அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரும் முயற்சியில் ஈடுபட்ட சுமார் 2000 அகதிகள் மனுஸ் மற்றும் நவுருவில் உள்ள தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் படகு வழியாக நுழைந்த இந்த அகதிகள், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
இந்த தடுப்புக் காலம் எந்தவித வரையறைமின்றி வைக்கப்பட்டுள்ளது என்ற விமர்சனங்களும் தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் பற்றி வரும் ஜுலை மாதம் நடக்கவிருக்கும் தொழிலாளர் கட்சியின் தேசிய மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் அக்கட்சியின் முதற்கட்ட வரைவில், தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த அவுஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷார்டன் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் தஞ்சம் கோரியவர்களுக்கான தடுப்புக்காவல் 90 நாட்களுக்கு மேல் இருக்காது எனக் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான கால எல்லைக்கு ஆதரவு வழங்குவது ஆட்கடத்தல்காரர்களுக்கு மீண்டும் வரவேற்பு கம்பளத்தை விரிக்கும் என அவுஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷார்டனின் பதில் அதனை நிராகரிக்கும் விதமாக அமைந்துள்ளது.
மீண்டும் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் வருவதை அனுமதிக்கவோ அல்லது ஆட்கடத்தல்காரர்கள் மீண்டும் தங்கள் வேலையில் ஈடுபடவோ எங்கள் கட்சி அனுமதிக்காது என எதிர்க்கட்சித் தலைவர் பில் ஷார்டன் கூறியுள்ளார்.
அதேவேளை அகதிகளை காலவரையின்றி தடுப்பில் வைத்திருக்காமல் இருப்பதை உறுதிச்செய்ய டர்ன்புல் அரசாங்கம் கடுமையாக உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிலுள்ள தடுப்பு முகாம்களில் இலங்கை, ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், சோமாலியா, ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர்.
அவுஸ்திரேலியா – அமெரிக்கா அகதிகள் மீள்குடியேற்ற ஒப்பந்தத்தைத் தவிர அகதிகள் தொடர்பில் எந்தவொரு உறுதியான அணுகுமுறையையும் அவுஸ்திரேலியா அரசிடம் இல்லாத நிலை உள்ளது.
இதுவொருபுறம் இருக்க இன்னும் சில மாதங்களில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் அகதிகள் பிரச்சனையும் முக்கிய அரசியல் விவகாரமாக மாறுமென தெரிவிக்கப்படுகிறது.