட்டார்.

இந்த புதிய அப்டேட்களின் படி செயலியை இயங்கச் செய்ய ஒரு முறை மட்டும் ஓகே கூகுள் என்று கூறினால் போதும். இதன்மூலம் நமக்காக கூகுள் அசிஸ்டெண்ட் பிறரிடம் பேசும். இது சுந்தர் பிச்சை வெளியிட்ட அந்த வீடியோவில் நிரூபித்துக் காண்பிக்கப்பட்டது. அந்த வீடியோவில் கூகுள் அசிஸ்டெண்ட் மூலம் சலூன் கடை ஒன்றிற்கு போன் செய்து முன்பதிவு பெறப்பட்டது. அத்துடன் ஒரு மனிதர் பேசுவதைப் போலவே கூகுள் அசிஸ்டெண்ட் வார்த்தைகளையும், அர்த்தங்களையும் உணர்ந்து அதற்கேற்ப பேசியதையும் காண முடிந்தது. இது காண்போரை கவரும் வண்ணம் இருந்தது. இந்த செயலி அப்டேட்ஸ் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.